Monday 10 March 2008

கேப்டன் தந்த அதிர்ச்சி அல்லது பேருந்தில் பார்த்த படங்கள் (1)

நான் திரைப்படங்கள் பார்ப்பது அபூர்வம். பேருந்துப் பயணங்களின் போது (சூழ்நிலைக் கைதியாக!) பார்த்த சில படங்கள் அல்லது அவற்றில் சில காட்சிகள் நினைவில் இருக்கின்றன. அப்படிச் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

கேப்டன் விஷயத்துக்குக் கடைசியாக வருகிறேன். முதலில் ஒரு விஜய் படம். இதை நான் பார்த்தது திண்டுக்கல்லிலிருந்து மதுரை செல்லும்போது. திண்டுக்கல் - மதுரை இடையே பயண நேரமே ஒன்றரை மணி நேரம்தான். பேருந்து கிளம்ப பத்து நிமிடங்கள் இருக்கும்போது படத்தைப் போடுவார்கள். ஆக, சரியாக உச்சகட்டம் வரும்போது சேரவேண்டிய இடம் வந்துவிடும். ஆனால் எல்லா வண்டிகளிலும், அரசு வண்டிகள் உட்பட படத்தைச் சகித்துத்தான் ஆக வேண்டும்.

விஜய் படத்துக்கு வருகிறேன். தலைப்பு தெரியவில்லை. விஜய், பூபதி என்ற இளைஞனாக வருகிறார். கதாநாயகி ப்ரியாவாக ஸ்னேகா. பூபதியின் அப்பா மணி (மணிவண்ணன்). அப்பாவும் பிள்ளையும் நண்பர்கள் போலப் பழகுகிறார்களாம். பூபதி, தன் அப்பாவை 'மணி' என்று பெயர் சொல்லியே அழைக்கிறார்! ப்ரியாவும், பள்ளியில் படிக்கும் அவர் தங்கையும் பூபதி வீட்டில் வந்து தங்கியிருக்கிறார்கள். மணியின் நண்பர்களான ப்ரியாவின் பெற்றோர் வெளிநாடு சென்றிருக்கின்றனர். பூபதி பொறியியலோ என்னவோ படிக்கிறார்.

அவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கிறது. ஆனால் தன் அப்பாவை விட்டுவிட்டுப் போக விரும்பாமல் அதை ஏற்க மறுக்கிறார். ப்ரியா பூபதியை விரும்புகிறார். பூபதி அதை ஏற்காமல் இருக்கிறார்.

பெண்களுக்குத் துணையாக ஊட்டிக்கு ஒரு கல்யாணத்திற்குச் செல்கிறார் பூபதி. அங்கு இரவு தலையனையும் கையுமாக படுக்க இடமில்லாமல் அல்லாடும் போது, எதிர்ப்பட்ட இளைஞரிடம், 'படுக்க இடம் கிடைக்கலை பிரதர்' என்று சொல்ல, அவர், பெண் வீட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்துகொண்டு 'எங்க பார்ட்டியில நீங்களும் கலந்துக்குங்க' எண்று சொல்லி அழைத்துச்சென்று தண்ணியடிக்க வைக்கிறார். தண்ணி அடிக்க வைத்துவிட்டுப் பெண்ணைப் பற்றி விசாரிப்பது நோக்கமாம்! பூபதியும் தண்ணி போட்டுவிட்டு, கல்யாணம் நடக்க இருக்கும் பெண்ணுக்குத் தான் எப்பவோ காதல் கடிதம் கொடுத்த விஷயத்தைச் சொல்லிவிடுகிறார்.
படத்தில் இப்படி ஒரு வழியாகக் கதை நகர ஆரம்பிக்கிற இடத்தில் ஊர் வந்துவிட்டது! மீதிக்கதையும் தலைப்பும் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

இப்படத்தில் ஓரிரு காட்சிகளை ரசிக்க முடிந்தது: ஒரு தடவை ப்ரியாவும் பூபதியும் யாரையோ வழியனுப்ப புகைவண்டி நிலையம் போகிறார்கள். ப்ரியா வேண்டுமென்றே இருவருடைய நடைமேடைச் சீட்டுக்களுடன் நடையைக்கட்டி விடுகிறார். பூபதி கேட் எக்ஸாமினர் (மதன் பாப்) இடம் மாட்டி, மன்றாடி, கடைசியியில் அவருக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு வெளியில் வருகிறார். அப்பொழுது எதிரில் வருபவரிடம், 'ஏம்பா ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிட்டயா? இப்பல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்க' என்று கூற, அந்த நபர், 'அடப்போய்யா. நான் ட்ரெயின் டிக்கெட்டே வாங்கினதில்ல' என்று சாவதானமாகச் சொல்ல, 'இவனையெல்லாம் விட்டுடுங்க. என்னப் பிடிங்க' என்று பூபதி புலம்புவது ரசிக்கும் படியான காட்சி.

