பொதுவாகப் பிறர் எழுதி வெளியான விஷயங்களை என் பதிவில் மீள் பதிப்பு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் ரவிக்குமார் எழுதி காலச்சுவடில் வெளியான இக்கட்டுரையை இங்கு நன்றி அறிவிப்புடன் வெளியிடுவது இக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதியே. மேலும் நான் கடைசியில் அளித்திருக்கும் சுட்டியில் யாரும் இலவசமாகப் படிக்கும் விதத்திலேயே மூலக் கட்டுரையும் வெளியாகியுள்ளது; அத்துடன் இதழ் வெளியாகி ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன.
பத்தி: பிறவழிப் பயணம்
விஜயகுமார் சார்,உங்களை வணங்குகிறேன்!
ரவிக்குமார்
தாரே ஸமீன் பர் படத்தைப் பார்த்தபோது மீண்டும் அந்தக் கேள்வி எனக்குள் எழுந்தது. 'ஏன் இப்படியொரு படம் தமிழில் வரவில்லை?' ஓம் சாந்தி ஓம் படத்தைப் பார்த்தபோது தோன்றிய கேள்வி அது. அண்மைக் காலமாக என் மகன் ஆதவனின் தயவில் நல்ல சில ஆங்கிலப் படங்களையும் இந்திப் படங்களையும் பார்த்துவருகிறேன். தாரே ஸமீன் பர் படமும் அப்படித்தான் பார்க்க வாய்த்தது.
தாரே ஸமீன் பர் படத்தின் கதையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்: மூன்றாம் வகுப்பில் இரண்டாம் ஆண்டாகப் படிக்கும் இஷானுக்கு எழுதப் படிக்க வரவில்லை. குருவி, நாய், மீன் என்று அவனது உலகம் வேறுபட்டதாக இருக்கிறது. கரும்பலகையில் எழுதப்படும் எழுத்துகள் நடனமாடுகின்றன. எதைப் படித்தாலும் மறந்துவிடுகிறது. ஆசிரியர் சொல்வதும் அவனுக்குப் புரிவதில்லை. ஆனால், ஓவியம் தீட்டுவதில் அபாரமான திறமை கொண்டவனாக இருக்கிறான் இஷான்.
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்த ஆரம்பிக்கிறார், இஷானின் கற்பனை உலகு திறந்துகொள்கிறது. ராக்கெட்டில் ஏறிப் பால்வீதிகளில் பயணம் செய்கிறான், கிரகங்களைப் பந்தாடுகிறான். அவனது கற்பனையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ஆசிரியர் அவனை வகுப்பைவிட்டு வெளியேற்றுகிறார். வகுப்பறையைவிட அது அவனுக்குப் பிடித்தமாயிருக்கிறது.
மகனின் எதிர்காலத்தை நினைத்து இஷானின் அப்பா அவனைக் கண்டிப்பு மிகுந்த ஒரு போர்டிங் ஸ்கூலில் கொண்டுபோய்ச் சேர்க்கிறார். அங்கு டெபுடேஷனில் ஓவிய ஆசிரியராக வருகிறார் ஆமிர்கான். மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான சிறப்புப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் அவருக்கு இஷானின் பிரச்சினை என்னவென்பது புரிகிறது. 'டிஸ்லெக்ஷியா' என்னும் குறைபாட்டால் அவன் பாதிக்கப்பட்டிருப்பதை அவர் உணர்கிறார். ஆசிரியர்களின் முரட்டுத்தனமும் சக மாணவர்களின் கேலியும் இஷானைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருப்தைப் புரிந்துகொண்டு, அவனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அதேவிதமான சிக்கலுக்கு ஆளாகிச் சரியாகப் படிக்க முடியாவிட்டாலும் தங்களது தனித் திறமையால் உலகப் புகழ்பெற்ற பலரைப் பற்றி இஷானுக்குச் சொல்கிறார். தானும் அப்படித்தான் என்கிறார். இஷான் அதுவரை தனக்குத்தானே போட்டுக்கொண்டிருந்த வேலி விலகுகிறது. ஆமிரின் முயற்சியால் அவனது படிப்பிலும் முன்னேற்றம் உண்டாகிறது. பள்ளியில் நடைபெறும் ஓவியப் போட்டியில் தனது ஓவிய ஆசிரியரான ஆமிர்கானையும் தோற்கடித்து முதல் பரிசு பெறுகிறான் இஷான். இந்தக் கதையை மிகையில்லாமல் அழுத்தமாகப் படமாக்கியிருக்கிறார் ஆமிர்கான். இது அவர் இயக்கியிருக்கும் முதல் படமாம். நம்ப முடியவில்லை.
