தமிழ்ப் புத்தகங்களின் தரம் பற்றிச் சிறிது பேசுவோமா? கவனிக்க: தமிழ்ப் புத்தகங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறேன்--தமிழ் இலக்கியம் என்று அல்ல! ஆமாம், இது தமிழில் வெளியிடப்படும் புத்தகங்களின் தயாரிப்பின் தரத்தைப் பற்றிய இடுகையே.
முதலில், தமிழ்ப் புத்தகங்கள் பெரும்பாலும் ['கார்பரேட் தாதாக்கள்' வெளியிடுபவை தவிர்த்து] ISBN எண்ணைக் கொண்டிருப்பதில்லை. எப்படி உங்கள் கணினி வலையுலகில் இணைய வேண்டுமானால் அதற்கென்று தனியான IP முகவரி அவசியமோ அதேபோல ஒரு புத்தகம், புத்தகமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் இந்த ISBN அவசியம். இத்தனைக்கும் ISBN பெறுவது அப்படியொன்றும் செலவு பிடிக்கும் விஷயமில்லை என்று அறிகிறேன். தமிழ் பதிப்பகங்கள் இவ்விஷயத்தைப் பொருட்படுத்தாதன் காரணம் அறியாமையா அலட்சியமா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் பாருங்கள் அரிச்சுவடிப் புத்தகம் கூட ISBN உடனே இருக்கும்.
அடுத்தது, புத்தகத் தயாரிப்பு பற்றி இங்கு நிலவும் அறியாமை மலைக்கச் செய்வது. கடந்த புத்தகக் கண்காட்சியில் காவ்யா பதிப்பக வெளியீடுகளாக வந்திருக்கும் நகுலனின் நாவல்கள் எல்லாவற்றையும் வாங்கினேன். இவற்றில் 'நினைவுப் பாதை', 'நவீனன் டைரி' ஆகிய இரண்டிலும் spine என்று குறிப்பிடப்படும் முதுகுப் பகுதியில் நாவலின் பெயரும், ஆசிரியரின் பெயரும் அச்சிடப் பட்டிருந்தன. பிரச்சனை என்னவென்றால், அவை கீழிருந்து மேலாக அச்சிடப்பட்டிருந்ததுதான்! முதுகில் பொறிக்கப்படும் எழுத்துகள் மேலிருந்து கீழாகப் படிக்கும் விதத்திலேயே இருக்கவேண்டும் என்பது, புத்தகத் தயாரிப்பில் ஆரம்பப் பாடம். காவ்யாவோ சுமார் 25 ஆண்டுகாலமாகப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அவர்கள் இதைக் கூட அறியாமலா இருந்தார்கள்?
இதைப்படிக்கிற நீங்கள், உங்கள் புத்தக அலமாரியைச் சற்றே பாருங்கள்--எத்தனை புத்தகங்கள் இவ்வாறு தலைகீழாக அச்சிடப்பட்டுள்ளன எனப் பார்க்கலாம். (என்னிடம் சென்னையில் கைவசம் உள்ள மிகச்சில புத்தகங்களில் மதி நிலையம் வெளியிட்டுள்ள ந.பிச்சமூர்த்தி கதைகள் - 3 தொகுதிகள், சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள வண்ணநிலவன் கதைகள் ஆகியவையும் இப்பிழையுடன் உள்ளன!)
அடுத்தது எடிட்டிங். தமிழ் பத்திரிகைகளிலோ, வெளியீட்டகங்களிலோ யாரும் பிரதிகளை எடிட் செய்வதாகத் தெரியவில்லை. பத்திரிகைகளைப் பொருத்தவரை நட்சத்திர எழுத்தாளர்களின் படைப்புகளை அப்படியே பிரசுரித்து விடுவது, மற்றவர்கள் எழுதியவற்றை இஷ்டத்துக்கு வெட்டியும், மாற்றியும் வெளியிடுவது என்ற அனுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகத் தோன்றுகிறது. பதிப்பகங்களிலோ எடிட்டர் என்ற பணியிடமே இருப்பதுபோல் தோன்றவில்லை.
இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். அசோகமித்திரன் எழுதிய அனைத்துச் சிறுகதைகளையும் தொகுத்து இரண்டு தொகுதிகளாகக் கவிதா வெளியிட்டுள்ளது. ரூ. 750 விலையுள்ள இந்தப் புத்தகத்திற்கும் ISBN கிடையாது. போகட்டும். அசோகமித்திரனின் புகழ் பெற்ற கதைகளில் ஒன்றான 'புலிக்கலைஞ' னைப் படித்துப் பாருங்கள். இதில் புலி வேடதாரியின் ஆட்டத்தை விவரிக்கும்போது, ஒரு வரியில் புலி உறுமிற்று என்பது போலவும், அடுத்த வரியில் சிறுத்தை தாவியது என்பது போலவும் எழுதியிருப்பார். புலியும் சிறுத்தையும் வேறு வேறு விலங்குகள் என்பது அனைவரும் அறிந்ததே. எழுதுகையில் ஏற்பட்ட சிறு கவனப் பிசகு எடிட் செய்யப் படாமல் இன்றளவும் தொடர்வதுதான் அசோகமித்திரன் போன்ற மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு நாம் தரும் மரியாதையா?