இன்னொரு முறை ஹோட்டலில் சாப்பிடும் போது பூபதியின் மேல் ப்ரியா (கோபத்தில்) சாம்பாரைக் கொட்டிவிடுகிறார். பூபதி வெயிட்டரிடம் பணம் கொடுத்து 'போய் டிரஸ் வாங்கிட்டு வாங்க' என்று சொல்ல அவர் 'என்ன சைஸ்' என்கிறார். பூபதி 'ஃப்ரீ சைஸ்' என்று பதில் சொல்கிறார். வெயிட்டர் மீண்டும் 'என்ன கலர்' என்று கேட்க, பூபதி, 'யோவ், போய்யா மொதல்ல!' என்று விரட்டிவிடுகிறார். பிறகு பூபதி ஆட்டோவில் வந்து 'ஸ்பைடர்மேன்' உடையோடு இறங்குவது நல்ல நகைச்சுவை!

அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸில் DTS ஒலி அமைப்பை உண்மையாகவே நன்றாக அமைத்திருந்தார்கள்.

இப்ப கேப்டன் படத்துக்கு வருவோம். வெற்றிவேல் ஐயா (விஜயகாந்த்) தன் கிராமத்து மக்களை ரொம்ப அக்கரையாகப் பரிபாலனம் செய்து வருகிறார். அந்தக் கிராமத்தில் என்ன விருந்து என்றாலும் வெற்றிவேலுக்குத்தான் பந்தியில் முதல் இலை. ஆனால் அவர் சாப்பிட மாட்டார்! அதற்கு என்னவோ ஃப்ளாஷ் பேக் காட்டினார்கள். மறந்துவிட்டது.

போக்குவரத்து வசதி சரியில்லாத அந்தக் கிராமத்தில் ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி எடுக்கிறது. மருத்துவமனை வெகு தூரம். ஆனாலும் கேப்டன் இருக்கப் பயமேன்? தன் இரட்டை மாட்டு வண்டியைக் கொண்டுவந்து, பெண்ணையும் துணைக்கு ஒரு வயதான அம்மாவையும் 'ஏறிக்கங்கம்மா' என்கிறார். எல்லோரும் வெற்றிவேலை வாழ்த்தி, வண்டியில் அவர்களை அனுப்பி வைக்கிறார்கள்...வெற்றிவேல், வண்டியை விரட்டு விரட்டென்று விரட்டுகிறார். அந்த அம்மாள் பயந்து, 'கொஞ்சம் மெதுவாப் போப்பா' என்று அடிக்கடி சொல்வதை சட்டை செய்யாமல் கல், மேடு, பள்ளம் என்று ஏற்றி இறக்கி வண்டியைப் பறக்கச் செய்கிறார்.

[இப்ப நீங்க என்ன சொல்றீங்க, மருத்துவமனைக்குச் சீக்கிறம் சென்று தாயையும், சேயையும் காப்பாற்றுவதற்காக, வேறு வழியில்லாமல் செய்கிறார் என்றுதானே? நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் இது யார் படம்? நம்ம காப்டன் படமாச்சே! பொறுங்க கொஞ்சம்.]

இப்படியாக விரையும் வெற்றிவேல் கடைசியாக, விழுந்து கிடந்த ஒரு மரத்தின் மேல் வண்டியை ஏற்றி இறக்க, வண்டிக்குள்ளிருந்து 'ஐயோ அம்மா' என்ற அலறல். தொடர்ந்து ஒரு குழந்தை வீறிடும் சப்தம். ஆக நடு வழியிலேயே குழந்தை பிறந்துவிடுகிறது. இப்பொழுது கேப்டன் பேசுகிறார் பாருங்கள் ஒரு பிரமாதமான வசனம்!

'அம்மா, நீங்க ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தா, பத்தாயிரம் ரூபாய் செலவாகியிருக்கும். இப்ப பாருங்க...பைசா செலவில்லாம பிரசவம் முடிஞ்சுடிச்சு...அதான் அப்படிக் காட்லயும், மேட்லயும் உலுக்கிக் குலுக்கி வண்டியை ஓட்டிவந்தேன்' என்று பெருமையோடு கூறுகிறார். படம் பார்த்த எனக்குத் தூக்கிவாரிப்போட்டது! நான் கேட்டது நிஜமா, கனவா என்று சந்தேகம்.

படத்தில் வரும் பெண்களுக்கு அந்தச் சந்தேகமெல்லாம் இல்லை. வெற்றிவேலை வாயார வாழ்த்துகிறார்கள். அந்த வயதான பெண்மணி, 'இந்தாப்பா, நீயே உன் கையால குழந்தைக்கு சேனத்தண்ணி வச்சிடு' என்கிறார். மழை பெய்துகொண்டிருக்கிறது. மழைநீர் டிஸ்டில்டு வாட்டர் போலச் சுத்தமானது. ஆனால் வெற்றிவேலோ சாலையில் பள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அள்ளி எடுத்து, குழந்தை வாயில் விட்டு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தருகிறார்.