தாரே ஸமீன் பர் படத்தைப் பார்த்து அத்வானி அழுததாக ஒரு செய்தியைப் படித்தேன். அத்வானி மட்டுமல்ல, நரேந்திர மோடிகூட அந்தப் படத்தைப் பார்த்தால் அழுதுவிடுவார். மனத்துக்குள் ஊடுருவி அன்பை அடைத்துவைத்திருக்கும் தாழைத் திறந்துவிடுகிறது அந்தப் படம். அந்த மாயாஜாலம் இஷானாக நடித்திருக்கும் குட்டிப்பையனின் சிரிப்பில் இருக்கிறதா அல்லது மிக நுட்பமாய் மாறும் ஆமிர்கானின் முகபாவங்களில் இருக்கிறதா எனக் கண்டுபிடிப்பது சிரமம்.
தாரே ஸமீன் பர் பார்த்த பிறகு எனக்குள் இரண்டு கேள்விகள் தோன்றின. தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதிப்பேருக்கு ஒன்றாம் வகுப்புப் பாடங்களைக்கூடப் படிக்கத் தெரியவில்லையே அவர்களெல்லாம் 'டிஸ்லெக்ஷி'யாவால் பாதிக்கப்பட்டவர்களா? அவர்களைச் சரிசெய்ய வேண்டுமென்றால் அந்தப் படத்தில் காட்டப்படுவது போன்ற சூழல்கொண்ட போர்டிங் பள்ளிகள் இருந்தால்தான் முடியுமா?
சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 5,768 பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே ரிப்போர்ட்டை அண்மையில் படிக்க நேர்ந்தது. 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அந்த சர்வே சில அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் அறுபது சதவீதம் பேர்தான் தமிழைப் படிக்கக் கூடியவர்கள். ஆங்கிலத்தைப் படிக்கத் தெரிந்தவர்கள் வெறும் பதினைந்து சதவீதம் பேர்தான் என அந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலையோ இன்னும் மோசம். அந்தப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஐம்பது சதவீதம் பேர்தான் தமிழைப் படிக்கத் தெரிந்தவர்கள், ஆங்கிலத்தைப் படிக்கத் தெரிந்தவர்களோ வெறும் பத்து சதவீதம் மாணவர்கள் மட்டும்தான்.
அரசாங்கப் பள்ளிகளிலும் ஆதிதிராவிட நலப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் இப்படி இருக்கக் காரணமென்ன? அந்த சர்வேயில் அதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே ஆசிரியர் இருக்கும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்து காணப்படுகிறது. அத்தகைய வசதி இருப்பதால்தான் அரசு உதவிபெறும் (நிஷீஸ்t ணீவீபீமீபீ sநீலீஷீஷீறீs) பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒப்பீட்டளவில் சுமாராக இருக்கின்றனர் என்று அந்த 'சர்வே' தெரிவிக்கிறது.
சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்த சர்வே ரிப்போர்ட்டை எனக்குக்கொடுத்தவர் அந்தத் திட்டத்தின் இணை இயக்குநராயிருக்கும் திரு. இளங்கோவன். சில நாள்களுக்கு முன்பு சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் தலைமை அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். சமச்சீர் கல்வி தொடர்பாகத் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் முத்துக்குமரன் குழு அறிக்கை பற்றி விவாதிப்பதற்காகத் திரு. எம்.பி. விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அவர்களைச் சந்திப்பதற்காகத்தான் அங்கே போனேன். சமச்சீர் கல்வியில் ஆரம்பித்த எங்களது உரையாடல் சிறிது நேரத்தில் ''செயல்வழிக் கற்றல்'' முறையைப் பற்றியதாக மாறிவிட்டது. விஜயகுமார் ஒரு பிறவி ஆசிரியரைப் போல் எனக்கு அது பற்றி விளக்கினார். கடந்த நான்கு ஆண்டுகளாகச் சென்னை மாநகராட்சித் தொடக்கப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கல்வி ஆண்டு முதல் சுமார் 37,500 பள்ளிகளில் இந்த முறையை விரிவுபடுத்தி இருக்கிறார்கள். திருவான்மியூர் குப்பத்தில் உள்ள தொடக்கப் பள்ளியைப் பார்வையிடுமாறு என்னிடம் திரு. விஜயகுமார் கேட்டுக்கொண்டார். அவரோடு பேசிக்கொண்டிருந்ததில் இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை. அவர் டாக்டர் ஆனந்தலட்சுமி எழுதிய நூல் ஒன்றையும் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற குறுந்தகட்டையும் என்னிடம் கொடுத்தார். 'திருவான்மியூர் பள்ளியைப் பார்ப்பதற்கு முன் இந்த நூலைப் படித்துவிடுங்கள். படத்தையும் பார்த்துவிடுங்கள்' என்று உத்தரவும் போட்டுவிட்டார்.
செயல்வழிக் கற்றல் குறித்து டாக்டர் ஆனந்தலட்சுமி எழுதியுள்ள அந்த நூலை அரை மணி நேரத்தில் படித்துவிடலாம். படிக்க ஆரம்பித்தால் நடுவில் கீழே வைக்கமாட்டீர்கள். செயல்வழிக் கற்றல் (கிநீtவீஸ்வீtஹ் தீணீsமீபீ றீமீணீக்ஷீஸீவீஸீரீ) என்பது தமிழ்நாட்டில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் புதுமையானதொரு முறையாகும். அது உருவான விதம் சுவாரஸ்யமானது. திரு. எம்.பி. விஜயகுமார் அவர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் சிலரை மீட்டிருக்கிறார். அவர்களைப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்கவைக்கலாமென்றால் அவர்களுக்கோ வயது கூடுதலாக இருந்தது. எனவே அவர்களுக்காகச் 'சிறப்புப் பள்ளிகள்' உருவாக்கப்பட்டன. வழக்கமான பள்ளியையொட்டி ஒரு கட்டடத்தில் இந்தச் 'சிறப்புப் பள்ளி' இருக்கும். அங்கே பயிற்றுவிப்பதற்குப் புதுமையான முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமது பள்ளிகளிலும் அந்த முறைகளை நடைமுறைப்படுத்த விரும்பிய ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
திரு. விஜயகுமார் சென்னை மாநகராட்சிக்குக் கமிஷனராக நியமிக்கப்பட்ட பிறகு அவர் தனது வேலூர் அனுபவத்தைச் சென்னையிலும் சோதித்துப் பார்க்க விரும்பினார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நான்குபேரும் இருபத்தாறு ஆசிரியர்களும் அடங்கிய குழு ஆந்திராவில் உள்ள ரிஷி வாலி (ஸிவீsலீவீ க்ஷிணீறீறீமீஹ்) பள்ளிக்கு அனுப்பப்பட்டுப் பயிற்சி பெற்றுத் திரும்பியது. பலமுறை அவர்கள் பயிற்சி பெற்றனர். அந்தப் பள்ளியில் பாடங்கள் சிறு சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் குழந்தைகள் தாமாகவே அவற்றைக் கற்றுக்கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கவனித்தனர். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் 'செயல்வழிக் கற்றல்' முறையாகும்.
ரிஷி வாலியில் பயன்படுத்தப்பட்டுவந்த முறையை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் தமிழகக் குழுவினர் அதை அற்புதமாக மேம்படுத்திவிட்டனர். ஆங்கிலம் பயிற்றுவிப்பது அதில் சேர்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களும் சேர்க்கப்பட்டன. கணிதப் பாடத்தைக் கற்றுத்தர முப்பரிமாணமுள்ள பொருள்களைப் பயன்படுத்தியது நமது ஆசிரியர்களின் புதுமையான கண்டுபிடிப்பாகும். முதலில் இது பதின்மூன்று பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2004ஆம் ஆண்டில் அதை 264 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தினார்கள்.
