பின்நவீனத்துவம் என்ற பதம் தமிழ்வலையுலகில் அடிக்கடி அடிபடுவதைக் காண்கிறேன். சிலர் இச்சொல்லைப் பார்த்ததுமே கேலி செய்வதும் உள்ளது. இந்நிலையில் பின்நவீனத்துவம் பற்றி எனக்குத் தெரிந்தவரை ஒரு எளிய அறிமுகத்தைத் தருவது சிலருக்காவது (நான் உட்பட--உங்கள் எதிர்வினைகள் மூலம்) பயனளிக்கும் எனக் கருதியதன் விளைவே இந்த இடுகை.
பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, நாம் பின்நவீன உலகில்தான் வாழ்ந்துவருகிறோம் என்பதை எடுத்த எடுப்பில் கூறிக்கொள்கிறேன். உங்களைக் காக்க வைக்காமல் அந்த நாலு வரிகள் இதோ:
* பழைய காலம்: பெண் படிக்கக் கூடாது, வேலைக்குச் செல்லக் கூடாது என்று வீட்டுக்குள்ளே பூட்டி வைத்தது.
* நவீன காலம்: பெண் படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியது. வீட்டை மட்டும் ஒரு பெண் கவனித்துக்கொள்வது சற்று கேவலமாகப் பார்க்கப் பட்டது.
* பின்நவீன காலம்: வேலைக்குச் செல்வதோ வீட்டைக் கவனித்துக் கொள்வதோ தனிப்பட்ட பெண்ணின் விருப்பம்; இதில் கவனிக்க வேண்டியது அவளுக்குத் தேர்வு உரிமை (choice) இருக்கிறதா என்பதே என உணரப்பட்டது. வீட்டைக் கவனித்துக் கொள்வதும் அவசியமான உழைப்பாக மதிக்கப்பட்டது. அதே போல, ஒரு ஆண், குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதிலும் எந்தக் கேவலமும் இல்லை என்கிற தெளிவு ஏற்பட்டது.
ஆக, பின்நவீனத்துவம் நம் இன்றைய உலகைப் புரிந்துகொள்ள ஒரு முயற்சி மற்றும் எதிர்வினை என்று கூறலாம்.
இலக்கியத்தில் உதாரணம் பார்ப்போம்:
* பழைய காலம்: வாய்மொழி இலக்கியங்களில் மரம், மட்டை, விலங்குகள் எல்லாம் பேசின. இவை வெகு இயல்பாகக் கதையில் வந்து போயின.
* நவீன காலம்: அது எப்படிய்யா மரம் பேசும்? கதை என்றால் நம்பும்படியாக, யதார்த்தமாக (realistic) இருக்க வேண்டும் என்றது.
*பின்நவீன காலம்: யதார்த்தமாக எழுதப்படும் கதை என்பதும் எழுத்தாளரால் கவனமாகத் தன் கற்பனையில் கட்டி எழுப்பப் படுவதுதான். ஆக அவர் ஏன் தன் கற்பனைக்குத் தானே எல்லைக் கோடு போட்டு சிறையிட்டுக்கொள்ள வேண்டும்? கதையோட்டத்துக்குத் தேவைப்பட்டால் அதைமீறி மாய உலகைப் படைப்பதில் தவறில்லை என்ற புரிதல் விளைந்தது. Fantasy, science fiction, magical realism என்பவை தோன்றின. அதற்காக, மாய அம்சங்கள் இருந்தே ஆக வேண்டும் என வலியுறுத்துவதில்லை.
வரலாற்று ரீதியாக, இரண்டாம் உலகப் போருக்குப்பின் பழைய கொள்கைகளின் போதாமையால் ஏற்பட்டதே பின்நவீனத்துவம் என்ற தத்துவம். கட்டிடக்கலைதான் பண்டைக்காலக் கூறுகளை மீண்டும் பயன்படுத்தி இதற்கு அடிகோலியது.
பின்நவீனத்துவத்தின் குறிப்பிடத்தக்க பண்பு அது மனிதர்களிடையே காணப்படும் சகல வேறுபாடுகளையும் அங்கீகரிப்பது, ஏன், கொண்டாடுவது. இவற்றின் அடிப்படையில் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்வதில்லை. மேலும், இலக்கியம் போன்றவற்றில் சகலரும் ஏற்கக்கூடிய தர அளவுகோள்கள் இருப்பதாக ஏமாற்றிக்கொள்வதில்லை. நகுலனோ, பாலகுமாரனோ - ஒருவர் அடுத்தவரை விட இலக்கியத் தரத்தில் சிறந்தவர் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே 'எனக்கு இன்னாரைப் பிடிக்கிறது' என்று சொல்வதோடு உன் வேலை முடிந்தது என்கிறது. உம்பர்ட்டோ ஈகோவைப் படிப்பதால் நான் ராஜேஷ்குமாரைப் படிப்பவரைவிட ரசனை அதிகம் கொண்டவன் என எண்ணிக்கொண்டால் எள்ளி நகைக்கிறது பின்நவீனத்துவம். அதேவேளை எந்தக் கதை/கட்டுரை/கவிதை/சினிமா/நாடகம் ஆகியவற்றினூடாகச் செயல்படும் அரசியலைக் கேள்விக்குட்படுத்துகிறது.
