Showing posts with label மதிப்புரை. Show all posts
Showing posts with label மதிப்புரை. Show all posts

Saturday, 13 July 2013

மதிப்புரை - த இன்வென்ஷன் ஆஃப் ஹியூகோ காப்ரே – ப்ரையன் செல்ஸ்னிக்

        இந்த அபூர்வமான புத்தகத்தைப் படித்திருக்காவிட்டாலும் மார்டின் ஸ்கோர்ஸசி எடுத்த படமாகத் திரையில் பலர் பார்த்திருக்கக்கூடும். அபூர்வம் என்பது வடிவம், உள்ளடக்கம் இரண்டிலுமே.



வடிவத்தை முதலில் பார்க்கலாம். ஐநூறு பக்கங்களுக்குமேல் உள்ள இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட முடியும். காரணம், பாதிக்கு மேலான பக்கங்கள் (ஆசிரியரே வரைந்த) படங்களாலேயே ஆனவை. படங்களிலும் ஒரு சிறப்பு. மற்ற புத்தகங்களில் ஓவியர், தன் கதாசிரியர் வார்த்தைகளால் சித்தரித்திருக்கும் அதே காட்சிகளையே ஓவியமாகத் தீட்டியிருப்பார். இந்தப் புத்தகத்தில் அப்படிக் கிடையாது. இங்கே கதையானது வார்த்தைகள் வழியாகவும், சித்திரங்கள் வழியாகவும் மாறி மாறிப் பயணிக்கிறது. அதாவது, எழுதப்பட்ட வரிகளை எப்படி வாசிப்பீர்களோ, அதே மாதிரி படங்களையும் ‘வாசிக்க’ வேண்டும். பிறகு விட்ட இடத்திலிருந்து மீண்டும் சொற்கள் கதையைத் தொடரும். பிறகு கொஞ்சம் படங்கள்... இப்படியே புத்தகம் முழுவதும். சித்திரங்கள் அனைத்தும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற மிக நேர்த்தியான பென்சில் டிராயிங்ஸ். (இதில் சிலவற்றை கூகுள் இமேஜ் தேடலில் புத்தகப் பெயரைக் கொடுத்துப் பார்க்க முடியும்.)
ஹியூகோ படத்தைப் பார்த்தவர்கள் அதன் ஆரம்பக் காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். லாங் ஷாட்டில் ஈஃபில் டவர், கொஞ்சம் கொஞ்சமாக ஜூம் செய்து பாரிஸ் நகரம், அதிலொரு புகைவண்டி நிலையம், பரபரப்பாக அலைந்துகொண்டிருக்கும் மக்கள் திரளுக்கிடையில் ஓடி, சந்து பொந்துகளில் புகுந்து, பிரமாண்டமான கடிகார அறையிலிருந்து அதன் முகப்பு (டயல்) ஊடாக எட்டிப் பார்க்கும் சிறுவன்... அந்தக் காட்சி அப்படியே ஒரு ஸ்டோரிபோர்டு மாதிரி இப்புத்தகத்தின் துவக்கத்தில் வரையப்பட்டிருப்பதுதான்!