செயல்வழிக் கற்றல் முறை எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்த்தால்தான் புரியும். கடந்த ஜனவரி 11ஆம் தேதி நான் திருவான்மியூர் குப்பத்தில் உள்ள மாநகராட்சித் தொடக்கப் பள்ளிக்குச் சென்றிருந்தேன். நான் போகும்போது மாலை நான்கு மணி ஆகிவிட்டது. மாணவர்கள் களைத்துப் போயிருப்பார்கள். பள்ளி முடியும் நேரம். இப்போது போய்த் தொந்தரவு செய்கிறோமே என்ற குற்ற உணர்வோடுதான் போனேன். ஆனால், பள்ளி முழுவதும் நிசப்தம். வகுப்பறைக்குச் சென்றேன். மாணவர்கள் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவரவர்கள் தங்களது வேலைகளில் மூழ்கி இருந்தனர். ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி செய்தித்தாளை வைத்து அதில் சில எழுத்துகளைச் சுற்றிக் கட்டம் போட்டுக்கொண்டிருந்தார். 'என்ன செய்கிறாய்?' என்று கேட்டேன். தனக்குத் தெரிந்த எழுத்துகள் எவையெவை அதில் இருக்கிறன என்று பார்த்து அவற்றைச் சுற்றிக் கட்டம் போடுவதாக அந்த மாணவி சொன்னார். அந்த எழுத்தைப் படித்துத் தன்னிடம் உள்ள அட்டையில் அது எங்கே இருக்கிறது என்பதையும் அவர் அடையாளப்படுத்திக்கொள்கிறார். அதன் பிறகு மூன்று எழுத்துகளாலான சிறு சிறு சொற்களை அவர் கரும்பலகையில் எழுதுகிறார்.
வகுப்பறையின் தோற்றமே மாறியிருந்தது. மாணவர்கள் சிறு சிறு குழுக்களாகத் தரையில் விரிக்கப்பட்டுள்ள பாயில் அமர்ந்திருக்கிறார்கள். அந்தக் குழுவில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் இருக்கின்றனர். இதுவரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு வகுப்பறை என இருந்தது. அந்த முறை இப்போது இல்லை. வகுப்பறைகள் குழுக்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே குழுவில் பல வகுப்பு மாணவர்களும் இருப்பதால் நான்காம் வகுப்பு மாணவி முதல் வகுப்பு மாணவிக்குச் சொல்லிக்கொடுக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆசிரியர்களின் 'சுமை' பெருமளவில் குறைந்துவிட்டது மட்டுமின்றி மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கான அறிவின் ஆதாரமாக (sஷீuக்ஷீநீமீ ஷீயீ ளீஸீஷீஷ்றீமீபீரீமீ) ஆசிரியர்கள் மட்டுமே இருந்துவந்த நிலையும் மாறிவிட்டது. அவர்கள் மாணவர்களோடு சேர்ந்து தாங்களும் கற்பதற்கு இது வழிவகுத்திருக்கிறது. இதில் கையாளப்படும் 'ஏணி முறை' மாணவர்கள் தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்துகொள்ளவும் உதவியாக உள்ளது. இன்னொரு வகுப்புக்குச் சென்று பார்த்தேன். அங்கே கம்ப்யூட்டர்களில் பலவித 'கேம்களை' மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். கணக்கு, சமூக அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களைப் பயிற்று விக்கும்விதமாக அந்த 'கேம்கள்' வடிவமைக்கப்பட்டிருந்தன.
