Wednesday, 16 April 2008
பாரதி திரைப்படம் செய்திருக்கும் அநீதி!
இந்தப் பாடலில் மூன்றாவது சரணத்தில், கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? என்ற அடிக்கு அடுத்து மீண்டும் இரண்டாவது சரணத்தில் வரும்
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ?--இந்த ஞாலமும் பொய்தானோ?
என்ற அடிகளைச் சேர்த்துப் பாடல் முடிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உண்மையில் பாரதியார் எழுதியுள்ளதைப் பார்ப்போம்.
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?--இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே--நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்--இந்தக் காட்சி நித்தியமாம்.
கடைசி இரு அடிகளைக் குறிப்பாகக் கவனிக்க. கண்ணால் காணும் உலகமே மெய், வெறும் மாயையல்ல என்று இந்தப் பாடலில் அழுத்தம் திருத்தமாகப் பறை சாற்றுகிறார் பாரதியார்.
மூன்றாவது சரணம் பாதி வெட்டப்பட்டும், நான்காவது சரணம் விடப்பட்டும் பாடல் சிதைக்கப்பட்டு, சொல்லும் கருத்துக்கு நேர் எதிராகப் பொருள்படுமாறு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பாடல் படமாக்கப்பட்ட விதத்திலும், பாரதியார் மெய் மறந்து பாட்டுப்பாடியவாறு, கட்டியிருக்கும் வேட்டி இடுப்பிலிருந்து நழுவுவதைக்கூட உணராமல் அருவியில் நீராடுவது போலக் காட்டுவது புறவுலகில் அவர் அக்கரையின்றி இருந்ததாகக் கட்டமைக்கப்படுவதை மேலும் உறுதிசெய்ய உதவுகிறது.
இப்படி ஒருவர் கூறியதை அப்பட்டமாகத் திரித்து, அடியோடு மாற்றிக் காட்டுவது முற்றிலும் நேர்மையற்ற செயல். தேர்ந்த இயக்குனரான ஞான ராஜசேகரன் இப்படிச் செய்திருப்பது அக்கிரமம்!
Monday, 17 March 2008
குழந்தைகள் கடவுளுக்கு எழுதியவை
அன்புள்ள கடவுளுக்கு, மனிதர்களைச் சாக விட்டுவிட்டு, புதுசா செய்யறதுக்குப் பதிலா இப்ப இருக்கவங்களையே வச்சுக்கிட்டா என்ன?
ஜேன்
நீல்
அன்புள்ள கடவுளுக்கு, நான் நெனக்கிறேன், ஸ்டேப்ளர் கருவி உங்க கண்டுபிடிப்புகள்ளயே ரொம்பப் பெரிய விஷயங்கள்ல ஒன்னு.
ரூத் எம்.
அன்புள்ள கடவுளுக்கு, பைபிள் காலத்துல நெஜமாவே அப்படிதான் வினோதமாப் பேசிக்கிட்டாங்களா?
அன்புள்ள கடவுளுக்கு, நான் சிலசமயம் பிரார்த்தனை செய்யாதப்பக் கூட உங்களப் பத்தி நெனக்கிறேன்.
அன்புள்ள கடவுளுக்கு, நான் ஒரு அமெரிக்கன். ஆமா, நீங்க என்ன?
அன்புள்ள கடவுளுக்கு, வர்ர ஞாயித்துக்கிழமை சர்ச்சில என்னப் பார்த்திங்கன்னா என்னோட புது ஷூவைக் காட்டுவேன்.
அன்புள்ள கடவுளுக்கு, நாங்க திரும்பவும் பிறந்து வருவம்னா, என்ன ஜெனிஃபர் ஹார்ட்டனா ஆக்கிடாதே. எனக்கு அவளைப் பிடிக்காது.
அன்புள்ள கடவுளுக்கு, நீங்க மட்டும் டைனசார அழியவிட்டிருக்கலேன்னா எங்களுக்கு வசிக்க நாடே இருந்திருக்காது. நல்ல காரியம் செஞ்சிங்க.
Sunday, 16 March 2008
நாலே வரியில் பின்நவீனத்துவத்துக்கு மிக எளிய அறிமுகம்!
பின்நவீனத்துவம் என்ற பதம் தமிழ்வலையுலகில் அடிக்கடி அடிபடுவதைக் காண்கிறேன். சிலர் இச்சொல்லைப் பார்த்ததுமே கேலி செய்வதும் உள்ளது. இந்நிலையில் பின்நவீனத்துவம் பற்றி எனக்குத் தெரிந்தவரை ஒரு எளிய அறிமுகத்தைத் தருவது சிலருக்காவது (நான் உட்பட--உங்கள் எதிர்வினைகள் மூலம்) பயனளிக்கும் எனக் கருதியதன் விளைவே இந்த இடுகை.
பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, நாம் பின்நவீன உலகில்தான் வாழ்ந்துவருகிறோம் என்பதை எடுத்த எடுப்பில் கூறிக்கொள்கிறேன். உங்களைக் காக்க வைக்காமல் அந்த நாலு வரிகள் இதோ:
* பழைய காலம்: பெண் படிக்கக் கூடாது, வேலைக்குச் செல்லக் கூடாது என்று வீட்டுக்குள்ளே பூட்டி வைத்தது.
* நவீன காலம்: பெண் படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியது. வீட்டை மட்டும் ஒரு பெண் கவனித்துக்கொள்வது சற்று கேவலமாகப் பார்க்கப் பட்டது.
* பின்நவீன காலம்: வேலைக்குச் செல்வதோ வீட்டைக் கவனித்துக் கொள்வதோ தனிப்பட்ட பெண்ணின் விருப்பம்; இதில் கவனிக்க வேண்டியது அவளுக்குத் தேர்வு உரிமை (choice) இருக்கிறதா என்பதே என உணரப்பட்டது. வீட்டைக் கவனித்துக் கொள்வதும் அவசியமான உழைப்பாக மதிக்கப்பட்டது. அதே போல, ஒரு ஆண், குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதிலும் எந்தக் கேவலமும் இல்லை என்கிற தெளிவு ஏற்பட்டது.
ஆக, பின்நவீனத்துவம் நம் இன்றைய உலகைப் புரிந்துகொள்ள ஒரு முயற்சி மற்றும் எதிர்வினை என்று கூறலாம்.
இலக்கியத்தில் உதாரணம் பார்ப்போம்:
* பழைய காலம்: வாய்மொழி இலக்கியங்களில் மரம், மட்டை, விலங்குகள் எல்லாம் பேசின. இவை வெகு இயல்பாகக் கதையில் வந்து போயின.
* நவீன காலம்: அது எப்படிய்யா மரம் பேசும்? கதை என்றால் நம்பும்படியாக, யதார்த்தமாக (realistic) இருக்க வேண்டும் என்றது.
*பின்நவீன காலம்: யதார்த்தமாக எழுதப்படும் கதை என்பதும் எழுத்தாளரால் கவனமாகத் தன் கற்பனையில் கட்டி எழுப்பப் படுவதுதான். ஆக அவர் ஏன் தன் கற்பனைக்குத் தானே எல்லைக் கோடு போட்டு சிறையிட்டுக்கொள்ள வேண்டும்? கதையோட்டத்துக்குத் தேவைப்பட்டால் அதைமீறி மாய உலகைப் படைப்பதில் தவறில்லை என்ற புரிதல் விளைந்தது. Fantasy, science fiction, magical realism என்பவை தோன்றின. அதற்காக, மாய அம்சங்கள் இருந்தே ஆக வேண்டும் என வலியுறுத்துவதில்லை.
வரலாற்று ரீதியாக, இரண்டாம் உலகப் போருக்குப்பின் பழைய கொள்கைகளின் போதாமையால் ஏற்பட்டதே பின்நவீனத்துவம் என்ற தத்துவம். கட்டிடக்கலைதான் பண்டைக்காலக் கூறுகளை மீண்டும் பயன்படுத்தி இதற்கு அடிகோலியது.
பின்நவீனத்துவத்தின் குறிப்பிடத்தக்க பண்பு அது மனிதர்களிடையே காணப்படும் சகல வேறுபாடுகளையும் அங்கீகரிப்பது, ஏன், கொண்டாடுவது. இவற்றின் அடிப்படையில் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்வதில்லை. மேலும், இலக்கியம் போன்றவற்றில் சகலரும் ஏற்கக்கூடிய தர அளவுகோள்கள் இருப்பதாக ஏமாற்றிக்கொள்வதில்லை. நகுலனோ, பாலகுமாரனோ - ஒருவர் அடுத்தவரை விட இலக்கியத் தரத்தில் சிறந்தவர் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே 'எனக்கு இன்னாரைப் பிடிக்கிறது' என்று சொல்வதோடு உன் வேலை முடிந்தது என்கிறது. உம்பர்ட்டோ ஈகோவைப் படிப்பதால் நான் ராஜேஷ்குமாரைப் படிப்பவரைவிட ரசனை அதிகம் கொண்டவன் என எண்ணிக்கொண்டால் எள்ளி நகைக்கிறது பின்நவீனத்துவம். அதேவேளை எந்தக் கதை/கட்டுரை/கவிதை/சினிமா/நாடகம் ஆகியவற்றினூடாகச் செயல்படும் அரசியலைக் கேள்விக்குட்படுத்துகிறது.