உள்ளடக்கமும் புதுமையானதே. குழந்தைகளின் உலகில் நடக்கும் திருப்பங்களும், வியப்புகளும் நிறைந்த கதை; அதனூடாக ஆரம்பகால ஃப்ரெஞ்ச் சினிமா வரலாறு, இல்யூஷனிஸ்ட்கள் எனப்படும் அந்தக்கால மாயவித்தைக்காரர்கள் பற்றிய தகவல்கள், ஆட்டோமேட்டான் என அழைக்கப்பட்ட அன்றைய முன்னோடி இயந்திர மனிதர்கள் பற்றிய வியப்பூட்டும் செய்திகள் என இந்தப் புத்தகத்தில் புதைந்துள்ள எண்ணற்ற பொக்கிஷங்கள் நம்மைக் கட்டிப்போட்டு விடுகின்றன.
ஃபிரான்சில் முதன் முதலில் படம் எடுத்தவர்கள் மாயவித்தைக்காரர்கள்தானாம். சினிமா என்ற சாதனத்தின் விட்டலாச்சார்ய சாத்தியங்கள் அவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே புரிந்து போயிற்று. சந்தேகமில்லாமல், அவர்கள் எடுத்த படங்களும் மாய, மந்திர, தந்திரக் காட்சிகள் நிரம்பியவைதான்.
யோசித்துப் பார்த்தால், மந்திர தந்திரக் காட்சிகள் இருக்கின்றனவோ இல்லையோ, பிலிம் சுருளில் தனித்தனி ஃப்ரேம்களாக உறைந்திருக்கும் பிம்பங்கள், திரையில் ஓட ஆரம்பித்ததும் உயிர்பெற்று எழுந்து, நம் உணர்வுகளை ஆக்கிரமித்து, உள்ளத்தில் இடம்பிடித்துவிடுவது என்பதே ஒரு மிகப்பெரிய மாயாஜாலம்தான் இல்லையா?   இதற்கு இணையாக, இந்தப் புத்தகத்தில் பென்சில் கோடுகளாக உறைந்திருக்கும் படங்களும் நாம் பக்கங்களைத் திருப்பத்திருப்ப உயிர்பெற்று ஒரு கதையைச் சொல்லி நம்முடன் உறவாடும் மாயத்தைக் காண்கிறோம். இப்படியாக இந்த நாவல் சினிமாவைப் பற்றிய புத்தகமாக இருப்பது மட்டுமின்றி, புத்தக வடிவில் ஒரு சினிமாவாகவும் இருக்கிறது எனலாம்.
இதே மாதிரி இயந்திர மனிதர்களை முதன்முதலில் உருவாக்கியவர்களும் மாயவித்தைக்காரர்களே. அவற்றை வைத்து வித்தைகாட்டி ஜனங்களைப் பரவசப்படுத்தினார்களாம். இன்று ஜப்பானில் ரோபாட் பந்து விளையாடுகிறது, நடனம் ஆடுகிறது என்றெல்லாம் கேட்டு ஆச்சரியப்படுகிறோம். இதெல்லாம் என்ன பிரமாதம்? எந்தக் கணினியும், எலக்ட்ரானிக்ஸும் இல்லாத காலத்தில், வெறும் சாவி கொடுக்கிற மெக்கானிசத்தை வைத்துக்கொண்டு ஆட்டோமேட்டான்கள் பேனாவைப் பிடித்துக் கவிதையே எழுதியிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
சரி, கதையைக் கொஞ்சம் பார்ப்போம். பன்னிரண்டு வயது ஹியூகோ காப்ரே பெற்றோரை இழந்து, தனது சித்தப்பா (அல்லது பெரியப்பாவோ, மாமாவோ) க்ளோட் என்பவர் பொறுப்பில் வளர்கிறான். அவனது அப்பா கடிகாரங்களைப் பழுது பார்ப்பவராக இருந்தவர். அதில் மிஞ்சும் உதிரி பாகங்களைக் கொண்டு அவனுக்கு வேடிக்கையான பிராணி பொம்மைகளைச் செய்துதரும் ரசனைக்காரர். ஹியூகோவுக்கும் சிறு வயதிலேயே கடிகார மெக்கானிசம் பிடிபட்டுவிடுகிறது.
சித்தப்பா க்ளோட், பாரிஸ் புகைவண்டி நிலையத்தில் கடிகாரங்களுக்குச் சாவி கொடுக்கும் வேலையைச் செய்துவருபவர். பொறுப்பற்ற குடிகாரரான அவரும் ஒருநாள் திடீரென்று காணாமல் போய்விட ஹியூகோ அநாதையாகிவிடுகிறான். க்ளோட் காணாமல் போனது தெரிந்துவிட்டால் வேலைக்கு வேறு ஆளைப் போட்டுவிடுவார்கள்; ஹியூகோவை அநாதை இல்லத்தில் அடைத்துவிடுவார்கள். இப்படியாகாமல் தடுப்பதற்காக, பல மாதங்கள் சித்தப்பாவுக்குப் பதிலாக, இரகசியமாக ஹியூகோவே கடிகாரங்களுக்குச் சாவி கொடுத்து, அவற்றைத் தொடர்ந்து இயங்கவைத்து வருகிறான். மாதாமாதம் அவருக்கு அலுவலக ஜன்னலில் அவரது சம்பளக் காசோலையை வைப்பார்கள். அதையும் போய் எடுத்துவருகிறான். ஆனாலும் சின்னப் பையனாக இருப்பதால் வங்கியில்போய்க் காசோலையை மாற்ற முடிவதில்லை. இதனால் பலநேரங்களில் பட்டினியாக இருக்கிறான். வீட்டு வாசல்களில் வைக்கப்படும் பால் பாட்டில்கள், பிஸ்கட்கள் போன்றவற்றை வேறு வழியில்லாமல் திருடித் தின்னவேண்டிய கட்டாயம். அவன் நிலை ரொம்பப் பாவமாக இருக்கிறது.