கணிதம் எந்த அளவுக்கு அவர்களுக்குத் தெரிகிறது என்பதைச் சோதித்துப் பார்க்க விரும்பினேன். ஒரு அட்டையில் எண்கள் எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொரு எண்ணின் மதிப்புக்கு ஏற்ப அது எழுதப்பட்ட கட்டத்தில் குச்சிகளை வைக்க வேண்டும். இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவரிடம் அதைச் சோதித்தேன். முதலில் ஏழு என்று எழுதப்பட்ட கட்டத்தில் குச்சிகளை வைக்கச் சொன்னேன். அவர் வைத்தார். அடுத்து ஐந்து, அப்புறம் எட்டு. அடுத்து பூஜ்யம் என்று எழுதப்பட்ட கட்டத்தில் அதன் மதிப்புக்கு ஏற்பக் குச்சிகளை வைக்கச் சொன்னேன். உடனே அந்த மாணவி ஒரு டப்பாவை எடுத்தார். அதில் மணிகள் இருந்தன. அதை என்னிடம் கொடுத்தார். இன்னொரு டப்பாவில் எண்கள் எழுதப்பட்ட சிறு சிறு அட்டைகள் இருந்தன. அதிலிருந்து ஐந்து என்று எழுதப்பட்ட அட்டையை எடுத்து என்னிடம் கொடுத்து அதன் மதிப்புக்கு மணிகளைக் கொடுக்கச் சொன்னார். நான் எண்ணி அவரிடம் தந்தேன். அப்புறம் ஒன்பதைக் கொடுத்தார். நானும் மணிகளை எண்ணி அவரிடம் தந்தேன். அதன் பிறகு பூஜ்யம் என்று எழுதப்பட்ட அட்டையை என்னிடம் கொடுத்து அதன் மதிப்புக்கு மணியைத் தரும்படி கேட்டார். நான் திகைத்து நின்றேன். அப்போது அந்த மாணவி சொன்னார். 'பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை. அதனால்தான் நான் பூஜ்யம் என்று எழுதப்பட்ட கட்டத்தில் குச்சிகளை வைக்கவில்லை' எனது திகைப்பு அடங்க நீண்ட நேரம் ஆனது. நான் பார்க்கும் இந்த வகுப்பறை கனவா அல்லது நிஜமா என்று வியப்பாயிருந்தது. அருகில் இருந்த குழுவில் நான்காம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவர் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார். அவரை எப்படியாவது திக்குமுக்காடச் செய்துவிட வேண்டும் என்ற நினைப்பில் மூன்று இலக்க கணக்கு ஒன்றைத் தந்து போடச் சொன்னேன். ஒரே நிமிடத்தில் அதைப் போட்டு விடையை எழுதிக் காண்பித்தார். அவர் எழுதியது சரியா என்று பார்க்க எனக்கோ கால்குலேட்டர் தேவைப்பட்டது.
திருவான்மியூர் குப்பம் பள்ளியில் நான் கழித்த அந்த ஒரு மணி நேரத்தை மறக்கவே முடியாது. அந்தப் பிள்ளைகள் பள்ளி நேரம் முடிந்துவிட்டதாகவோ வீட்டுக்குப் போக வேண்டும் என்பதாகவோ எவ்வித நினைப்பும் இல்லாமல் படிப்பில் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு நான் படித்த ஆரம்பப் பள்ளியின் ஞாபகம் வந்தது. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளியில் மணி அடிக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டிருந்தது. பள்ளிக்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஒரு தண்டவாளத் துண்டுதான் மணி. என்மீதிருந்த அபிமானத்தால் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை நம்பி அந்த மாபெரும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். மணி அடிப்பதில் வகுப்பு முடியும் மாலை நேரமே முக்கியமானது. கடிகாரத்தை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். நான்கு மணி ஆனதும் பெல் அடித்துவிட வேண்டும் என்பது எனக்கு இடப்பட்டிருந்த கட்டளை. நான்கு மணி நெருங்க ஆரம்பித்தாலே எனக்குப் பதற்றம் கூடிவிடும். பாடத்தை கவனிக்க முடியாது. கடிகாரத்திலேயே கண்கள் பதிந்திருக்கும். சின்ன முள் நான்கை நெருங்கும், பெரிய முள் பன்னிரெண்டைத் தொட்டதும் அம்புபோலப் பாய்ந்து சென்று மணியை அடிப்பேன். அடித்து முடிப்பதற்குள் என்னைத் தள்ளிக்கொண்டு பள்ளி மொத்தமும் ஓவென்ற கூச்சலோடு வெளியில் பாயும். பள்ளியிலிருந்து தப்பித்து ஓடும் மாணவர்களின் கும்மாளத்தில் புழுதி பறக்கும். இப்போதும் கிராமங்களில் அத்தகைய காட்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், திருவான்மியூர் குப்பம் பள்ளியில் அதை நாம் காண முடியவில்லை. அங்கே பள்ளி முடிந்ததைச் சொல்லி மாணவர்களைப் பெற்றோர்கள் வற்புறுத்தி அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. பள்ளி ஏன்தான் முடிகிறதோ என்னும் ஏக்கத்தோடு மாணவர்கள் வீடுகளுக்குப் போகிறார்கள்.