காப்டன் தப்பித்தவறி முதலமைச்சர் ஆகிவிட்டால், தமிழகத்தின் தாய்-சேய் நல மருத்துவமனைகளை மூடிவிட்டு, மாட்டு வண்டிகளை வாங்கி நிறுத்துவாரோ? யார் கண்டது, குறைந்தபட்சம் 'மாட்டு வண்டி ஆம்புலன்ஸ்' திட்டமாவது கொண்டுவந்து ஏழைத் தாய்மார்கள் வயிற்றில் பாலோ சேனத்தண்ணியோ வார்ப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

[மேற்குறிப்பிட்ட படங்கள் முறையே 'வசீகரா', 'கண்ணுபடப் போகுதையா' என்று மறுமொழிகள் மூலம் தெரியவந்துள்ளது. தகவல் அளித்த யாத்ரீகனுக்கும், முரளி கண்ணனுக்கும் நன்றி.]

12 comments:

யாத்ரீகன் said...

thalaivi nadichadhu .. "Vaseegara" padam.. not sure about the 2nd one.. athaan yella padathulayum.. oor makkala paripaalanam panraaru ilati theeviravathigalai pidikuraaru..

யாத்ரீகன் said...

thalaivi nadichadhu .. "Vaseegara" padam.. not sure about the 2nd one.. athaan yella padathulayum.. oor makkala paripaalanam panraaru ilati theeviravathigalai pidikuraaru..

சின்னப் பையன் said...

ஹலோ,
நீங்க சொன்ன விஜய் படம் நானும் பார்த்திருக்கிறேன்னு நினைக்கிறேன். ஸ்பைடர்மேன் உடை நினைவுக்கு வருகிறது. படு கண்றாவியான படம் என்று சொன்னதாக நினைவு. நல்ல வேளை நீங்கள் முழுதாக பார்க்கவில்லை...:-)

கேப்டன் படம்: ஐயையோ. அப்படியா!!! இப்படியெல்லாம் கூடவா நடிப்பார்/பேசுவார்? யாராவது படம் பேர் சொல்றாங்களான்னு பார்ப்போம்... ஆனா அந்த படத்தை பாக்கமாட்டோம்....:-)

முரளிகண்ணன் said...

captain's film name : Kannu pada pokuthaiyya

சரவணன் said...

//thalaivi nadichadhu .. "Vaseegara" padam.. //
தகவலுக்கு நன்றி யாத்திரீகன்.

//athaan yella padathulayum.. oor makkala paripaalanam panraaru ilati theeviravathigalai pidikuraaru..//

ரொம்ப சரி :-)

சரவணன் said...

வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்.

//இப்படியெல்லாம் கூடவா நடிப்பார்/பேசுவார்? //

கேப்டனை ரொம்பக் கொறச்சு எடை போட்டுட்டிங்களே :-)

கருப்பன் (A) Sundar said...

இதை விட கொடுரமான படங்களையெல்லாம் பார்த்துக்கொண்டு செல்லவேண்டிய துர் பாக்கிய நிலையில் இருந்திருக்கிறேன். ஒரு சிறு எடுத்துக்காட்டு விஜய் நடித்த புதிய கீதை!!

சரவணன் said...

வாங்க கருப்பன். புதிய கீதை எப்பவோ டிவியில் கொஞ்சம் பார்த்த மாதிரி ஞாபகம். கோர்ட்டில் நீதி தேவதை சிலையே வந்து வில்லனைக் கொல்ல, நீதிபதி, (சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டதற்காக!) நீதி தேவதைக்கே தண்டனை தருவாரே அதுவா? இல்ல, தனக்கு விடுதலை வாங்கித்தந்த வக்கீலையே (முன்பு வில்லனுக்கு வாதாடியவர் என்பதால்) விஜய் காதாபாத்திரம் கொன்றுவிட, வக்கீலும், 'திருந்தி'(என்ன தப்பு செய்தார்?) உயிர் விடுவாரே, அந்தப்படமா?

சரவணன் said...

நன்றி முரளி கண்ணன். உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி!

Anonymous said...

Talking of Captain movies .. in one movie (I guess its Sabari), captain (he is a doctor) is performing a serious operation and suddenly there is a power-cut. What will he do???
He will ask all the people present in the operation theater to switch ON their mobile phones and will continue with the operation !!!

Normally, it is adviced not to use mobile phones near patients, especially when there are medical equipments nearby, here Captain performs the operation using the light from mobile phones!

Anonymous said...

//Normally, it is adviced not to use mobile phones near patients, especially when there are medical equipments nearby, here Captain performs the operation using the light from mobile phones!//

When there is no power, medical equipments don't function. So in this specific case, is the use of moblie phones still prohibited?

anony munna

Anonymous said...

என்ன கொடுமை யாத்திரீகன்