இதற்கிடையே புகைவண்டி நிலையத்தில் ஒரு கிழவனார் நடத்தும் பொம்மைக்கடையிலும் பகுதிநேரமாக வேலை செய்கிறான் ஹியூகோ. அங்கிருந்து பற்சக்கரங்கள், ஸ்பிரிங்குகள் போன்றவற்றையும் அவ்வப்போது அபேஸ் பண்ணி வருகிறான். இது எதற்கு? அதாவது, ஒரு  மியூசியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு ஆட்டோமேட்டான் சேதமடைந்து, எரிந்த குப்பைகளோடு குப்பையாகப் போடப்பட்டிருப்பதைப் பார்க்கிறான் ஹியூகோ. அவனுடைய அப்பா பல ஆண்டுகள் முன்பு அதன் முழு வடிவமைப்பையும் படங்களாக வரைந்து, பிறந்தநாள் பரிசாக ஹியூகோவுக்குக் கொடுத்திருக்கிறார்.  
அதை மீட்டுவந்து, அப்பா கொடுத்த நோட்டுப்புத்தகத்தின் உதவியுடன் மீண்டும் அதை வேலைசெய்யவைக்க நினைக்கிறான்.  அதற்குத்தான் இந்த ஸ்பேர் பார்ட்ஸ் அவசியமாகின்றன. அந்த ஆட்டோமேட்டான் கையில் ஒரு பேனா இருப்பதால் அது எழுதப்போகும் விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் ஆவல் ஹியூகோவை உந்தித்தள்ளுகிறது. அது தன் அப்பாவிடமிருந்து தனக்கு ஒரு கடிதமாக இருக்கலாம் என்பது அவன் எண்ணம். கடைசியில் பழுதுபார்க்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றுவிடுகிறான். ஆனாலும் ஒரு சிக்கல்—அதை முடுக்குவதற்கான பிரத்தியேக சாவி கிடைக்கவில்லை.
பொம்மைக்கடைக் கிழவனாருக்கு இஸபெல் என்று ஒரு பேத்தி இருக்கிறாள். ஒருநாள் அந்தச் சிறுமி கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலியில் இருக்கும் சாவி, ஹியூகோவின் இயந்திர மனிதனுக்குரியது என்று தெரியவருவது எதிர்பாராத திருப்பம்!
தனித்தனியான செல்லுலாய்ட் ஃபிரேம்கள் திரையில் உயிர்பெற்றுவரும் மாயம் போன்றே இங்கும் ஒரு மாயாஜாலம் நிகழ்வதைப் பார்க்கிறோம். உதிரிகளாக எந்த சுவாரசியமும் அற்ற பற்சக்கரங்கள், பொருத்தமாக ஒன்றிணைக்கப்பட்டு, விசையளிக்கப்பட்டதும் தமக்குள் இவ்வளவுகாலம் உறைந்துகிடந்த மர்மத்தை ஓவியமாக உயிர்பெறச் செய்யும் மந்திரவித்தை!
இயந்திரத்தை மனிதனாக்கிய சாவி இஸபெல்லிடம் இருந்ததுபோலவே, அநாதையாக, திருடனாக, அச்சமும், அவநம்பிக்கையும் கொண்டவனாக உலகத்திடமிருந்து ஒளிந்து, பற்சக்கரங்களிடையே வாழ்ந்துவந்த ஹியூகோவை மீட்டு நிஜ மனிதனாக்கும் சாவியாக இருப்பதும் அவளுடைய நட்புதான். இருவரும் சேர்ந்து புத்தகங்கள் வழியாக சினிமா தோன்றிய வரலாற்றைப் படிக்கிறார்கள். ஒரு திரைப்பட சங்கத்தின் மூலம் ஆரம்பகாலப் படங்கள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.
ஆட்டோமேட்டான் வரைந்த படம், ஹியூகோவின் அப்பா தனது சிறுவயதில் பார்த்த ஒரு திரைப்படத்தில் வரும் காட்சி—முகம்போல வரையப்பட்ட சந்திரனின் ஒரு கண்ணில் ஒரு ராக்கெட் பாய்ந்திருப்பது போன்ற காட்சி அது. அத்துடன், அதன் கீழே ‘ஜார்ஜ்ஷ மெல்லியஸ்’ என்று கையெழுத்தும் போடுகிறது. அந்தப் பெயர்—பொம்மைக்கடைத் தாத்தாவுடையது!
இப்படியாக இயந்திர மனிதனுக்குள் உறைந்திருந்த இரகசியம் வெளிப்பட்டு மனித இயந்திரமாக இறுகிப்போய் வாழ்ந்துவரும் பொம்மைக்கடைப் பாட்டனாரின் (பப்பா ஜார்ஜ்ஷ) கடந்தகாலம் பற்றிய மர்மத்தை விடுவிக்கிறது. இதில் இன்னொரு முக்கிய விஷயம், ஹியூகோவும், இஸபெல்லும் கற்பனைப் பாத்திரங்களாக இருந்தாலும் ஜார்ஜ்ஷ நிஐத்தில் வாழ்ந்த மனிதர். ஆம், இந்த நாவல் புனைவும், உண்மையும் கலந்த ஒன்று.
சில புத்தகங்களை எடுத்துப் பார்த்தவுடனேயே நம் கையில் இருப்பது ஒரு ‘ஜெம்’ என்று தெரிந்துவிடுமல்லவா? அப்படியான ஒரு புத்தகம்தான் ஹியூகோ காப்ரே. குழந்தைகளின் உலகம், திரைப்படம், மாயாஜால வித்தைகள், எந்திர மெக்கானிசம் ஆகியவற்றை ஆழமாக நேசிக்கும் ஒருவரே இந்த நாவலை எழுதியிருக்க முடியும். நாவலில் இந்த அம்சங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று அழகாகப் பொருந்தி இயங்குகின்றன—ஒரு கடிகாரத்தின் பற்சக்கரங்களைப் போல. ஒரு குள்ள மனிதனாக மாறி, (அந்தக் கால) சுவர்க்கடிகார எந்திரத்தின் பற்சக்கரங்களுக்கிடையே அலைந்து பார்க்கும் பரவசம், அல்லது நீங்கள் முதன்முதலாகப் பார்த்த மாயாஜாலக் காட்சி தந்த பிரமிப்பு... இவற்றுக்கு ஈடான குதூகலத்தை தருகிறது இந்த நாவல்.