இப்பொழுது பின்நவீனத்தின் மேலும் சில கூறுகளைப் பார்க்கலாம்:
* கலையில் கீழானது, மேலானது என்ற வகைப்பாடு ஒழிந்தது: நாதசுரம் மட்டுமே இசைத்து நிகழ்ச்சிகளைத் தொடங்குவது போய் பறையொலியுடன் இன்று விழாக்கள் ஆரம்பிக்கப் படுகின்றன. அதற்காகக் கர்நாடக இசையும் தூக்கி எறியப்படுவதில்லை. (சென்னை சங்கமம் நினைவிருக்கிறதா?)
* காமிக்ஸ்கள் இலக்கியமாக ஏற்கப்படுகின்றன. (Asterix போல)
Beatles உட்பட பாப், ராக், திரைப்படப் பாடல்கள் என ஜனரஞ்சகமான அனைத்தையும் காட்டுக்கூச்சலாகவே காணும் வெங்கட் சாமிநாதன் போன்றோர் நவீன காலத்திலேயே தேங்கிப் போயுள்ளதைக் காணலாம்.
* தீப்பெட்டிப் படங்கள், பள்ளி மாணவருக்கான சார்ட்டுகள், திரைப்பட போஸ்டர்கள் போன்றவை கலை வடிவங்களாக ஏற்கப்பட்டு சிலாகிக்கப் படுகின்றன.
பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சம், அது எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கையோ, கோட்பாடோ, சூத்திரமோ உலகைப் புரிந்துகொள்ள உதவும் என்பதை நிராகரிக்கிறது. இதை நாமும் நடைமுறையில் பார்க்கிறோம். நவீன கால சூத்திரப்படிப் பார்த்தால் இடதுசாரிகள் முதலாளிகளுக்கு எதிரானவர்கள். இன்றைய பின் நவீனத்துவ உலகிலோ, நந்திகிராமில் கம்யூனிஸ்டுகள் முதலாளிக்கு ஆதரவாக விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, வலதுசாரியாக இருக்க வேண்டிய பாரதீய ஜனதா விவசாயிகளுக்காகப் போராடுகிறது! கம்யூனிஸ்டு நாடான சைனா தனியார் முதலீட்டில் முன்னிலையில் இருக்கிறது.
இலங்கையில் அன்பையே போதிக்கும் புத்தமதத்தைச் சேர்ந்த சந்நியாசிகளே தமிழரை ஒடுக்குவதில் முன்னிற்பதையும் பார்க்கிறோம்.
எந்தத் தனி ஒருவரிடமும்--அது காந்தியோ, ஏசுவோ, வள்ளுவரோ, ராமானுஜரோ, நபிகளோ, மார்க்ஸோ, பெரியாரோ, ஜெயலலிதாவோ, ஸ்டாலினோ (இதில் ஜோஃசப்போ, மு.க. வோ)--நம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளோ, எல்லாக் கேள்விகளுக்கும் விடைகளோ கிடைக்கும் என்பதை பின்நவீனத்துவம் ஒத்துக்கொள்ளவில்லை. இவர்கள் எல்லார் சொன்னதிலும் அவரவர் சூழ்நிலைக்கேற்ற சில தீர்வுகள் இருக்கலாம் என்பதை ஏற்கிறது.
இன்று WTOவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைப் பாருங்கள்: இடதுசாரிகள், சூழலியளாலர்கள், மாணவர்கள், மனித உரிமையாளர்கள், பெண்ணியவாதிகள் என ஒரு கலவையான திரளைப் பார்க்கலாம். ஒருவர் 'WTO திமிங்கலங்களைக் கொல்கிறது' என்ற அட்டையை ஏந்தி வந்ததைப் பார்த்திருக்கிறேன். பின்நவீன உலகின் போராட்டங்கள் இப்படித்தான் இருக்கும்.
தனி மனித ஒழுக்கத்தைப் பொறுத்தவரை எல்லோருக்குமான ஒழுக்கவிதி என்று எதுவும் இருக்க முடியாது. அடுத்தவரைப் பாதிக்காதவரை அது அவரவர் பாடு. ஒருவர் தனி அறைக்குள் புகைபிடித்தால் அதில் ஒழுக்கக்கேடு எதுவும் இல்லை; அதே புகையை அடுத்தவர் சுவாசிக்கும்படி செய்து புற்றுநோயைப் பரிசளித்தால் அது ஒழுக்கக்கேடு ஆகும்.
மொத்ததில் மிக அதிக ஜனநாயகப் பண்பு உடைய தத்துவமே பின்நவீனத்துவம் ஆகும். இது யாரும் உட்கார்ந்து யோசித்துக் கண்டுபிடித்தது அல்ல. இன்றைய உலகு தானே தேர்ந்துகொண்டதே.
முற்பட்ட வகுப்பார் ஓட்டை(யும்) வாங்கி ஆட்சியைப் பிடித்த மாயாவதி அசலான பின்நவீனத்துவ அரசியல்வாதி. தத்தமது கொள்கையை உடும்புப் பிடியாகப் பிடிக்கும் எந்த அரசியல்வாதியும் இன்றைய பின்நவீனகால வாக்காளர்களால் நிராகரிக்கப் படுவார். அதேபோல ஒரே ஒரு குடும்பத்தை முன்னிறுத்தினால் பின்நவீனத்துவ உலகில் வேலைக்காகாது என்று காங்கிரஸ் மற்றும் நாடெங்கும் உள்ள பிற கட்சிகளும் போகப்போகப் புரிந்துகொள்ளும்.
மேல் விவரங்களுக்கு: Oxford போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள 'Dictionary of Sociology' பார்க்கலாம். தமிழில் தமிழவன் தவிர மற்றவர்கள் நூல்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க!
Saturday, 15 March 2008
தமிழ்நாட்டில் அமைதியாக ஒரு கல்விப் புரட்சி
பத்தி: பிறவழிப் பயணம்
விஜயகுமார் சார்,உங்களை வணங்குகிறேன்!
ரவிக்குமார்
தாரே ஸமீன் பர் படத்தைப் பார்த்தபோது மீண்டும் அந்தக் கேள்வி எனக்குள் எழுந்தது. 'ஏன் இப்படியொரு படம் தமிழில் வரவில்லை?' ஓம் சாந்தி ஓம் படத்தைப் பார்த்தபோது தோன்றிய கேள்வி அது. அண்மைக் காலமாக என் மகன் ஆதவனின் தயவில் நல்ல சில ஆங்கிலப் படங்களையும் இந்திப் படங்களையும் பார்த்துவருகிறேன். தாரே ஸமீன் பர் படமும் அப்படித்தான் பார்க்க வாய்த்தது.
தாரே ஸமீன் பர் படத்தின் கதையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்: மூன்றாம் வகுப்பில் இரண்டாம் ஆண்டாகப் படிக்கும் இஷானுக்கு எழுதப் படிக்க வரவில்லை. குருவி, நாய், மீன் என்று அவனது உலகம் வேறுபட்டதாக இருக்கிறது. கரும்பலகையில் எழுதப்படும் எழுத்துகள் நடனமாடுகின்றன. எதைப் படித்தாலும் மறந்துவிடுகிறது. ஆசிரியர் சொல்வதும் அவனுக்குப் புரிவதில்லை. ஆனால், ஓவியம் தீட்டுவதில் அபாரமான திறமை கொண்டவனாக இருக்கிறான் இஷான்.
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்த ஆரம்பிக்கிறார், இஷானின் கற்பனை உலகு திறந்துகொள்கிறது. ராக்கெட்டில் ஏறிப் பால்வீதிகளில் பயணம் செய்கிறான், கிரகங்களைப் பந்தாடுகிறான். அவனது கற்பனையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ஆசிரியர் அவனை வகுப்பைவிட்டு வெளியேற்றுகிறார். வகுப்பறையைவிட அது அவனுக்குப் பிடித்தமாயிருக்கிறது.
மகனின் எதிர்காலத்தை நினைத்து இஷானின் அப்பா அவனைக் கண்டிப்பு மிகுந்த ஒரு போர்டிங் ஸ்கூலில் கொண்டுபோய்ச் சேர்க்கிறார். அங்கு டெபுடேஷனில் ஓவிய ஆசிரியராக வருகிறார் ஆமிர்கான். மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான சிறப்புப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் அவருக்கு இஷானின் பிரச்சினை என்னவென்பது புரிகிறது. 'டிஸ்லெக்ஷியா' என்னும் குறைபாட்டால் அவன் பாதிக்கப்பட்டிருப்பதை அவர் உணர்கிறார். ஆசிரியர்களின் முரட்டுத்தனமும் சக மாணவர்களின் கேலியும் இஷானைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருப்தைப் புரிந்துகொண்டு, அவனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அதேவிதமான சிக்கலுக்கு ஆளாகிச் சரியாகப் படிக்க முடியாவிட்டாலும் தங்களது தனித் திறமையால் உலகப் புகழ்பெற்ற பலரைப் பற்றி இஷானுக்குச் சொல்கிறார். தானும் அப்படித்தான் என்கிறார். இஷான் அதுவரை தனக்குத்தானே போட்டுக்கொண்டிருந்த வேலி விலகுகிறது. ஆமிரின் முயற்சியால் அவனது படிப்பிலும் முன்னேற்றம் உண்டாகிறது. பள்ளியில் நடைபெறும் ஓவியப் போட்டியில் தனது ஓவிய ஆசிரியரான ஆமிர்கானையும் தோற்கடித்து முதல் பரிசு பெறுகிறான் இஷான். இந்தக் கதையை மிகையில்லாமல் அழுத்தமாகப் படமாக்கியிருக்கிறார் ஆமிர்கான். இது அவர் இயக்கியிருக்கும் முதல் படமாம். நம்ப முடியவில்லை.
