Wednesday 12 March 2008

'உங்கள் ஊரில் யாரும் கர்ப்பமே ஆகவில்லையா?'

அது 1984 ஆம் ஆண்டு. நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்க இருந்தது. எம்ஜியார் அமெரிக்காவில் மருத்துவமையில். திமுக இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவிய பின்னரும் சுறுசுறுப்போ, கட்சிக் கட்டுக்கோப்போ குலையாமல் மீண்டும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டது.

இந்திரா காந்தி கொல்லப்பட்டது, எம்ஜியார் நலம் குன்றி இருந்தது ஆகிய இரட்டை அனுதாப பலம் காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு. திமுக பக்கம், ஏழாண்டு எம்ஜியார் ஆட்சியும், நான்காண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியும் தரக்கூடிய anti-incumbency factor. நான் அப்போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். என்னைப்போன்ற வயதினருக்கு, விவரம் தெரிந்த நாள் முதல் எம்ஜியார் ஆட்சியைப் பார்த்துவரும் சலிப்பு. அப்போதெல்லாம், பொதுவாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி மேல் மிகப்பெரிய அபிமானம் காணப்பட்டது. கலைஞர் அறிவாளி, இலக்கியவாதி; எம்ஜியார் 'வெறும்' திரைப்பட நடிகர்தானே என்ற எண்ணம் எங்களிடம் இருந்தது. எம்ஜியார் ஆட்சியில் இலவசத் திட்டங்கள் சத்துணவில் ஆரம்பித்து (நியாயமான இலவசம்) இலவச பிளாஸ்டிக் வாளி (தண்ணீர் பஞ்சத்துக்கு நிவாரணம்!), இலவச வேட்டி - சேலை என்று தொடர்ந்து, இலவச பல்பொடி வரை வந்திருந்தன. இது இப்படி இருக்க, அப்போதெல்லாம் 21 வயது நிரம்பியவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. ஓட்டுரிமை 18 வயது நிறைந்தவர்களுக்கு அளிக்கப் பட்டிருந்தால், 84-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் சற்றேனும் மாறியிருந்திருக்க வாய்ப்புண்டு.

எம்ஜியார் மருத்துவமனையில் இருந்ததால் அதிமுகவினர் எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கியைக் கட்டி, 'இறைவா உன் கோயிலிலே, எத்தனையோ மணி விளக்கு' என்ற பாடலை ஓயாமல் ஒலிபரப்புவார்கள். அதில் கடைசியில் 'இறைவா ஒரு ஆணையிடு, ஆணையிடு' என்று வரும். அதைத்திரித்து ஒரு பையன் இப்படிப் பாடினான்:

இறைவா ஒரு ஆணையிடு!
எம்ஜியாரை சாகவிடு!
எங்களுக்கு லீவு கொடு!
கலைஞரை ஆளவிடு!
தமிழ்நாட்டை வாழவிடு!

இந்தப் பாடல் அனைவருக்கும் பிடித்துப்போயிற்று!

அப்பொழுது வானொலியில் தினமும் ஒரு தலைவருக்கு பிரச்சாரம் செய்ய 10 நிமிடங்கள் தரப்பட்டன. கொடைக்கானல் டிவி ஒளிபரப்பு ஆரம்பித்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். எப்படியும் தென் மாவட்டங்களில் டிவி இப்போது போல எல்லாவீட்டிலும் இருக்கும் பொருளாக மாறியிராத காலம். ரேடியோதான் பரவலான தகவல் தொடர்பு சாதனம்.

பிரச்சார ஒலிபரப்பில் கலைஞரின் முறை. தனது வழக்கமான கிண்டலோடு அவர் பேசிய அந்தப் பேச்சு இளைஞர்களை மிகவும் கவர்ந்தது. அதில் கலைஞர், 'கர்ப்பினிப் பெண்களுக்கு உதவித்தொகை தருவதாகச் சொன்னார்களே, உங்கள் ஊரில் யாருக்காவது கிடைத்ததா? அப்படியானால் உங்கள் ஊரில் யாரும் கர்ப்பமே ஆகவில்லையா?' என்று கேட்டார். அந்த வரிகள் ரொம்பப் பிரபலமாயின. அதே பேச்சில், 'வீட்டுக்கொருவருக்கு வேலை கொடுக்கிறேன் என்றார்களே, திருச்செந்தூர் முருகனின் தங்க வேலையும், திருத்தணி முருகனின் வைர வேலையும் தொலைத்தார்களே தவிர, யாருக்காவது வேலை கொடுத்தார்களா?' என்றும் கேட்பார். இது ஒரு மலிவான சிலேடையாக அப்போதே எனக்குத் தோன்றினாலும், கேட்பவர்கள் மனதில் பதிந்தது உண்மை. கிடைத்த 10 நிமிடங்களில் நறுக்கென நாலு வார்த்தை பேசுவதே நோக்கம் என்னும் போது அதை அவர் நன்றாகவே சாதித்தார். மற்ற கட்சிகளின் சார்பில் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்று அப்போதோ மறந்துபோய்விட்டதே!

