Friday 7 March 2008

பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும் மல்லிவாசம்...

உலக தமிழ்ப்பதிவுகளில் முதன்முறையாக--பெயரிடப்படாத என் பதிவு இதோ ஆரம்பம்! [துந்துபி முழக்கம்...] சில ஓவியங்களுக்கு, பார்வையாளனின் சுதந்திரத்தில் குறுக்கிட விரும்பாத (அல்லது என்ன வரைகிறோம் என்று அவர்களுக்கே தெரியாத) ஓவியர்கள் 'தலைப்பிடப்படாதது' என்று பெயரிட்டிருப்பார்களே அந்த மாதிரியும் வைத்துக்கொள்ளலாம். சிறந்த பெயர் கண்டுபிடித்து அனுப்புபவருக்கு என்னுடைய புத்தகம் (எழுதுகிற காலத்தில் தான்~) அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும்.
ஒருமுறை ராஜீவ் காந்தி கலந்துகொண்ட கூட்டத்தில் ஒருவர் தன் குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொல்ல அவரும் (வேறு என்ன) 'இந்திரா' என்று பெயர் வைத்தார். அதை மைக்கில் ஒருவர் 'இந்திரா காந்தி' என்று அறிவித்தார். அதைக்கேட்ட ராஜிவ் 'காந்தி அல்ல. இந்திரா-தான்' என்று திருத்தினார். ஹில்லாரியிடமோ ஒபாமாவிடமோ ஒருவர் குழந்தையை நீட்டினால் எப்படியிருக்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறது.
தமிழ் நாட்டில் குழந்தைக்குத் தலைவர்களின்/பிரபலங்களின் பெயர் வைப்பவர்கள் முழுப் பெயரையும் (அல்லது குடும்பப் பெயரை மட்டும்) வைப்பதைப் பார்க்கலாம்: சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, ஸ்டாலின், லெனின், காந்தி, கபில் தேவ், பிடல் காஸ்ட்ரோ,... என்பது போல. போஸ், நேரு, காந்தி, காஸ்ட்ரோ என்பதெல்லாம் அவரவர் குடும்பப் பெயர்கள். அவற்றை நாம் வைப்பது அர்த்தமற்றது. எம்.ஜி.ஆரின் பெயர் உங்கள் குழ்ந்தைக்கு இடவேண்டும் என்றால் எப்படி வைப்பீர்கள்? 'ராமச்சந்திரன்' என்றுதானே? எம். ஜி. ராமச்சந்திரன் என்றா வைப்பீர்கள்?
எப்படியோ...அவரவர்கள் பெயர் வைப்பது/வைத்துக்கொள்வது அவரவர் சொந்த விஷயம். சோனியா காந்தியை 'காந்தி' பெயரை உபயோகிக்காமல் தடுக்க கோர்ட் உத்தரவிடவேண்டும் என்று குருமூர்த்தி குதிப்பதுபோல நான் செய்ய மாட்டேன். இதற்கு அவர் சொல்லும் காரணமும், கட்டிவிடும் கதையும் அபத்தங்களின் சிகரம். இந்திய ஆட்சிப்பணி நேர்முகத்தேர்வில் ஒருவரிடம், இந்திரா காந்தி யார் என்று கேட்டார்களாம். அதற்கு அவர் 'மகாத்மா காந்தி பேத்தி' (அல்லது மகளா) என்று பதில் சொன்னாராம். அதனால் ஒரு தலைமுறையே அப்படி நம்பி வளரும் அபாயம் இருக்கிறதாம்! இந்தக் குப்பையை நடுப்பக்கத்தில் பிரசுரிக்கும் 'எக்ஸ்பிரஸ்' பற்றி என்ன சொல்வது?
சோனியாவை எப்போதும் அன்டோனியோ மெய்னோ என்றே குறிப்பிடும் குருமூர்த்தி பட்ஜெட் விமரிசனத்தில் 'சோனியா காந்தி', 'திருமதி காந்தி' என்று ஒழுங்காகக் குறிப்பிட்டுள்ளார். கொஞ்சம் சரியாகிவிட்டது போலும் :-)

1 comment:

ஜீவன் சுப்பு said...

சார் புஸ்தகம் எழுதீட்டீங்களா ...?