படம் வருவதற்கு முன் இந்தியாவில் இந்தப் புத்தகம் பற்றி சரிவர அறிமுகமில்லாமல் போனது துரதிர்ஷ்டkfம். இதன் விலையும் பலரைப் பயமுறுத்தியிருக்கக் கூடும். ஆனாலும், எனக்கு அது பெரிய அதிர்ஷ்டமாகவே அமைந்துவிட்டது; இல்லையென்றால் ரூ.790 மதிப்புள்ள (டாலர் 50 ரூபாய்க்குக் கீழே இருந்த காலம்!) புத்தகத்தை ஒரு பிரபல புத்தகக்கடையில் ஒரு ஆடித்தள்ளுபடியில் அடிமாட்டு விலையாக 79 ரூபாய்க்கு நான் வாங்கியிருக்க முடியுமா :)

Cover courtesy: biblioradio.blogspot.in
Book photo & inside image courtesy: spellsaab.com

(ஆம்னிபஸ் தளத்தில் 8 ஜூலை 2013 அன்று வெளியானது.)

Thursday, 4 July 2013

மதிப்புரை: தமிழவன் கதைகள்

தமிழவன் தமிழின் முக்கியமான இலக்கியத் திறனாய்வாளர்களில் ஒருவர். பின் நவீனத்துவம், அமைப்பியல்வாதம், கட்டுடைத்தல் போன்றவற்றைத் தமிழ் இலக்கியச் சூழலில் அறிமுகப்படுத்திய ஒரு முன்னோடி. இவருடைய 'படைப்பும் படைப்பாளியும்' என்ற முதல் புத்தகம் சுவாரசியமான ஒன்று. அதில், கவிஞர் இன்குலாப், 'போராடு', 'புரட்சிசெய்' என்கிற ரீதியில் தொழிலாளிக்குச் சொல்வதுபோல எழுதிய கவிதை ஒன்றைக் கட்டுடைத்து, தொழிலாளிக்கு ஆதரவானதுபோலத் தோன்றும் அக்கவிதை உண்மையில் எப்படி தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரானதாக இருக்கிறது என்று காட்டியிருப்பார். அப்புராணித் தொழிலாளி கவிதையில் எங்கும் பேசுவதில்லை, நிஜ உலகைப்போலக் கவிதையிலும் குரலற்று இருக்கிறான் என்று அவர் சுட்டிக்காட்டியதைப் படிக்கும்போது, 'அட, சரிதானே' என்று தோன்றும். அதற்குப் பின் தமிழவன் எழுதிய புத்தகங்கள் அதே சுவாரசியத்தை எனக்குத் தரவில்லை.

    பரிசோதனைகள் இல்லாமல் அறிவியல் வளர முடியாது. அதேபோல இலக்கிய வளர்ச்சிக்கும் பரிசோதனைகள் அவசியம். தமிழைப் பொருத்தவரை இன்றைக்குச் சாதாரணமாக இருக்கும் நாவல், சிறுகதை, புதுக்கவிதை, ஏன் உரைநடையேகூட ஒருகாலத்தில் சோதனை முயற்சிகளாக ஆரம்பிக்கப்பட்டவைதானே. இந்தக் காரணத்தாலேயே இலக்கியத்தில் சோதனை முயற்சிகளை வரவேற்க வேண்டும். மேலும் அறிவியலோ, இலக்கியமோ— பரிசோதனைகளில் தோல்வி என்ற ஒன்று கிடையாது, விளைவு எப்படியிருந்தபோதிலும் அதிலிருந்து எதையேனும் கற்றுக்கொள்ளவே செய்கிறோம் என்பதால்.