நான் மேல்நிலை படித்தது நாடார் சமுதாயத்தினர் நடத்தும் ஒரு பள்ளியில். அங்கு எந்த விழாவாக இருந்தாலும் காமராஜர் படமொன்றை வண்ண விளக்குகளால் அலங்கரித்து வைப்பார்கள். ஆரம்பத்தில் இது எனக்குக் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தது. காமராஜர் பெரிய தலைவர்தான், சரி. ஆனால், தேசத்தலைவர்கள் என்று வரும்போது 'காந்தி, நேரு...' என்றுதானே தொடங்குவது வழக்கம்? எல்லோரையும் விட்டுவிட்டு, இடையில் புகுந்து காமராஜருக்கு மரியாதை செய்வது ஏன் என்று அப்பாவித்தனமாக நினைத்துக்கொள்வேன்! இத்தனைக்கும் காமராஜர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று எனக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும், தேசத்தலைவர்களுக்கெல்லாம் சாதி பார்க்க முடியும் என்ற கருத்தாக்கமே என்னிடம் உருக்கொண்டிருக்கவில்லை.

அங்கும் மாணவர்களுக்குக் கலைஞர் என்றாலே தனி மதிப்புத்தான். அது எம்ஜியார் பிழைத்துவந்து மறுபடியும் கோலோச்சிவந்த காலம். எங்கள் பள்ளியில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் ஓய்வு பெற்றார். அவருக்கு வழியனுப்புவிழா நடந்தது. விழாவில் பேசிய ஒரு ஆசிரியர், ஓய்வு பெறுபவரைக் குறிப்பிட்டு, 'அவரிடம் நான் காமராஜரின் கடமை உணர்ச்சியைக் காண்கிறேன்'; வேறு யாரோ ஒரு தலைவர் பெயரைக் கூறி அவருடைய ஒரு நல்ல குணத்தைக் காண்கிறேன் என்றுவிட்டு, 'டாக்டர் கலைஞரின்' என்றதுதான் தாமதம்...மாணவர்களிடம் எழுந்த கரவொலி அடங்கச் சில நிமிடங்களாயிற்று. அதுவரை காத்திருந்த அவர் 'தமிழ்ப் பற்றைக் காண்கிறேன்', என்று முடிக்க, கரகோஷம் விண்ணைத்தொட்டது.

கலைஞர் ஏதோவொருவிதத்தில் திராவிட/தமிழ் உணர்வுகளைத் தொடர்ந்து 40 ஆண்டுகாலம் (அண்ணா மறைவுக்குப் பிறகு) இளைஞர்களிடம் ஊட்டிவந்த சக்தியாக விளங்கியிருப்பதை யாரும் மறுக்கமுடியாது.

இன்றைய மாணவர்களை அப்படி எந்த அரசியல்வாதியும் கவருவதாகத் தோன்றவில்லை. இதுபற்றி பள்ளி/கல்லூரி ஆசிரியர்கள்/மாணவர்கள் எழுதலாம். இன்றைய இளைய தலைமுறையை வசீகரிக்கும் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் இல்லாதது கவலைக்குறிய விஷயம்.

அன்று ஆட்சியில் இல்லாத கலைஞர், வாஜ்பேயி, ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் போன்ற அகில இந்தியத் அரசியல்வாதிகளையும், உள்ளூர் அரசியல்வாதிகளையும் சேர்த்து 'TESO' (Tamil Eelam Supporters Organization) என்ற அமைப்பைத் தொடங்கி, மதுரையில் ஒரு மாநாட்டையும் நடத்தினார். இன்று கலைஞர் ஆட்சியில் இருக்கிறார்; சிங்கள ராணுவமோ, ஈழத்தமிழர் இருக்கட்டும், தமிழகத் தமிழர்களையே (மீனவர்களை) கேள்வி கேட்பாடு இன்றி சுட்டு வருகிறது. என்ன செய்யப் போகிறார் கலைஞர்? மானமுள்ள எந்த நாடும் தன் ஒரே ஒரு குடிமகனை அடுத்த நாடு படுகொலை செய்தாலும் உடனடியாக, ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்கிறது. இதைப் பற்றி எழுதினால், தனி இடுகையாக நீண்டுவிடும் என்பதால் நிறுத்திக்கொள்கிறேன்.

3 comments:

Anonymous said...

now a days stdudents are busy with their tight schedule and lost interest in elections( even tamil movies stopped showing the election scene in colleges!)
so called youths(supposed to be) in any party are around 50 yrs ,stalin is the head for the youth team in DMK)
But in kerala, lots of students involved in politics - as a result they strike frequently !

சரவணன் said...

உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி அனானி.

someone's happiness is someone else's sacrifice said...

nandraaga irunthathu... nandri