தாரே ஸமீன் பர் படத்தைப் பார்த்து அத்வானி அழுததாக ஒரு செய்தியைப் படித்தேன். அத்வானி மட்டுமல்ல, நரேந்திர மோடிகூட அந்தப் படத்தைப் பார்த்தால் அழுதுவிடுவார். மனத்துக்குள் ஊடுருவி அன்பை அடைத்துவைத்திருக்கும் தாழைத் திறந்துவிடுகிறது அந்தப் படம். அந்த மாயாஜாலம் இஷானாக நடித்திருக்கும் குட்டிப்பையனின் சிரிப்பில் இருக்கிறதா அல்லது மிக நுட்பமாய் மாறும் ஆமிர்கானின் முகபாவங்களில் இருக்கிறதா எனக் கண்டுபிடிப்பது சிரமம்.
தாரே ஸமீன் பர் பார்த்த பிறகு எனக்குள் இரண்டு கேள்விகள் தோன்றின. தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதிப்பேருக்கு ஒன்றாம் வகுப்புப் பாடங்களைக்கூடப் படிக்கத் தெரியவில்லையே அவர்களெல்லாம் 'டிஸ்லெக்ஷி'யாவால் பாதிக்கப்பட்டவர்களா? அவர்களைச் சரிசெய்ய வேண்டுமென்றால் அந்தப் படத்தில் காட்டப்படுவது போன்ற சூழல்கொண்ட போர்டிங் பள்ளிகள் இருந்தால்தான் முடியுமா?
சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 5,768 பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே ரிப்போர்ட்டை அண்மையில் படிக்க நேர்ந்தது. 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அந்த சர்வே சில அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் அறுபது சதவீதம் பேர்தான் தமிழைப் படிக்கக் கூடியவர்கள். ஆங்கிலத்தைப் படிக்கத் தெரிந்தவர்கள் வெறும் பதினைந்து சதவீதம் பேர்தான் என அந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலையோ இன்னும் மோசம். அந்தப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஐம்பது சதவீதம் பேர்தான் தமிழைப் படிக்கத் தெரிந்தவர்கள், ஆங்கிலத்தைப் படிக்கத் தெரிந்தவர்களோ வெறும் பத்து சதவீதம் மாணவர்கள் மட்டும்தான்.
அரசாங்கப் பள்ளிகளிலும் ஆதிதிராவிட நலப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் இப்படி இருக்கக் காரணமென்ன? அந்த சர்வேயில் அதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே ஆசிரியர் இருக்கும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்து காணப்படுகிறது. அத்தகைய வசதி இருப்பதால்தான் அரசு உதவிபெறும் (நிஷீஸ்t ணீவீபீமீபீ sநீலீஷீஷீறீs) பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒப்பீட்டளவில் சுமாராக இருக்கின்றனர் என்று அந்த 'சர்வே' தெரிவிக்கிறது.
திரு. விஜயகுமார் சென்னை மாநகராட்சிக்குக் கமிஷனராக நியமிக்கப்பட்ட பிறகு அவர் தனது வேலூர் அனுபவத்தைச் சென்னையிலும் சோதித்துப் பார்க்க விரும்பினார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நான்குபேரும் இருபத்தாறு ஆசிரியர்களும் அடங்கிய குழு ஆந்திராவில் உள்ள ரிஷி வாலி (ஸிவீsலீவீ க்ஷிணீறீறீமீஹ்) பள்ளிக்கு அனுப்பப்பட்டுப் பயிற்சி பெற்றுத் திரும்பியது. பலமுறை அவர்கள் பயிற்சி பெற்றனர். அந்தப் பள்ளியில் பாடங்கள் சிறு சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் குழந்தைகள் தாமாகவே அவற்றைக் கற்றுக்கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கவனித்தனர். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் 'செயல்வழிக் கற்றல்' முறையாகும்.
ரிஷி வாலியில் பயன்படுத்தப்பட்டுவந்த முறையை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் தமிழகக் குழுவினர் அதை அற்புதமாக மேம்படுத்திவிட்டனர். ஆங்கிலம் பயிற்றுவிப்பது அதில் சேர்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களும் சேர்க்கப்பட்டன. கணிதப் பாடத்தைக் கற்றுத்தர முப்பரிமாணமுள்ள பொருள்களைப் பயன்படுத்தியது நமது ஆசிரியர்களின் புதுமையான கண்டுபிடிப்பாகும். முதலில் இது பதின்மூன்று பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2004ஆம் ஆண்டில் அதை 264 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தினார்கள்.
செயல்வழிக் கற்றல் முறை எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்த்தால்தான் புரியும். கடந்த ஜனவரி 11ஆம் தேதி நான் திருவான்மியூர் குப்பத்தில் உள்ள மாநகராட்சித் தொடக்கப் பள்ளிக்குச் சென்றிருந்தேன். நான் போகும்போது மாலை நான்கு மணி ஆகிவிட்டது. மாணவர்கள் களைத்துப் போயிருப்பார்கள். பள்ளி முடியும் நேரம். இப்போது போய்த் தொந்தரவு செய்கிறோமே என்ற குற்ற உணர்வோடுதான் போனேன். ஆனால், பள்ளி முழுவதும் நிசப்தம். வகுப்பறைக்குச் சென்றேன். மாணவர்கள் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவரவர்கள் தங்களது வேலைகளில் மூழ்கி இருந்தனர். ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி செய்தித்தாளை வைத்து அதில் சில எழுத்துகளைச் சுற்றிக் கட்டம் போட்டுக்கொண்டிருந்தார். 'என்ன செய்கிறாய்?' என்று கேட்டேன். தனக்குத் தெரிந்த எழுத்துகள் எவையெவை அதில் இருக்கிறன என்று பார்த்து அவற்றைச் சுற்றிக் கட்டம் போடுவதாக அந்த மாணவி சொன்னார். அந்த எழுத்தைப் படித்துத் தன்னிடம் உள்ள அட்டையில் அது எங்கே இருக்கிறது என்பதையும் அவர் அடையாளப்படுத்திக்கொள்கிறார். அதன் பிறகு மூன்று எழுத்துகளாலான சிறு சிறு சொற்களை அவர் கரும்பலகையில் எழுதுகிறார்.
வகுப்பறையின் தோற்றமே மாறியிருந்தது. மாணவர்கள் சிறு சிறு குழுக்களாகத் தரையில் விரிக்கப்பட்டுள்ள பாயில் அமர்ந்திருக்கிறார்கள். அந்தக் குழுவில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் இருக்கின்றனர். இதுவரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு வகுப்பறை என இருந்தது. அந்த முறை இப்போது இல்லை. வகுப்பறைகள் குழுக்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே குழுவில் பல வகுப்பு மாணவர்களும் இருப்பதால் நான்காம் வகுப்பு மாணவி முதல் வகுப்பு மாணவிக்குச் சொல்லிக்கொடுக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆசிரியர்களின் 'சுமை' பெருமளவில் குறைந்துவிட்டது மட்டுமின்றி மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கான அறிவின் ஆதாரமாக (sஷீuக்ஷீநீமீ ஷீயீ ளீஸீஷீஷ்றீமீபீரீமீ) ஆசிரியர்கள் மட்டுமே இருந்துவந்த நிலையும் மாறிவிட்டது. அவர்கள் மாணவர்களோடு சேர்ந்து தாங்களும் கற்பதற்கு இது வழிவகுத்திருக்கிறது. இதில் கையாளப்படும் 'ஏணி முறை' மாணவர்கள் தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்துகொள்ளவும் உதவியாக உள்ளது. இன்னொரு வகுப்புக்குச் சென்று பார்த்தேன். அங்கே கம்ப்யூட்டர்களில் பலவித 'கேம்களை' மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். கணக்கு, சமூக அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களைப் பயிற்று விக்கும்விதமாக அந்த 'கேம்கள்' வடிவமைக்கப்பட்டிருந்தன.