    தமிழவன் கதைகள்தொகுதியில் 13 கதைகள் அடங்கியுள்ளன. தலைப்பில் சிறுகதைகள் என்ற பிரயோகம் தவிர்க்கப்பட்டு, 'கதைகள்' என்றே குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இவற்றில் ஒன்றிரண்டு தவிர மற்ற கதைகள் யதார்த்த பாணியில் எழுதப்பட்டவையல்ல. அப்படிப்பட்ட கதைகளை நான் முழுதாகப் 'புரிந்துகொண்டு'விடவும் இல்லை. இருந்தாலும் எனக்குத் தெரிந்தவரை, புரிந்தவரை அவற்றைப் பற்றிய என் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. கதைகளை புத்தகத்திலிருக்கும் வரிசையில் அல்லாமல் எனக்குத் தோன்றிய வரிசையில் கூறுகிறேன்.

    இன்னொன்று, தமிழவன் பிரதானமாகப் புனைகதையாளர் அல்ல என்பதால் நல்ல கதையாக வந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடு உள்ள சில கதைகள் சரிவர உருப்பெறாமல் போயிருக்கின்றன. அதாவது, வேறு புனைகதையாளர்கள் நன்றாகக்கொண்டு வந்திருக்கக்கூடிய கதைகளை, தான் ஒரு ஸ்ட்ரக்சுரலிஸ்ட் என்பதால் அப்படியெல்லாம் நேரடியாக எழுதிவிடக் கூடாது என்று வேண்டுமென்றே ஒரு சிரமமான நடையை வலிந்து உருவாக்கி எழுதியிருக்கிறார் தமிழவன் என்றே தோன்றுகிறது! இந்தக் கதையின் மேற்பரப்பை இலேசாகச் சுரண்டிப் பார்த்தால், உள்ளே இருப்பது வழக்கமாக நாம் வாசித்துப் பழக்கப்பட்ட ஒரு சிறுகதை, வலிந்து புரியாத மொழியில் எழுதப்பட்டுள்ளது என்ற எண்ணம் பல கதைகளைப் படிக்கையில் ஏற்படவே செய்கிறது.

    அப்படிப்பட்ட கதைகளை, இந்தக் கதையை மட்டும் தமிழவனுக்குப் பதில் வேறொருவர் எழுதியிருந்தால் மீட்டிருக்கலாம் என்று தோன்றியது. அப்படி வேறு யார் எழுதியிருக்க வேண்டும் என்பதையும் (சற்று அதிகப்பிரசங்கித்தனமாக) குறிப்பிட்டிருக்கிறேன்! ஒரு சுவாரசியத்துக்காகத்தான்  .

            தொகுதியிலேயே எனக்கு ஆகப் பிடித்த கதை வேஷம். பெங்களூரில் ஏதோ ஒரு திராவிடக் கட்சிக்காகப் பேரணிகளில் அறிஞர் அண்ணாவைப் போல உடலில் பெயிண்ட் அடித்துக்கொண்டு செல்லும் அடிமட்டத் தொண்டனின் (இவனே கதைசொல்லி) கதை. ஒருநாள் ஒரு ஊர்வலத்தில் கன்னட அமைப்புகளால் கலவரம் ஏற்படுகிறது. இவன் அடிவாங்கி,  இரத்தகாயத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் தன்னை விடுவித்து அழைத்துச்செல்ல வரப்போகும் வட்டச் செயலாளர் சிவப்பிரகாசுக்காகக் காத்திருக்கிறான். அப்பொழுது ஒரு கான்ஸ்டபிளிடம் தனக்கும் மணமான கன்னடப் பெண் ஒருத்திக்கும் தொடர்பிருப்பதாகக் கதைபோல விவரிக்கிறான். நிஜத்தில் வட்டச்செயலாளரும், கதைசொல்லியின் மனைவியும் சேர்ந்து அவனுக்குத் துரோகமிழைக்க, அதைத் தட்டிக்கேட்க முடியாத கையாளாகாதவனான அவன் போடும் அந்த வேஷம் (வாசகன் முன்) கலைவதுடன் கதை முடிகிறது.  யதார்த்த பாணியில் ஓரளவு நன்றாகவே எழுதப்பட்ட கதை. (இதை சுஜாதா எழுதியிருந்தால்..!)