இப்பொழுது பின்நவீனத்தின் மேலும் சில கூறுகளைப் பார்க்கலாம்:
* கலையில் கீழானது, மேலானது என்ற வகைப்பாடு ஒழிந்தது: நாதசுரம் மட்டுமே இசைத்து நிகழ்ச்சிகளைத் தொடங்குவது போய் பறையொலியுடன் இன்று விழாக்கள் ஆரம்பிக்கப் படுகின்றன. அதற்காகக் கர்நாடக இசையும் தூக்கி எறியப்படுவதில்லை. (சென்னை சங்கமம் நினைவிருக்கிறதா?)
* காமிக்ஸ்கள் இலக்கியமாக ஏற்கப்படுகின்றன. (Asterix போல)
Beatles உட்பட பாப், ராக், திரைப்படப் பாடல்கள் என ஜனரஞ்சகமான அனைத்தையும் காட்டுக்கூச்சலாகவே காணும் வெங்கட் சாமிநாதன் போன்றோர் நவீன காலத்திலேயே தேங்கிப் போயுள்ளதைக் காணலாம்.
* தீப்பெட்டிப் படங்கள், பள்ளி மாணவருக்கான சார்ட்டுகள், திரைப்பட போஸ்டர்கள் போன்றவை கலை வடிவங்களாக ஏற்கப்பட்டு சிலாகிக்கப் படுகின்றன.
பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சம், அது எந்த ஒரு குறிப்பிட்ட
கொள்கையோ, கோட்பாடோ, சூத்திரமோ உலகைப் புரிந்துகொள்ள உதவும் என்பதை நிராகரிக்கிறது. இதை நாமும் நடைமுறையில் பார்க்கிறோம். நவீன கால சூத்திரப்படிப் பார்த்தால் இடதுசாரிகள் முதலாளிகளுக்கு எதிரானவர்கள். இன்றைய பின் நவீனத்துவ உலகிலோ, நந்திகிராமில் கம்யூனிஸ்டுகள் முதலாளிக்கு ஆதரவாக விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, வலதுசாரியாக இருக்க வேண்டிய பாரதீய ஜனதா விவசாயிகளுக்காகப் போராடுகிறது! கம்யூனிஸ்டு நாடான சைனா தனியார் முதலீட்டில் முன்னிலையில் இருக்கிறது.
இலங்கையில் அன்பையே போதிக்கும் புத்தமதத்தைச் சேர்ந்த சந்நியாசிகளே தமிழரை ஒடுக்குவதில் முன்னிற்பதையும் பார்க்கிறோம்.
எந்தத் தனி ஒருவரிடமும்--அது காந்தியோ, ஏசுவோ, வள்ளுவரோ, ராமானுஜரோ, நபிகளோ, மார்க்ஸோ, பெரியாரோ, ஜெயலலிதாவோ, ஸ்டாலினோ (இதில் ஜோஃசப்போ, மு.க. வோ)--நம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளோ, எல்லாக் கேள்விகளுக்கும் விடைகளோ கிடைக்கும் என்பதை பின்நவீனத்துவம் ஒத்துக்கொள்ளவில்லை. இவர்கள் எல்லார் சொன்னதிலும் அவரவர் சூழ்நிலைக்கேற்ற சில தீர்வுகள் இருக்கலாம் என்பதை ஏற்கிறது.
இன்று WTOவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைப் பாருங்கள்: இடதுசாரிகள், சூழலியளாலர்கள், மாணவர்கள், மனித உரிமையாளர்கள், பெண்ணியவாதிகள் என ஒரு கலவையான திரளைப் பார்க்கலாம். ஒருவர் 'WTO திமிங்கலங்களைக் கொல்கிறது' என்ற அட்டையை ஏந்தி வந்ததைப் பார்த்திருக்கிறேன். பின்நவீன உலகின் போராட்டங்கள் இப்படித்தான் இருக்கும்.
தனி மனித ஒழுக்கத்தைப் பொறுத்தவரை எல்லோருக்குமான ஒழுக்கவிதி என்று எதுவும் இருக்க முடியாது. அடுத்தவரைப் பாதிக்காதவரை அது அவரவர் பாடு. ஒருவர் தனி அறைக்குள் புகைபிடித்தால் அதில் ஒழுக்கக்கேடு எதுவும் இல்லை; அதே புகையை அடுத்தவர் சுவாசிக்கும்படி செய்து புற்றுநோயைப் பரிசளித்தால் அது ஒழுக்கக்கேடு ஆகும்.
மொத்ததில் மிக அதிக ஜனநாயகப் பண்பு உடைய தத்துவமே பின்நவீனத்துவம் ஆகும். இது யாரும் உட்கார்ந்து யோசித்துக் கண்டுபிடித்தது அல்ல. இன்றைய உலகு தானே தேர்ந்துகொண்டதே.
முற்பட்ட வகுப்பார் ஓட்டை(யும்) வாங்கி ஆட்சியைப் பிடித்த மாயாவதி அசலான பின்நவீனத்துவ அரசியல்வாதி. தத்தமது கொள்கையை உடும்புப் பிடியாகப் பிடிக்கும் எந்த அரசியல்வாதியும் இன்றைய பின்நவீனகால வாக்காளர்களால் நிராகரிக்கப் படுவார். அதேபோல ஒரே ஒரு குடும்பத்தை முன்னிறுத்தினால் பின்நவீனத்துவ உலகில் வேலைக்காகாது என்று காங்கிரஸ் மற்றும் நாடெங்கும் உள்ள பிற கட்சிகளும் போகப்போகப் புரிந்துகொள்ளும்.
மேல் விவரங்களுக்கு: Oxford போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள 'Dictionary of Sociology' பார்க்கலாம். தமிழில் தமிழவன் தவிர மற்றவர்கள் நூல்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க!