மாற்றுக் கல்விமுறை குறித்த தேடல் எனக்குக் கடந்த பதினைந்தாண்டுகளாகவே இருந்துவந்தபோதிலும் அத்தகைய கல்விமுறையை நடைமுறைப்படுத்தும் பள்ளிகள் எதையும் நான் பார்த்ததில்லை. தொண்ணூறுகளில் பேராசிரியர் கல்யாணியின் முன்முயற்சியில் 'மக்கள் கல்வி இயக்கம்' உருவாக்கப்பட்டு அதில் இணைந்து வேலை செய்தபோதுதான் பாவ்லோ ஃப்ரேயரின் நூல்களை நான் படித்தேன். அந்த நூல்கள் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தின. அவற்றைத் தொடர்ந்துதான் அகஸ்தோ போவாலின் 'இன்விசிபிள் தியேட்டர்' தொடர்பான நூல்களையும் படித்தேன். மாற்றுக் கல்வி, இன்விசிபிள் தியேட்டர் முதலியவை குறித்துச் சில விவாதங்களைப் புதுச்சேரியிலும் திண்டிவனத்திலும் நண்பர்களோடு இணைந்து ஏற்பாடு செய்தேன். பாவ்லோ ஃப்ரேயரின் கருத்தாக்கம் எங்களது அரசியல் நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிகாரப் படிநிலைகள் பற்றிய பார்வை அதனால் கூர்மையடைந்தது. நாங்கள் நடத்திய கருத்தரங்குகளைக்கூட வட்டவடிவில் அமைத்தோம், உரைகளின் இடத்தில் உரையாடல்களை வைத்தோம். அதிகாரம் பற்றிய எச்சரிக்கையுடனேயே எந்தவொரு காரியத்தையும் செய்தோம். மிஷேல் ஃபூக்கோவின் கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்ள பாவ்லோ ஃப்ரேயரும் அகஸ்தோ போவாலும் ஒரு வகையில் எனக்கு உதவியாக இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
திருவான்மியூர் குப்பம் பள்ளியைப் பாவ்லோ ஃப்ரேயர் பார்த்தால் அசந்துபோய்விடுவார். இதைப் பிரேசில் நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நிச்சயம் அவர் ஆசைப்படுவார் என எனக்குத் தோன்றியது. ஃப்ரேயர் வலியுறுத்திய அதிகாரச் சமநிலை செயல்வழிக் கற்றல் முறையில் செயல்படுகிறது. ஆசிரியருக்குத்தான் எல்லாம் தெரியும் மாணவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்ற மனோபாவத்தை அது மாற்றுகிறது. இந்தப் பயிற்று முறையைச் செயல்படுத்துவதில் திரு. எம்.பி. விஜயகுமாருக்கு அற்புதமான ஒரு 'டீம்' உதவியாக இருக்கிறது. அதில் மாலதி, பிச்சை, ரத்னவேலு மற்றும் சண்முகம் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் திரு. தங்கம் தென்னரசு அவர்களிடம் எனது அனுபவத்தைச் சொன்னபோது என்னைவிடக் கூடுதலான வியப்போடு அவர் தனது அனுபவத்தை விவரித்தார். ஒரு நல்லகாரியத்தைச் செய்கிறோம் என்கிற பெருமிதம் அவரது குரலில் தெரிந்தது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மௌனமாக ஒரு புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் புரட்சி தமிழகத்தின் எதிர்காலத்தையே பிரகாசமானதாக மாற்றப்போகிறது. தாரே ஸமீன் பர் படத்தில் வரும் போர்டிங் ஸ்கூலைப் போன்ற தோற்றத்தில் இல்லாவிட்டாலும் அதே தன்மையில் நமது அரசுப் பள்ளிகள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஆமிர்கானைப் போலப் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் அந்தப் பள்ளிகளில் இப்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மாணவர்களோடு சேர்ந்து ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், வரைகிறார்கள். கற்பிக்கிறார்கள், தாங்களும் கற்றுக் கொள்கிறார்கள். இந்த மாற்றத்தால் அதிகம் பயனடையப் போகிறவர்கள் அரசுப் பள்ளிகளையே நம்பியிருக்கும் தலித் மாணவர்கள்தாம்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 51% மாணவர்களுக்கு முதல் வகுப்புத் தமிழ் பாடத்தைக்கூடப் படிக்கத் தெரியவில்லையென்று ப்ராதம் (Pratham) நிறுவன அறிக்கை (ASER 2007) கூறியிருக்கிறது. 