கணிதம் எந்த அளவுக்கு அவர்களுக்குத் தெரிகிறது என்பதைச் சோதித்துப் பார்க்க விரும்பினேன். ஒரு அட்டையில் எண்கள் எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொரு எண்ணின் மதிப்புக்கு ஏற்ப அது எழுதப்பட்ட கட்டத்தில் குச்சிகளை வைக்க வேண்டும். இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவரிடம் அதைச் சோதித்தேன். முதலில் ஏழு என்று எழுதப்பட்ட கட்டத்தில் குச்சிகளை வைக்கச் சொன்னேன். அவர் வைத்தார். அடுத்து ஐந்து, அப்புறம் எட்டு. அடுத்து பூஜ்யம் என்று எழுதப்பட்ட கட்டத்தில் அதன் மதிப்புக்கு ஏற்பக் குச்சிகளை வைக்கச் சொன்னேன். உடனே அந்த மாணவி ஒரு டப்பாவை எடுத்தார். அதில் மணிகள் இருந்தன. அதை என்னிடம் கொடுத்தார். இன்னொரு டப்பாவில் எண்கள் எழுதப்பட்ட சிறு சிறு அட்டைகள் இருந்தன. அதிலிருந்து ஐந்து என்று எழுதப்பட்ட அட்டையை எடுத்து என்னிடம் கொடுத்து அதன் மதிப்புக்கு மணிகளைக் கொடுக்கச் சொன்னார். நான் எண்ணி அவரிடம் தந்தேன். அப்புறம் ஒன்பதைக் கொடுத்தார். நானும் மணிகளை எண்ணி அவரிடம் தந்தேன். அதன் பிறகு பூஜ்யம் என்று எழுதப்பட்ட அட்டையை என்னிடம் கொடுத்து அதன் மதிப்புக்கு மணியைத் தரும்படி கேட்டார். நான் திகைத்து நின்றேன். அப்போது அந்த மாணவி சொன்னார். 'பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை. அதனால்தான் நான் பூஜ்யம் என்று எழுதப்பட்ட கட்டத்தில் குச்சிகளை வைக்கவில்லை' எனது திகைப்பு அடங்க நீண்ட நேரம் ஆனது. நான் பார்க்கும் இந்த வகுப்பறை கனவா அல்லது நிஜமா என்று வியப்பாயிருந்தது. அருகில் இருந்த குழுவில் நான்காம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவர் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார். அவரை எப்படியாவது திக்குமுக்காடச் செய்துவிட வேண்டும் என்ற நினைப்பில் மூன்று இலக்க கணக்கு ஒன்றைத் தந்து போடச் சொன்னேன். ஒரே நிமிடத்தில் அதைப் போட்டு விடையை எழுதிக் காண்பித்தார். அவர் எழுதியது சரியா என்று பார்க்க எனக்கோ கால்குலேட்டர் தேவைப்பட்டது.
திருவான்மியூர் குப்பம் பள்ளியில் நான் கழித்த அந்த ஒரு மணி நேரத்தை மறக்கவே முடியாது. அந்தப் பிள்ளைகள் பள்ளி நேரம் முடிந்துவிட்டதாகவோ வீட்டுக்குப் போக வேண்டும் என்பதாகவோ எவ்வித நினைப்பும் இல்லாமல் படிப்பில் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு நான் படித்த ஆரம்பப் பள்ளியின் ஞாபகம் வந்தது. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளியில் மணி அடிக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டிருந்தது. பள்ளிக்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஒரு தண்டவாளத் துண்டுதான் மணி. என்மீதிருந்த அபிமானத்தால் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை நம்பி அந்த மாபெரும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். மணி அடிப்பதில் வகுப்பு முடியும் மாலை நேரமே முக்கியமானது. கடிகாரத்தை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். நான்கு மணி ஆனதும் பெல் அடித்துவிட வேண்டும் என்பது எனக்கு இடப்பட்டிருந்த கட்டளை. நான்கு மணி நெருங்க ஆரம்பித்தாலே எனக்குப் பதற்றம் கூடிவிடும். பாடத்தை கவனிக்க முடியாது. கடிகாரத்திலேயே கண்கள் பதிந்திருக்கும். சின்ன முள் நான்கை நெருங்கும், பெரிய முள் பன்னிரெண்டைத் தொட்டதும் அம்புபோலப் பாய்ந்து சென்று மணியை அடிப்பேன். அடித்து முடிப்பதற்குள் என்னைத் தள்ளிக்கொண்டு பள்ளி மொத்தமும் ஓவென்ற கூச்சலோடு வெளியில் பாயும். பள்ளியிலிருந்து தப்பித்து ஓடும் மாணவர்களின் கும்மாளத்தில் புழுதி பறக்கும். இப்போதும் கிராமங்களில் அத்தகைய காட்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், திருவான்மியூர் குப்பம் பள்ளியில் அதை நாம் காண முடியவில்லை. அங்கே பள்ளி முடிந்ததைச் சொல்லி மாணவர்களைப் பெற்றோர்கள் வற்புறுத்தி அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. பள்ளி ஏன்தான் முடிகிறதோ என்னும் ஏக்கத்தோடு மாணவர்கள் வீடுகளுக்குப் போகிறார்கள்.
மாற்றுக் கல்விமுறை குறித்த தேடல் எனக்குக் கடந்த பதினைந்தாண்டுகளாகவே இருந்துவந்தபோதிலும் அத்தகைய கல்விமுறையை நடைமுறைப்படுத்தும் பள்ளிகள் எதையும் நான் பார்த்ததில்லை. தொண்ணூறுகளில் பேராசிரியர் கல்யாணியின் முன்முயற்சியில் 'மக்கள் கல்வி இயக்கம்' உருவாக்கப்பட்டு அதில் இணைந்து வேலை செய்தபோதுதான் பாவ்லோ ஃப்ரேயரின் நூல்களை நான் படித்தேன். அந்த நூல்கள் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தின. அவற்றைத் தொடர்ந்துதான் அகஸ்தோ போவாலின் 'இன்விசிபிள் தியேட்டர்' தொடர்பான நூல்களையும் படித்தேன். மாற்றுக் கல்வி, இன்விசிபிள் தியேட்டர் முதலியவை குறித்துச் சில விவாதங்களைப் புதுச்சேரியிலும் திண்டிவனத்திலும் நண்பர்களோடு இணைந்து ஏற்பாடு செய்தேன். பாவ்லோ ஃப்ரேயரின் கருத்தாக்கம் எங்களது அரசியல் நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிகாரப் படிநிலைகள் பற்றிய பார்வை அதனால் கூர்மையடைந்தது. நாங்கள் நடத்திய கருத்தரங்குகளைக்கூட வட்டவடிவில் அமைத்தோம், உரைகளின் இடத்தில் உரையாடல்களை வைத்தோம். அதிகாரம் பற்றிய எச்சரிக்கையுடனேயே எந்தவொரு காரியத்தையும் செய்தோம். மிஷேல் ஃபூக்கோவின் கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்ள பாவ்லோ ஃப்ரேயரும் அகஸ்தோ போவாலும் ஒரு வகையில் எனக்கு உதவியாக இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
திருவான்மியூர் குப்பம் பள்ளியைப் பாவ்லோ ஃப்ரேயர் பார்த்தால் அசந்துபோய்விடுவார். இதைப் பிரேசில் நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நிச்சயம் அவர் ஆசைப்படுவார் என எனக்குத் தோன்றியது. ஃப்ரேயர் வலியுறுத்திய அதிகாரச் சமநிலை செயல்வழிக் கற்றல் முறையில் செயல்படுகிறது. ஆசிரியருக்குத்தான் எல்லாம் தெரியும் மாணவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்ற மனோபாவத்தை அது மாற்றுகிறது. இந்தப் பயிற்று முறையைச் செயல்படுத்துவதில் திரு. எம்.பி. விஜயகுமாருக்கு அற்புதமான ஒரு 'டீம்' உதவியாக இருக்கிறது. அதில் மாலதி, பிச்சை, ரத்னவேலு மற்றும் சண்முகம் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் திரு. தங்கம் தென்னரசு அவர்களிடம் எனது அனுபவத்தைச் சொன்னபோது என்னைவிடக் கூடுதலான வியப்போடு அவர் தனது அனுபவத்தை விவரித்தார். ஒரு நல்லகாரியத்தைச் செய்கிறோம் என்கிற பெருமிதம் அவரது குரலில் தெரிந்தது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மௌனமாக ஒரு புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் புரட்சி தமிழகத்தின் எதிர்காலத்தையே பிரகாசமானதாக மாற்றப்போகிறது. தாரே ஸமீன் பர் படத்தில் வரும் போர்டிங் ஸ்கூலைப் போன்ற தோற்றத்தில் இல்லாவிட்டாலும் அதே தன்மையில் நமது அரசுப் பள்ளிகள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஆமிர்கானைப் போலப் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் அந்தப் பள்ளிகளில் இப்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மாணவர்களோடு சேர்ந்து ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், வரைகிறார்கள். கற்பிக்கிறார்கள், தாங்களும் கற்றுக் கொள்கிறார்கள். இந்த மாற்றத்தால் அதிகம் பயனடையப் போகிறவர்கள் அரசுப் பள்ளிகளையே நம்பியிருக்கும் தலித் மாணவர்கள்தாம்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 51% மாணவர்களுக்கு முதல் வகுப்புத் தமிழ் பாடத்தைக்கூடப் படிக்கத் தெரியவில்லையென்று ப்ராதம் (Pratham) நிறுவன அறிக்கை (ASER 2007) கூறியிருக்கிறது. 57% மாணவர்களுக்குக் கழித்தல் கணக்கை எப்படிப் போடுவதெனத் தெரியவில்லை, 89% மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தைக்கூடப் படிக்கத் தெரியவில்லை என அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். இனி அந்த நிலை இருக்காது. அடுத்த ஆண்டுக்கான 'ப்ராதம்' அறிக்கை தமிழகக் கல்விச் சூழலில் நிகழ்ந்துவரும் அதிசயத்தை உலகத்துக்கு எடுத்துச் சொல்வதாயிருக்கும் என்பது உறுதி. திரு. எம்.பி. விஜயகுமார் அவர்களை இதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். திருவான்மியூர் குப்பம் பள்ளியைப் பார்த்து விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, அவர் என்னிடம் செல்ஃபோனில் பேசினார். எனது அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்வதில் அவருக்கிருந்த தவிப்பு அவரது குரலில் தளும்பியது. "சார் உங்கள் பணியைப் பாராட்ட வேண்டும்" என்றேன். ''நான் என்ன செய்துவிட்டேன் ரவிக்குமார். எனக்கு அரசாங்கம் சம்பளம் தருகிறது. அதற்கு நான் வேலை செய்கிறேன். அவ்வளவுதான்'' என்றார் அவர். தமிழகத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டிருக்கும் அவரது கைமாறு கருதாத பணியைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை என்பதுதான் உண்மை.