    ஒரு பூனையும் லெதர்பை வைத்திருப்பவர்களும் 1991 இறுதியில் கர்நாடகத்தில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதை நிகழும் இடமோ, காலமோ குறிப்பிடப்படவில்லை. கலவரங்களுக்குத் தப்பி வேறு ஊருக்கு நடந்துவரும் ஒருவன், சாலையோர சாப்பாட்டுக் கடை ஒன்றில் சாப்பிடச் செல்கிறான். அப்போது அவன் பார்க்கும் சாதாரணமான விஷயங்கள்கூட பயங்கரமாகத் தோன்றி அவனைப் பயமுறுத்துகின்றன. இனக் கலவரத்தில் தப்பி உயிருக்குப் பயந்து ஓடுபவனின் அச்ச உணர்வைக் காட்சிகள் வழியே படம்பிடித்துக் காட்டுவதே இக்கதை. இதே கதையை அசோகமித்திரன் எழுதியிருந்தால் ஒரு மறக்கமுடியாத கதை கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

    பிடிக்காத நிறம் பூசப்பட்ட போலீஸ்வேன் ஸ்திரபுத்தியற்ற தோத்தாங்குளி (loser) ஒருவனின் சித்திரத்தைத் தரும் கதை. கதைசொல்லி, கல்லூரிக் காலத்தில் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்தாலும், தோற்றுப்போனவனிடம் அடி வாங்கி அவமானப்படுகிறான் (அதுவும் அடித்தவனின் காதலி பார்க்கையில்). பிறகு இவனது காதலியின் அண்ணன், 'இப்படிப்பட்ட ரவுடிப்பயலையா காதலிச்சே?' என்று அவள் முன்னிலையில் இவனை அடிக்கும்போது  அவள் தடுப்பதில்லை (இவன் ரவுடியும் அல்ல). பின்னாளில் யாரோ லைப்ரரியனாக வேலை பார்க்கும் பெண்ணை மணந்துகொண்டிருக்கிறான் என்று அறிகிறோம். இவனுக்கு வேலை வாங்கித்தர அவள் எவ்வளவோ முயற்சி எடுத்தும் இவன் அக்கறை காட்டுவதில்லை. அவள் பொறுமைபோய் இவனை வீட்டைவிட்டுத் துரத்திவிட, குறிக்கோளின்றி அலைந்து திரிகிறான். அப்போது ஒரு வங்கியில் அனாவசியத்துக்குப் பைக்குள்ளிருக்கும் சிகரெட் பாக்கெட்டைத் துப்பாக்கிபோலக் காண்பித்து கலாட்டா செய்கிறான். நோக்கம் கொள்ளையடிப்பதல்ல; யாரோ முகமறியாத ஒரு பெண்ணை காஷியர் வசைபாடியதற்குப் பழிவாங்கவே இப்படிச்செய்கிறான். கடைசியில் போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்லப்படும்போது அந்த ஜீப்புக்கு வேறு நிறம் பூசியிருக்கக்கூடாதா என்பதே அவனது பிரதான கவலையாக இருக்கிறது. (இந்தக் கதையை விமலாதித்த மாமல்லன் எழுதியிருக்க வேண்டும்!)

    பெயரும் கண்ணாடியும் அங்கதக் கதை. மாநில அமைச்சர் அருஞ்செழியன், கி.மு. பத்தாயிரத்தில் (பத்தாயிரமா, பதினைந்தாயிரமா என்று அறிஞர்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லையாம்!) ஆட்சிசெய்த, தன் ஆறாம் வயதிலேயே ஆரியர்களையும், திராவிடர்களையும் (?), வந்தேரிகளையும், பகை அரசர்களையும் கொன்று குவித்த மன்னனின் 150 அடி உயரச்சிலையைத் திறந்துவைக்கிறார். அவர் மகன் சேரன் செங்குட்டுவன் ஆங்கிலப் பள்ளியில் படிப்பவன்; பாரில் மது அருந்தித் தன் வயதையொத்த சிறுவர்களுடன் ஆங்கிலத்தில் சண்டை போடுபவன். அமைச்சர் சிலையைத் திறந்துவைத்து ஆற்றிய உரை டேப்பில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க, சேரன் செங்குட்டுவனின் முகம் சாட்சாத் வரலாற்று சேரனின் முகமாக ஆகிவிடுகிறது! (இதை எழுதியிருக்க வேண்டியவர் இந்திரா பார்த்தசாரதி!)

    புளியமரத்திலிருந்து கதை முழுக்கவும் கதைசொல்லி, வாசகரை நோக்கி வளவளவென்று பேசிக்கொண்டேயிருக்கிறான். கடைசியில் இவ்வளவு நேரம் நம்முடன் பேசியது ஒரு இரத்தக் காட்டேரி என்று தெரியவருவது எதிர்பாராத திருப்பம். இருந்தாலும் அதுவரை படிப்பதற்குச் சற்றே பொறுமை வேண்டும். (விக்கிரவாண்டி இரவிச்சந்திரன்?)