57% மாணவர்களுக்குக் கழித்தல் கணக்கை எப்படிப் போடுவதெனத் தெரியவில்லை, 89% மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தைக்கூடப் படிக்கத் தெரியவில்லை என அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். இனி அந்த நிலை இருக்காது. அடுத்த ஆண்டுக்கான 'ப்ராதம்' அறிக்கை தமிழகக் கல்விச் சூழலில் நிகழ்ந்துவரும் அதிசயத்தை உலகத்துக்கு எடுத்துச் சொல்வதாயிருக்கும் என்பது உறுதி. திரு. எம்.பி. விஜயகுமார் அவர்களை இதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். திருவான்மியூர் குப்பம் பள்ளியைப் பார்த்து விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, அவர் என்னிடம் செல்ஃபோனில் பேசினார். எனது அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்வதில் அவருக்கிருந்த தவிப்பு அவரது குரலில் தளும்பியது. "சார் உங்கள் பணியைப் பாராட்ட வேண்டும்" என்றேன். ''நான் என்ன செய்துவிட்டேன் ரவிக்குமார். எனக்கு அரசாங்கம் சம்பளம் தருகிறது. அதற்கு நான் வேலை செய்கிறேன். அவ்வளவுதான்'' என்றார் அவர். தமிழகத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டிருக்கும் அவரது கைமாறு கருதாத பணியைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை என்பதுதான் உண்மை.
'விஜயகுமார் சார், உங்களை வணங்குகிறேன்!'
நன்றி: காலச்சுவடு, இதழ் எண் 98 (http://www.kalachuvadu.com/issue-98/page72.asp)

6 comments:
எல்லாரும் எல்லா வலை இதழ்களையும் படிக்க இயலாது. எனவே, அவ்வப்போது நல்ல தகவலை படியெடுத்துத் தருவது பயனுள்ளதே.
இந்தச் செய்தியைப் படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
இந்தக் கட்டுரையைத் தாங்கள் மீள் பதிப்பு செய்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்! மீள் பதிப்பு செய்ததால், காலச்சுவடு இதழ் மற்றும் இணையத் தளம் பார்க்காதவர்களும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது.
முக்கியமானதொரு கட்டுரை.
அருமையான கட்டுரையை மீள்பதிவு செய்ததிற்கு மிக்க நன்றிகள். பொள்ளாச்சி நசன் அவர்களின் ‘தமிழம்' (http://www.thamizham.net) இணையதளம் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். குழந்தைகளுக்கான செயல்முறை பாடத்திட்டம் உருவாக்குவதில் அவரின் பங்கு மிகவும் உயர்வானது.
அன்புடன்,
சௌந்தர்.
நல்ல கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம், தலித் மாணவர்களின் கல்வி, பொதி மூட்டை சுமக்கும் மாணவர்கள், விலைவாசியை மிஞ்சும் கல்விக் கட்டணங்கள் என கல்வி குறித்த அனைத்து கவலைகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அமைந்த கட்டுரை. அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.
சௌந்தர்,
பொள்ளாச்சி நசன் சிற்றிதழ்களைத் தொகுப்பவர் என்று தான் தெரியும். குழந்தைகளுக்கான செயல்முறை பாடத்திட்டம் உருவாக்குவதில் அவருக்கு உயரிய பங்கு இருந்ததையும், 'தமிழம்' வலைத்தளத்தையும் உங்கள் பின்னூட்டம் வழியாக அறிந்தேன். தகவலுக்கு நன்றி.
அன்புடன்
சரவணன்
Post a Comment