'விஜயகுமார் சார், உங்களை வணங்குகிறேன்!'
நன்றி: காலச்சுவடு, இதழ் எண் 98 (http://www.kalachuvadu.com/issue-98/page72.asp)
Friday, 14 March 2008
மல்லிக்குப் பேர் வச்சாச்சு!
பதிவின் பெயர் மாறிவிட்டாலும், innomado (ஸ்பானிஷ் மொழியில் பெயர் இல்லை என்று அர்த்தம்) என்ற முகவரியில் தற்போதைக்கு மாற்றமில்லை. அதே போல உருப்படியான விஷயங்களைத் தரவேண்டும் என்ற ஆவலிலும்.
சரி, இன்றைய உருப்படியான விஷயமாக இப் பொன்மொழிகளைக் கூறி முடிக்கிறேன்:
பெயரிலியாய் இருப்பதைவிட அறிவிலியாய் இரு!
அனானியாய் இருப்பதைவிட அஞ்ஞானியாய் இரு!
Thursday, 13 March 2008
மென் திறன்களை (soft skills) க் கேட்பது அநியாயம்!
சரியான முறையில் புன்னகைப்பது, ஆங்கிலத்தில் உரையாடுவது, விளக்கவுரை (presentation) தருவது, கடிதம் வரைவது என்று ஆரம்பித்து சமயோசிதமாகப் பேசுவது, உடல் மொழி, முள் கரண்டியைச் சரிவரப் பிடிப்பது வரை இதில் எதை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
எனக்கு என்ன சந்தேகம் என்றால், கல்வி இன்று ஓரளவு பரவலாக்கப்பட்ட நிலையில், சமூகத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்கள், கீழே இருக்கும் பிற்பட்டவர்கள், தலித்துகள், பெண்கள், கிராமப்புரத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் போன்றவர்களை மேலேறி வந்துவிடாமல் தடுக்க இதனை ஒரு வசதியான சாக்காகப் பயன்படுத்துகிறார்களோ என்பதுதான்.
துறை சார்ந்த விஷயங்களைக் கற்றுத்தேர்ந்த ஒருவரை, 'உன் ஆங்கில உச்சரிப்பு சரியில்லை, உனக்கு சரியாக 'டை' கட்டத் தெரியவில்லை, உன் கை குலுக்கலில் அழுத்தம் குறைவாக (அல்லது அதிகமாக) உள்ளது என்று கூறி, வாய்ப்பை மறுக்க முடியும். இது நடந்துகொண்டும் வருகிறது.
நான் கேட்கிறேன், கடிதிறன்களையே கற்றுத் தேர்ந்த ஒருவருக்கு மென் திறன்களைக் கற்றுக் கொள்வது கடினமானதா என்ன? அதற்குறிய சூழல் அவருக்கு அமைந்திருக்கவில்லை என்பதே சரி. இந்நிலையில் மென் திறன்களைக் காரணம் காட்டி, துறையறிவு பெற்ற ஒருவரைப் புறந்தள்ளுவது ஒரு நிறுவனத்தின் நலனுக்குத்தான் நாளடைவில் எதிராக முடியும்.
நான் யாரும் எந்த உபயோகமான திறனையும் கற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. அதற்கு நிறுவனங்களே வாய்ப்பளிக்கலாமே. தேவைப்பட்டால் அவ்வப்போது 'மென்திறன் பட்டறை'களை நடத்துங்கள். உடனே இன்றைய அவசர யுகத்தில் இதற்கெல்லாம் நேரமில்லை என்பார்கள். மனமில்லை என்பதே சரி.
இதுதான் சாக்கு என்று மென் திறன் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போலப் பெருகிவருகின்றன. அன்று ஆங்கிலப் பயிற்சி தருவதாகக் கூறியவர்கள் இன்று 'Soft Skills Training' என்கிறார்கள். என்ன கற்றுத் தருகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ஏற்கனவே கல்லூரியில் கற்பது வேலைவாய்ப்புக்கு அதிகம் பயன் படாததால் (துறை சார்ந்தே) வெளியில் கூடுதல் பயிற்சி பெற வேண்டிய நிலை உள்ளது. அதற்கும் மேலாக ஆங்கிலப் பயிற்சி, மென் திறன் பயிற்சி என்று போய்க் கொண்டே இருக்க வேண்டிய பரிதாப நிலையில் பலரும் உள்ளனர்.
அந்தக்காலத்தில் மட்டும் பொறியாளர்கள், மேலாளர்கள், விற்பனையாளர்கள், சந்தையாளர்கள் போன்றவர்கள் இல்லையா என்ன? அவர்கள் இப்படித்தான் பயிற்சி எடுத்தார்களா அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்டார்களா?
என் கருத்தை எழுதிவிட்டேன்...உங்கள் கருத்துக்கு இருக்கவே இருக்கிறது பின்னூட்டம்.
Wednesday, 12 March 2008
'உங்கள் ஊரில் யாரும் கர்ப்பமே ஆகவில்லையா?'
இந்திரா காந்தி கொல்லப்பட்டது, எம்ஜியார் நலம் குன்றி இருந்தது ஆகிய இரட்டை அனுதாப பலம் காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு. திமுக பக்கம், ஏழாண்டு எம்ஜியார் ஆட்சியும், நான்காண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியும் தரக்கூடிய anti-incumbency factor. நான் அப்போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். என்னைப்போன்ற வயதினருக்கு, விவரம் தெரிந்த நாள் முதல் எம்ஜியார் ஆட்சியைப் பார்த்துவரும் சலிப்பு. அப்போதெல்லாம், பொதுவாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி மேல் மிகப்பெரிய அபிமானம் காணப்பட்டது. கலைஞர் அறிவாளி, இலக்கியவாதி; எம்ஜியார் 'வெறும்' திரைப்பட நடிகர்தானே என்ற எண்ணம் எங்களிடம் இருந்தது. எம்ஜியார் ஆட்சியில் இலவசத் திட்டங்கள் சத்துணவில் ஆரம்பித்து (நியாயமான இலவசம்) இலவச பிளாஸ்டிக் வாளி (தண்ணீர் பஞ்சத்துக்கு நிவாரணம்!), இலவச வேட்டி - சேலை என்று தொடர்ந்து, இலவச பல்பொடி வரை வந்திருந்தன. இது இப்படி இருக்க, அப்போதெல்லாம் 21 வயது நிரம்பியவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. ஓட்டுரிமை 18 வயது நிறைந்தவர்களுக்கு அளிக்கப் பட்டிருந்தால், 84-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் சற்றேனும் மாறியிருந்திருக்க வாய்ப்புண்டு.
எம்ஜியார் மருத்துவமனையில் இருந்ததால் அதிமுகவினர் எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கியைக் கட்டி, 'இறைவா உன் கோயிலிலே, எத்தனையோ மணி விளக்கு' என்ற பாடலை ஓயாமல் ஒலிபரப்புவார்கள். அதில் கடைசியில் 'இறைவா ஒரு ஆணையிடு, ஆணையிடு' என்று வரும். அதைத்திரித்து ஒரு பையன் இப்படிப் பாடினான்:
இறைவா ஒரு ஆணையிடு!
இந்தப் பாடல் அனைவருக்கும் பிடித்துப்போயிற்று!
அப்பொழுது வானொலியில் தினமும் ஒரு தலைவருக்கு பிரச்சாரம் செய்ய 10 நிமிடங்கள் தரப்பட்டன. கொடைக்கானல் டிவி ஒளிபரப்பு ஆரம்பித்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். எப்படியும் தென் மாவட்டங்களில் டிவி இப்போது போல எல்லாவீட்டிலும் இருக்கும் பொருளாக மாறியிராத காலம். ரேடியோதான் பரவலான தகவல் தொடர்பு சாதனம்.