    காடு கதையில் வருவது நிஜமான காடு அல்ல. காங்கிரீட் ஜங்கிள்தான். நகர மார்க்கெட்டில் ஒரு பையனுடன் கரும்பு (பையனுக்கு), தேங்காய் என்று வாங்கியபடி அலைந்து கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றிய கதை. இடையில் ஒரு பொறுக்கியுடன் நடக்கும் சில்லறைத் தகராறு, செருப்பு அறுந்து போவது, பேருந்தைத் தவற விடுவது என்று சாதாரண சம்பவங்களாக வந்தபடி இருக்கின்றன. கதை நகரச்சூழலில் அந்நியமாகும் அனுபவத்தைப் பேசுவதாகக் கொள்ளலாம். இது எந்த வாசக அனுபவத்தையும் படிப்பவர்களுக்குத் தருவதில்லை. இம்மாதிரி சம்பவக்கோவையாகச் செல்லும் கதைகளை அசோகமித்திரன் சிறப்பாக எழுதுவார். அதில் வரும் சம்பவங்கள் படித்தவர்களுக்குப் பல வருடம் ஆனாலும் மறக்காது. தமிழவனிடம் அப்படி ஒரு படைப்பை உருவாக்கும் படைப்பாற்றல் இல்லை.



   
காரல் மார்க்சும் தாணு ஆசாரியும் யதார்த்த பாணிக் கதைதான். காரல் மார்க்ஸ் போன்ற தோற்றம் கொண்ட ஒரு கிராமத்து ஆசாரி (இரும்புக் கொல்லன்) பற்றிய கதை. ஆசாரியின் பேச்சு மனிதர்களின் ஆழமான குணங்களைத் தொட்டுச் செல்லுமாம். ஏதோ அவரைப்பற்றிய பிம்பம் உடைவது பற்றிக் கதை பேசுகிறது. என்னதான் ஒரு ஆள் பணம் சம்பாதிப்பதில் ஆசை வைத்தவரில்லை என்றாலும், மகன் ஒரு வேலையும் செய்யாமல், தொழிலையும் கற்றுக்கொள்ளாமல் சுற்றிக்கொண்டிருந்தால் யார்தான் கவலைப்பட மாட்டார்கள்? இதில் என்ன பெரிய பிம்பம் உடைந்துவிட்டதாம்? இதில் கதைக்குத் தேவையே இல்லாமல் தாமஸ் வைத்தியர் என்ற மனநிலை தடுமாறிய பாத்திரம் வேறு. (இந்தக் கதைக்கு சா.கந்தசாமிதான் சரி!)

    பூட்ஸ் கால்களில் சிக்கிய நட்சத்திரங்கள் கதை ஈழத்தமிழர், காஷ்மீரிகள் போன்று இராணுவ அடக்குமுறைக்கு ஆளாகி அச்சத்தில் வாழ்ந்துவரும் மக்களினம் ஒன்றைப் பற்றிப் பேசுகிறது. புரியாத மொழியில் பேசும் அடக்குமுறையாளர்கள் அடிக்கடி அவர்களில் யாரையாவது ஒரு மலையைத்தாண்டி இழுத்துச் செல்வதும், துன்புறுத்திக் கொல்வதும், வீடுகளைச் சூறையாடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இதை எளிய நடையில் 'உருக்கமான' கதையாக எழுதியிருந்தால் வெற்றி பெற்ற ஆக்கமாகியிருந்திருக்கும். புறவயமான தகவல்களைச் சொல்லிக்கொண்டே போகும் பாணி இதற்குப் பொருந்தவில்லை. (ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் யாராவது எழுதியிருக்கணும்!)

    கைது செய்பவர்களும் காத்திருப்பவனும் கதை, தன்னைக் கைதாகாமல் காப்பாற்றி அழைத்துச்செல்ல வரவேண்டிய தனது இயக்கத்தைச் சேர்ந்த ஆளுக்காகக் காத்திருக்கும் ஒரு புரட்சிக்காரனைப் பற்றியது. இதில் அவனுக்கு இரண்டு தலைகள் என்று சர்வசாதாரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதனால் உருவாக்கப்படும் மாயத்தன்மை முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. எனவே 'இரண்டு மனம்' என்று சாதாரணமாகச் சொல்லப்படுவதையே இரண்டு தலை என்று ஆசிரியர் குறியீடாகச் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். (ஆயாசமும், உளவியல் சிக்கலும்—இது கோபிகிருஷ்ணன் ஏரியா!)