(இக்கதையில் புலிவேடமிட்டவன் வைத்திருந்தது ஒரு சிறுத்தையின் தலையே. ஆனால் அவன் 'டகர் பாயட்' (tiger fight) ஆடப்போவதாகவே கூறுவதால், அவனது சிறுத்தை முகம் இப்படி மாற்றி மாற்றி எழுதியதற்குக் காரணமாக இருக்காது என்றே எண்ணுகிறேன்.)
மேலும் இதே கதையில், கதைசொல்லி, தான் வேலை செய்யும் ஸ்டுடியோவின் உணவு இடைவேளை மாற்றப்பட்டது பற்றிய விவரத்தைக் கதையின் ஆரம்பத்தில் கூறுகிறான். இதற்கும் பின்னால் சொல்லப்போகும் விஷயத்துக்கும் பெரிய தொடர்பு எதுவும் கிடையாது. ஆகவே இப்பகுதி, ஆசிரியருடன் விவாதித்தபின் சற்று சுருக்கப்பட்டிருந்தால் கதை இன்னும் கச்சிதமாக இருந்திருக்கும்.
ஆக எவ்வளவு பெரிய ஜாம்பவான் எழுதிய பிரதியாக இருந்தாலும், அது எடிட் பண்ணப்பட வேண்டிய அவசியம் இருப்பதை அறியலாம். இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் முடியப்போகும் நிலையிலாவது தமிழ் நூல்களைக் கோனார் நோட்ஸைவிட சற்றே தரமாக வெளிடமாட்டார்களா என்று வாசகர்கள் ஏங்கியபடியே உள்ளனர்.
Friday, 7 March 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் சிறப்பாக இருக்கின்றன
மற்றபடி நீங்கள் சொல்வது போல எடிட்டிங் என்பதே இங்கு இல்லை.
ISBN எண் வாங்குவது குறித்து விளக்க முடியுமா
//கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் சிறப்பாக இருக்கின்றன//
'கார்பரேட் தாதா'? :-))
மற்றபடி, ISBN என்பது International Standard Book Number என்பதன் சுருக்கம். முன்பு 10 இலக்க எண்ணாக இருந்தது தற்போது 13 இலக்க எண்ணாக உள்ளது. இந்தியப் புத்தகங்கள் 81 என்று ஆரம்பிக்கும். இந்த எண்ணைக் கொண்டே நாடு, பதிப்பகம், மொழி மற்றும் எந்தப் புத்தகம் என அறியலாம்.
இதற்கென டெல்லியில் ஒரு அமைப்பு உள்ளதாம். அவர்களிடம் ஒவ்வொரு பதிப்பகமும் தமக்கு ஒரு ஆண்டுக்குத் தேவையான ISBN எண்களை (உதாரணம்: 300 எண்கள்) மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம். பிறகு அவற்றை ஆண்டு முழுவதும் உபயோகித்துக் கொள்ளலாம். ஒரே புத்தகம் paper back, hard bound என்று வந்தால் தனித்தனி எண்கள் அளிக்கப்படும். அட்டை வேறு நிறத்தில் வெளியிடப்பட்டால் கூட வேறு எண்தான்.
எனக்குத் தெரிந்தது இவ்வளவே. மேலதிக விவரங்களுக்கு ISBN India என கூகுள் தேடல் செய்து பார்க்கலாம்.
இதைப் படிப்பவர்களுக்கு ஒரு quiz:
சில ஆங்கிலப் புத்தகங்களில் First published: 2000; Reprinted: 2001; Reissued: 2003 என்று இருப்பதைப் பார்க்கலாம். கேள்வி: Reprinted - Reissued வேறுபாடு என்ன, கூறுங்கள் பார்ப்போம்!
தமிழ் பத்தகங்களில் இதைத் தேடி மெனக்கெட வேண்டாம். பெரும்பாலான தமிழ் பதிப்பகங்கள் மறு அச்சு என்பதையே மறு பதிப்பு எனக் குழப்பி வெளியிடும் சூழல்!
Reprinted என்றால் அப்படியே மீண்டும் அச்சிடப்பட்டது என்று அர்த்தம்.
Reissued என்றால் அட்டை மாற்றப் பட்டதால் அல்லது அட்டை வண்ணம் மாற்றப்பட்டதால் வேறு ISBN எண் அளிக்கப் பட்டது என்று அர்த்தம்.
Post a Comment