பிரச்சார ஒலிபரப்பில் கலைஞரின் முறை. தனது வழக்கமான கிண்டலோடு அவர் பேசிய அந்தப் பேச்சு இளைஞர்களை மிகவும் கவர்ந்தது. அதில் கலைஞர், 'கர்ப்பினிப் பெண்களுக்கு உதவித்தொகை தருவதாகச் சொன்னார்களே, உங்கள் ஊரில் யாருக்காவது கிடைத்ததா? அப்படியானால் உங்கள் ஊரில் யாரும் கர்ப்பமே ஆகவில்லையா?' என்று கேட்டார். அந்த வரிகள் ரொம்பப் பிரபலமாயின. அதே பேச்சில், 'வீட்டுக்கொருவருக்கு வேலை கொடுக்கிறேன் என்றார்களே, திருச்செந்தூர் முருகனின் தங்க வேலையும், திருத்தணி முருகனின் வைர வேலையும் தொலைத்தார்களே தவிர, யாருக்காவது வேலை கொடுத்தார்களா?' என்றும் கேட்பார். இது ஒரு மலிவான சிலேடையாக அப்போதே எனக்குத் தோன்றினாலும், கேட்பவர்கள் மனதில் பதிந்தது உண்மை. கிடைத்த 10 நிமிடங்களில் நறுக்கென நாலு வார்த்தை பேசுவதே நோக்கம் என்னும் போது அதை அவர் நன்றாகவே சாதித்தார். மற்ற கட்சிகளின் சார்பில் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்று அப்போதோ மறந்துபோய்விட்டதே!
நான் மேல்நிலை படித்தது நாடார் சமுதாயத்தினர் நடத்தும் ஒரு பள்ளியில். அங்கு எந்த விழாவாக இருந்தாலும் காமராஜர் படமொன்றை வண்ண விளக்குகளால் அலங்கரித்து வைப்பார்கள். ஆரம்பத்தில் இது எனக்குக் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தது. காமராஜர் பெரிய தலைவர்தான், சரி. ஆனால், தேசத்தலைவர்கள் என்று வரும்போது 'காந்தி, நேரு...' என்றுதானே தொடங்குவது வழக்கம்? எல்லோரையும் விட்டுவிட்டு, இடையில் புகுந்து காமராஜருக்கு மரியாதை செய்வது ஏன் என்று அப்பாவித்தனமாக நினைத்துக்கொள்வேன்! இத்தனைக்கும் காமராஜர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று எனக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும், தேசத்தலைவர்களுக்கெல்லாம் சாதி பார்க்க முடியும் என்ற கருத்தாக்கமே என்னிடம் உருக்கொண்டிருக்கவில்லை.
அங்கும் மாணவர்களுக்குக் கலைஞர் என்றாலே தனி மதிப்புத்தான். அது எம்ஜியார் பிழைத்துவந்து மறுபடியும் கோலோச்சிவந்த காலம். எங்கள் பள்ளியில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் ஓய்வு பெற்றார். அவருக்கு வழியனுப்புவிழா நடந்தது. விழாவில் பேசிய ஒரு ஆசிரியர், ஓய்வு பெறுபவரைக் குறிப்பிட்டு, 'அவரிடம் நான் காமராஜரின் கடமை உணர்ச்சியைக் காண்கிறேன்'; வேறு யாரோ ஒரு தலைவர் பெயரைக் கூறி அவருடைய ஒரு நல்ல குணத்தைக் காண்கிறேன் என்றுவிட்டு, 'டாக்டர் கலைஞரின்' என்றதுதான் தாமதம்...மாணவர்களிடம் எழுந்த கரவொலி அடங்கச் சில நிமிடங்களாயிற்று. அதுவரை காத்திருந்த அவர் 'தமிழ்ப் பற்றைக் காண்கிறேன்', என்று முடிக்க, கரகோஷம் விண்ணைத்தொட்டது.
கலைஞர் ஏதோவொருவிதத்தில் திராவிட/தமிழ் உணர்வுகளைத் தொடர்ந்து 40 ஆண்டுகாலம் (அண்ணா மறைவுக்குப் பிறகு) இளைஞர்களிடம் ஊட்டிவந்த சக்தியாக விளங்கியிருப்பதை யாரும் மறுக்கமுடியாது.
இன்றைய மாணவர்களை அப்படி எந்த அரசியல்வாதியும் கவருவதாகத் தோன்றவில்லை. இதுபற்றி பள்ளி/கல்லூரி ஆசிரியர்கள்/மாணவர்கள் எழுதலாம். இன்றைய இளைய தலைமுறையை வசீகரிக்கும் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் இல்லாதது கவலைக்குறிய விஷயம்.
அன்று ஆட்சியில் இல்லாத கலைஞர், வாஜ்பேயி, ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் போன்ற அகில இந்தியத் அரசியல்வாதிகளையும், உள்ளூர் அரசியல்வாதிகளையும் சேர்த்து 'TESO' (Tamil Eelam Supporters Organization) என்ற அமைப்பைத் தொடங்கி, மதுரையில் ஒரு மாநாட்டையும் நடத்தினார். இன்று கலைஞர் ஆட்சியில் இருக்கிறார்; சிங்கள ராணுவமோ, ஈழத்தமிழர் இருக்கட்டும், தமிழகத் தமிழர்களையே (மீனவர்களை) கேள்வி கேட்பாடு இன்றி சுட்டு வருகிறது. என்ன செய்யப் போகிறார் கலைஞர்? மானமுள்ள எந்த நாடும் தன் ஒரே ஒரு குடிமகனை அடுத்த நாடு படுகொலை செய்தாலும் உடனடியாக, ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்கிறது. இதைப் பற்றி எழுதினால், தனி இடுகையாக நீண்டுவிடும் என்பதால் நிறுத்திக்கொள்கிறேன்.
Monday, 10 March 2008
கேப்டன் தந்த அதிர்ச்சி அல்லது பேருந்தில் பார்த்த படங்கள் (1)
கேப்டன் விஷயத்துக்குக் கடைசியாக வருகிறேன். முதலில் ஒரு விஜய் படம். இதை நான் பார்த்தது திண்டுக்கல்லிலிருந்து மதுரை செல்லும்போது. திண்டுக்கல் - மதுரை இடையே பயண நேரமே ஒன்றரை மணி நேரம்தான். பேருந்து கிளம்ப பத்து நிமிடங்கள் இருக்கும்போது படத்தைப் போடுவார்கள். ஆக, சரியாக உச்சகட்டம் வரும்போது சேரவேண்டிய இடம் வந்துவிடும். ஆனால் எல்லா வண்டிகளிலும், அரசு வண்டிகள் உட்பட படத்தைச் சகித்துத்தான் ஆக வேண்டும்.
விஜய் படத்துக்கு வருகிறேன். தலைப்பு தெரியவில்லை. விஜய், பூபதி என்ற இளைஞனாக வருகிறார். கதாநாயகி ப்ரியாவாக ஸ்னேகா. பூபதியின் அப்பா மணி (மணிவண்ணன்). அப்பாவும் பிள்ளையும் நண்பர்கள் போலப் பழகுகிறார்களாம். பூபதி, தன் அப்பாவை 'மணி' என்று பெயர் சொல்லியே அழைக்கிறார்! ப்ரியாவும், பள்ளியில் படிக்கும் அவர் தங்கையும் பூபதி வீட்டில் வந்து தங்கியிருக்கிறார்கள். மணியின் நண்பர்களான ப்ரியாவின் பெற்றோர் வெளிநாடு சென்றிருக்கின்றனர். பூபதி பொறியியலோ என்னவோ படிக்கிறார்.
அவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கிறது. ஆனால் தன் அப்பாவை விட்டுவிட்டுப் போக விரும்பாமல் அதை ஏற்க மறுக்கிறார். ப்ரியா பூபதியை விரும்புகிறார். பூபதி அதை ஏற்காமல் இருக்கிறார்.
பெண்களுக்குத் துணையாக ஊட்டிக்கு ஒரு கல்யாணத்திற்குச் செல்கிறார் பூபதி. அங்கு இரவு தலையனையும் கையுமாக படுக்க இடமில்லாமல் அல்லாடும் போது, எதிர்ப்பட்ட இளைஞரிடம், 'படுக்க இடம் கிடைக்கலை பிரதர்' என்று சொல்ல, அவர், பெண் வீட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்துகொண்டு 'எங்க பார்ட்டியில நீங்களும் கலந்துக்குங்க' எண்று சொல்லி அழைத்துச்சென்று தண்ணியடிக்க வைக்கிறார். தண்ணி அடிக்க வைத்துவிட்டுப் பெண்ணைப் பற்றி விசாரிப்பது நோக்கமாம்! பூபதியும் தண்ணி போட்டுவிட்டு, கல்யாணம் நடக்க இருக்கும் பெண்ணுக்குத் தான் எப்பவோ காதல் கடிதம் கொடுத்த விஷயத்தைச் சொல்லிவிடுகிறார்.
படத்தில் இப்படி ஒரு வழியாகக் கதை நகர ஆரம்பிக்கிற இடத்தில் ஊர் வந்துவிட்டது! மீதிக்கதையும் தலைப்பும் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
இப்படத்தில் ஓரிரு காட்சிகளை ரசிக்க முடிந்தது: ஒரு தடவை ப்ரியாவும் பூபதியும் யாரையோ வழியனுப்ப புகைவண்டி நிலையம் போகிறார்கள். ப்ரியா வேண்டுமென்றே இருவருடைய நடைமேடைச் சீட்டுக்களுடன் நடையைக்கட்டி விடுகிறார். பூபதி கேட் எக்ஸாமினர் (மதன் பாப்) இடம் மாட்டி, மன்றாடி, கடைசியியில் அவருக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு வெளியில் வருகிறார். அப்பொழுது எதிரில் வருபவரிடம், 'ஏம்பா ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிட்டயா? இப்பல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்க' என்று கூற, அந்த நபர், 'அடப்போய்யா. நான் ட்ரெயின் டிக்கெட்டே வாங்கினதில்ல' என்று சாவதானமாகச் சொல்ல, 'இவனையெல்லாம் விட்டுடுங்க. என்னப் பிடிங்க' என்று பூபதி புலம்புவது ரசிக்கும் படியான காட்சி.
இன்னொரு முறை ஹோட்டலில் சாப்பிடும் போது பூபதியின் மேல் ப்ரியா (கோபத்தில்) சாம்பாரைக் கொட்டிவிடுகிறார். பூபதி வெயிட்டரிடம் பணம் கொடுத்து 'போய் டிரஸ் வாங்கிட்டு வாங்க' என்று சொல்ல அவர் 'என்ன சைஸ்' என்கிறார். பூபதி 'ஃப்ரீ சைஸ்' என்று பதில் சொல்கிறார். வெயிட்டர் மீண்டும் 'என்ன கலர்' என்று கேட்க, பூபதி, 'யோவ், போய்யா மொதல்ல!' என்று விரட்டிவிடுகிறார். பிறகு பூபதி ஆட்டோவில் வந்து 'ஸ்பைடர்மேன்' உடையோடு இறங்குவது நல்ல நகைச்சுவை!
அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸில் DTS ஒலி அமைப்பை உண்மையாகவே நன்றாக அமைத்திருந்தார்கள்.
இப்ப கேப்டன் படத்துக்கு வருவோம். வெற்றிவேல் ஐயா (விஜயகாந்த்) தன் கிராமத்து மக்களை ரொம்ப அக்கரையாகப் பரிபாலனம் செய்து வருகிறார். அந்தக் கிராமத்தில் என்ன விருந்து என்றாலும் வெற்றிவேலுக்குத்தான் பந்தியில் முதல் இலை. ஆனால் அவர் சாப்பிட மாட்டார்! அதற்கு என்னவோ ஃப்ளாஷ் பேக் காட்டினார்கள். மறந்துவிட்டது.
போக்குவரத்து வசதி சரியில்லாத அந்தக் கிராமத்தில் ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி எடுக்கிறது. மருத்துவமனை வெகு தூரம். ஆனாலும் கேப்டன் இருக்கப் பயமேன்? தன் இரட்டை மாட்டு வண்டியைக் கொண்டுவந்து, பெண்ணையும் துணைக்கு ஒரு வயதான அம்மாவையும் 'ஏறிக்கங்கம்மா' என்கிறார். எல்லோரும் வெற்றிவேலை வாழ்த்தி, வண்டியில் அவர்களை அனுப்பி வைக்கிறார்கள்...வெற்றிவேல், வண்டியை விரட்டு விரட்டென்று விரட்டுகிறார். அந்த அம்மாள் பயந்து, 'கொஞ்சம் மெதுவாப் போப்பா' என்று அடிக்கடி சொல்வதை சட்டை செய்யாமல் கல், மேடு, பள்ளம் என்று ஏற்றி இறக்கி வண்டியைப் பறக்கச் செய்கிறார்.
[இப்ப நீங்க என்ன சொல்றீங்க, மருத்துவமனைக்குச் சீக்கிறம் சென்று தாயையும், சேயையும் காப்பாற்றுவதற்காக, வேறு வழியில்லாமல் செய்கிறார் என்றுதானே? நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் இது யார் படம்? நம்ம காப்டன் படமாச்சே! பொறுங்க கொஞ்சம்.]
இப்படியாக விரையும் வெற்றிவேல் கடைசியாக, விழுந்து கிடந்த ஒரு மரத்தின் மேல் வண்டியை ஏற்றி இறக்க, வண்டிக்குள்ளிருந்து 'ஐயோ அம்மா' என்ற அலறல். தொடர்ந்து ஒரு குழந்தை வீறிடும் சப்தம். ஆக நடு வழியிலேயே குழந்தை பிறந்துவிடுகிறது. இப்பொழுது கேப்டன் பேசுகிறார் பாருங்கள் ஒரு பிரமாதமான வசனம்!
'அம்மா, நீங்க ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தா, பத்தாயிரம் ரூபாய் செலவாகியிருக்கும். இப்ப பாருங்க...பைசா செலவில்லாம பிரசவம் முடிஞ்சுடிச்சு...அதான் அப்படிக் காட்லயும், மேட்லயும் உலுக்கிக் குலுக்கி வண்டியை ஓட்டிவந்தேன்' என்று பெருமையோடு கூறுகிறார். படம் பார்த்த எனக்குத் தூக்கிவாரிப்போட்டது! நான் கேட்டது நிஜமா, கனவா என்று சந்தேகம்.
படத்தில் வரும் பெண்களுக்கு அந்தச் சந்தேகமெல்லாம் இல்லை. வெற்றிவேலை வாயார வாழ்த்துகிறார்கள். அந்த வயதான பெண்மணி, 'இந்தாப்பா, நீயே உன் கையால குழந்தைக்கு சேனத்தண்ணி வச்சிடு' என்கிறார். மழை பெய்துகொண்டிருக்கிறது. மழைநீர் டிஸ்டில்டு வாட்டர் போலச் சுத்தமானது. ஆனால் வெற்றிவேலோ சாலையில் பள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அள்ளி எடுத்து, குழந்தை வாயில் விட்டு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தருகிறார்.
காப்டன் தப்பித்தவறி முதலமைச்சர் ஆகிவிட்டால், தமிழகத்தின் தாய்-சேய் நல மருத்துவமனைகளை மூடிவிட்டு, மாட்டு வண்டிகளை வாங்கி நிறுத்துவாரோ? யார் கண்டது, குறைந்தபட்சம் 'மாட்டு வண்டி ஆம்புலன்ஸ்' திட்டமாவது கொண்டுவந்து ஏழைத் தாய்மார்கள் வயிற்றில் பாலோ சேனத்தண்ணியோ வார்ப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
[மேற்குறிப்பிட்ட படங்கள் முறையே 'வசீகரா', 'கண்ணுபடப் போகுதையா' என்று மறுமொழிகள் மூலம் தெரியவந்துள்ளது. தகவல் அளித்த யாத்ரீகனுக்கும், முரளி கண்ணனுக்கும் நன்றி.]
Saturday, 8 March 2008
வான் சிரிப்பு (திருவள்ளுவருக்கு மன்னிப்புடன்)
கோளாறு: 'இடப்புறம் மெயின் டயரை அநேகமாக மாற்ற வேண்டியிருக்கிறது.'
பதில்: 'இடப்புறம் மெயின் டயர் அநேகமாக மாற்றப்பட்டுவிட்டது.'
கோளாறு: 'சோதனைப் பறத்தல் ஓகே, தானியங்கித் தரையிறக்கம் மட்டும் ரொம்பக் கரடுமுரடாக உள்ளது'
பதில்: 'தானியங்கித்தரையிறக்கம் இந்த விமானத்தில் நிறுவப்படவில்லை'
கோளாறு: 'காக்பிட்டில் ஏதோ லூசாக இருக்கிறது'
பதில்: 'காக்பிட்டில் ஏதோ டைட் செய்யப்பட்டது'
கோளாறு: 'வலப்புற மெயின் லான்டிங் கியரில் திரவுக் கசிவின் அடையாளம்'
பதில்: 'அடையாளம் அகற்றப்பட்டது'
கோளாறு: 'டி.எம்.இ. ஒலி அளவு நம்ப முடியாத அளவு அதிகமாக உள்ளது'
பதில்: 'ஒலி அளவு நம்பமுடிகிற அளவிற்குக் குறைக்கப்பட்டது'
கோளாறு: 'கண்ணாடியில் செத்த பூச்சிகள் உள்ளன'
பதில்: 'உயிருள்ள பூச்சிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன'
கோளாறு: 'ஐ.எஃப்.எஃப். வேலை செய்யவில்லை'
பதில்: 'ஐ.எஃப்.எஃப். ஆஃப் செய்த நிலையில் வேலை செய்யாது'
கோளாறு: 'உராய்வு லாக்குகள் திராட்டில் லீவரை பிடித்துக்கொள்ளச் செய்கின்றன'
பதில்: 'அதுதான் அவற்றின் வேலை'
கோளாறு: 'மூன்றாவது என்ஜினைக் காணவில்லை'
பதில்: 'சிறிது தேடலுக்குப்பின் வலப்புற இறக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது'
கோளாறு: 'தானியங்கி ஓட்டி, உயரக்கட்டுப்பாடு நிலையில் 200 fpm இறக்கத்தை ஏற்படுத்துகிறது'
பதில்: 'தரையில் வைத்து இந்தக் கோளாரை சோதிக்க முடியாது'
கோளாறு: 'தானியங்கவில்லை'
பதில்: 'இப்போதுதானியங்குகிறது
நன்றி: http://elaughs.blogspot.com/2007/03/here-are-some-actual-maintenance.html
Friday, 7 March 2008
தமிழ் பதிப்புத்துறை
முதலில், தமிழ்ப் புத்தகங்கள் பெரும்பாலும் ['கார்பரேட் தாதாக்கள்' வெளியிடுபவை தவிர்த்து] ISBN எண்ணைக் கொண்டிருப்பதில்லை. எப்படி உங்கள் கணினி வலையுலகில் இணைய வேண்டுமானால் அதற்கென்று தனியான IP முகவரி அவசியமோ அதேபோல ஒரு புத்தகம், புத்தகமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் இந்த ISBN அவசியம். இத்தனைக்கும் ISBN பெறுவது அப்படியொன்றும் செலவு பிடிக்கும் விஷயமில்லை என்று அறிகிறேன். தமிழ் பதிப்பகங்கள் இவ்விஷயத்தைப் பொருட்படுத்தாதன் காரணம் அறியாமையா அலட்சியமா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் பாருங்கள் அரிச்சுவடிப் புத்தகம் கூட ISBN உடனே இருக்கும்.
அடுத்தது, புத்தகத் தயாரிப்பு பற்றி இங்கு நிலவும் அறியாமை மலைக்கச் செய்வது. கடந்த புத்தகக் கண்காட்சியில் காவ்யா பதிப்பக வெளியீடுகளாக வந்திருக்கும் நகுலனின் நாவல்கள் எல்லாவற்றையும் வாங்கினேன். இவற்றில் 'நினைவுப் பாதை', 'நவீனன் டைரி' ஆகிய இரண்டிலும் spine என்று குறிப்பிடப்படும் முதுகுப் பகுதியில் நாவலின் பெயரும், ஆசிரியரின் பெயரும் அச்சிடப் பட்டிருந்தன. பிரச்சனை என்னவென்றால், அவை கீழிருந்து மேலாக அச்சிடப்பட்டிருந்ததுதான்! முதுகில் பொறிக்கப்படும் எழுத்துகள் மேலிருந்து கீழாகப் படிக்கும் விதத்திலேயே இருக்கவேண்டும் என்பது, புத்தகத் தயாரிப்பில் ஆரம்பப் பாடம். காவ்யாவோ சுமார் 25 ஆண்டுகாலமாகப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அவர்கள் இதைக் கூட அறியாமலா இருந்தார்கள்?
இதைப்படிக்கிற நீங்கள், உங்கள் புத்தக அலமாரியைச் சற்றே பாருங்கள்--எத்தனை புத்தகங்கள் இவ்வாறு தலைகீழாக அச்சிடப்பட்டுள்ளன எனப் பார்க்கலாம். (என்னிடம் சென்னையில் கைவசம் உள்ள மிகச்சில புத்தகங்களில் மதி நிலையம் வெளியிட்டுள்ள ந.பிச்சமூர்த்தி கதைகள் - 3 தொகுதிகள், சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள வண்ணநிலவன் கதைகள் ஆகியவையும் இப்பிழையுடன் உள்ளன!)
அடுத்தது எடிட்டிங். தமிழ் பத்திரிகைகளிலோ, வெளியீட்டகங்களிலோ யாரும் பிரதிகளை எடிட் செய்வதாகத் தெரியவில்லை. பத்திரிகைகளைப் பொருத்தவரை நட்சத்திர எழுத்தாளர்களின் படைப்புகளை அப்படியே பிரசுரித்து விடுவது, மற்றவர்கள் எழுதியவற்றை இஷ்டத்துக்கு வெட்டியும், மாற்றியும் வெளியிடுவது என்ற அனுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகத் தோன்றுகிறது. பதிப்பகங்களிலோ எடிட்டர் என்ற பணியிடமே இருப்பதுபோல் தோன்றவில்லை.
இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். அசோகமித்திரன் எழுதிய அனைத்துச் சிறுகதைகளையும் தொகுத்து இரண்டு தொகுதிகளாகக் கவிதா வெளியிட்டுள்ளது. ரூ. 750 விலையுள்ள இந்தப் புத்தகத்திற்கும் ISBN கிடையாது. போகட்டும். அசோகமித்திரனின் புகழ் பெற்ற கதைகளில் ஒன்றான 'புலிக்கலைஞ' னைப் படித்துப் பாருங்கள். இதில் புலி வேடதாரியின் ஆட்டத்தை விவரிக்கும்போது, ஒரு வரியில் புலி உறுமிற்று என்பது போலவும், அடுத்த வரியில் சிறுத்தை தாவியது என்பது போலவும் எழுதியிருப்பார். புலியும் சிறுத்தையும் வேறு வேறு விலங்குகள் என்பது அனைவரும் அறிந்ததே. எழுதுகையில் ஏற்பட்ட சிறு கவனப் பிசகு எடிட் செய்யப் படாமல் இன்றளவும் தொடர்வதுதான் அசோகமித்திரன் போன்ற மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு நாம் தரும் மரியாதையா?
(இக்கதையில் புலிவேடமிட்டவன் வைத்திருந்தது ஒரு சிறுத்தையின் தலையே. ஆனால் அவன் 'டகர் பாயட்' (tiger fight) ஆடப்போவதாகவே கூறுவதால், அவனது சிறுத்தை முகம் இப்படி மாற்றி மாற்றி எழுதியதற்குக் காரணமாக இருக்காது என்றே எண்ணுகிறேன்.)
மேலும் இதே கதையில், கதைசொல்லி, தான் வேலை செய்யும் ஸ்டுடியோவின் உணவு இடைவேளை மாற்றப்பட்டது பற்றிய விவரத்தைக் கதையின் ஆரம்பத்தில் கூறுகிறான். இதற்கும் பின்னால் சொல்லப்போகும் விஷயத்துக்கும் பெரிய தொடர்பு எதுவும் கிடையாது. ஆகவே இப்பகுதி, ஆசிரியருடன் விவாதித்தபின் சற்று சுருக்கப்பட்டிருந்தால் கதை இன்னும் கச்சிதமாக இருந்திருக்கும்.
ஆக எவ்வளவு பெரிய ஜாம்பவான் எழுதிய பிரதியாக இருந்தாலும், அது எடிட் பண்ணப்பட வேண்டிய அவசியம் இருப்பதை அறியலாம். இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் முடியப்போகும் நிலையிலாவது தமிழ் நூல்களைக் கோனார் நோட்ஸைவிட சற்றே தரமாக வெளிடமாட்டார்களா என்று வாசகர்கள் ஏங்கியபடியே உள்ளனர்.
ரூ. 60,000 கோடியில் பாதியை உடனே பெற ஒரு வழி
ஆதாரம்: எகனாமிக் டைம்ஸ், பிப்ரவரி 14, 2008
பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும் மல்லிவாசம்...
ஒருமுறை ராஜீவ் காந்தி கலந்துகொண்ட கூட்டத்தில் ஒருவர் தன் குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொல்ல அவரும் (வேறு என்ன) 'இந்திரா' என்று பெயர் வைத்தார். அதை மைக்கில் ஒருவர் 'இந்திரா காந்தி' என்று அறிவித்தார். அதைக்கேட்ட ராஜிவ் 'காந்தி அல்ல. இந்திரா-தான்' என்று திருத்தினார். ஹில்லாரியிடமோ ஒபாமாவிடமோ ஒருவர் குழந்தையை நீட்டினால் எப்படியிருக்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறது.
தமிழ் நாட்டில் குழந்தைக்குத் தலைவர்களின்/பிரபலங்களின் பெயர் வைப்பவர்கள் முழுப் பெயரையும் (அல்லது குடும்பப் பெயரை மட்டும்) வைப்பதைப் பார்க்கலாம்: சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, ஸ்டாலின், லெனின், காந்தி, கபில் தேவ், பிடல் காஸ்ட்ரோ,... என்பது போல. போஸ், நேரு, காந்தி, காஸ்ட்ரோ என்பதெல்லாம் அவரவர் குடும்பப் பெயர்கள். அவற்றை நாம் வைப்பது அர்த்தமற்றது. எம்.ஜி.ஆரின் பெயர் உங்கள் குழ்ந்தைக்கு இடவேண்டும் என்றால் எப்படி வைப்பீர்கள்? 'ராமச்சந்திரன்' என்றுதானே? எம். ஜி. ராமச்சந்திரன் என்றா வைப்பீர்கள்?
எப்படியோ...அவரவர்கள் பெயர் வைப்பது/வைத்துக்கொள்வது அவரவர் சொந்த விஷயம். சோனியா காந்தியை 'காந்தி' பெயரை உபயோகிக்காமல் தடுக்க கோர்ட் உத்தரவிடவேண்டும் என்று குருமூர்த்தி குதிப்பதுபோல நான் செய்ய மாட்டேன். இதற்கு அவர் சொல்லும் காரணமும், கட்டிவிடும் கதையும் அபத்தங்களின் சிகரம். இந்திய ஆட்சிப்பணி நேர்முகத்தேர்வில் ஒருவரிடம், இந்திரா காந்தி யார் என்று கேட்டார்களாம். அதற்கு அவர் 'மகாத்மா காந்தி பேத்தி' (அல்லது மகளா) என்று பதில் சொன்னாராம். அதனால் ஒரு தலைமுறையே அப்படி நம்பி வளரும் அபாயம் இருக்கிறதாம்! இந்தக் குப்பையை நடுப்பக்கத்தில் பிரசுரிக்கும் 'எக்ஸ்பிரஸ்' பற்றி என்ன சொல்வது?
சோனியாவை எப்போதும் அன்டோனியோ மெய்னோ என்றே குறிப்பிடும் குருமூர்த்தி பட்ஜெட் விமரிசனத்தில் 'சோனியா காந்தி', 'திருமதி காந்தி' என்று ஒழுங்காகக் குறிப்பிட்டுள்ளார். கொஞ்சம் சரியாகிவிட்டது போலும் :-)