    ஸ்கொயர் கதையில் ஒரு நகரத்தின் சதுக்கத்தில் மக்கள் அரட்டையடித்துக்கொண்டு, கொறித்துக்கொண்டு, கடைகளில் விலை விசாரித்துக்கொண்டு அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது இளைஞர்கள் குழு ஒன்று ஏதோ புரியாத மொழியில் எழுதப்பட்ட பதாகைகளை வைத்துக்கொண்டு அங்கு வந்து நிற்கிறது. ஒரு போலீஸ்காரன் ரைபிளுடன் அலைந்துகொண்டிருக்கிறான். ஜனங்கள் ஏதோ நடக்கப்போகிறது என்று பயம் கலந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ஒரு நாய் சதுக்கத்தில் குறுக்கே ஓடுகிறது. ஒரு சிறுவன் ஏதோ பாடலைப்பாடிவிட, அங்கு பயம் உச்சநிலையை அடைகிறது. அது ஏதேனும் தடைசெய்யப்பட்ட பாடலாக இருக்கலாம். அவனது தந்தை அவன் பாடுவதைத் தடுக்கச் செய்யும் முயற்சி பலிப்பதில்லை. சதுக்கத்தை நகரோடு இணைக்கும் சிமெண்ட் பாதையில் பாடிக்கொண்டே ஓடுகிறான் சிறுவன். அங்கிருந்து அவன் பாடல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. சிறிது நேரத்தில் அங்கிருந்து ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. நல்லவேளையாகச் சுடப்பட்டது அந்த நாய்தான் (குறுக்கே ஓடியதே) என்று தெரியவருகிறது. இந்தக் கதையை மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் அரச பயங்கரவாதம் பற்றிய கதையாகப் படிக்கலாம். இதில் தேவையில்லாத பகுதிகளை நீக்கி, சரளமாகப் படிக்கும் விதத்தில் மாற்றி எழுதினால் ஒரு நல்ல கதை கிடைக்கலாம். இப்போதைய வடிவில் படிக்கிற நமக்கு எந்தப் பதட்டத்தையும் கதை ஏற்படுத்துவதில்லை.

    தகரக்கொட்டகை மற்றும் தவளை மனிதர்கள் ஒரு ஃபான்டஸி கதை. வரலாற்றில் எப்போதோ தகரக்கொட்டகை மனிதர்களுக்கும் (இவர்கள் மனிதத்தோற்றம் உடையவர்கள்), தவளை மனிதர்களுக்கும் (இவர்கள் தவளைகள் போன்றவர்கள்) இடையில் நிலவிய பகை, போர்ப்பிரகடனங்கள், சமாதானங்கள் போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறது. இதன் நடை படிப்பதற்கு மிகவும் சிரமம் தரக்கூடியது--

    “இன்று தகரக்கொட்டகையைச் சுற்றி தவளை மனிதர்களுக்குச் செத்த காட்டு மிருகங்களின் ஆவிகளைக் கொணர்ந்து வர்ணம் தீட்டுவதென்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. சரியாய், காலை ஏழு மணிக்குச் சூர்யக் கதிர்களின் நெருப்புச்சூடு சங்கீதத் திவலையாய் தவளைகளின் பச்சை நரம்புகளில் படர ஆரம்பித்தவுடன் தவளைகள் ஆலோசனையின்றி அசைய ஆரம்பித்தன. சற்றுநேரம் ஆயிரமாயிரம் தவளைகள் பற்களுக்கிடையில் இருளையும் சப்தத்தையும் கடித்தபடி அசைந்தன.” (பக் 46)
.
தமிழவனையும், புத்தகத்தை அச்சுக் கோர்த்தவரையும் தவிர எத்தனை பேர் இதை முழுதும் படித்தார்கள் என்பது பெரிய கேள்விக்குறியே!

    தொகுப்பின் முதல் கதையான சிதறியபடி ரூபங்கள் அதிகார மையங்களின் அடக்குமுறை பற்றிய அங்கத முயற்சி. அங்கதத்துக்குத் தேவையான நகைச்சுவை இதில் இல்லை--

    “‘ஜாப் அப் கப்’—காதுகள் நீளமான ஒருவன் வந்து அழைத்தான். தன் பெயரைக்கேட்டு மஞ்சள் சட்டை உள்ளே நுழைந்தான். மிக விரைவில் அவன் வெளியே வந்தபோது  தன் நகங்களை வெட்டி சுத்தம்செய்து அனுப்பினர் என்றான். பல மஞ்சள் சட்டைகள் அவமானம், அவமானம் என்று முகம் சுழித்தனர். அது எப்படி அவமானமாகும், சுகாதார நிபுணர்கள் பரிந்துரை செய்யும் காரியமாயிற்றே என ஒருவனிடமு கேட்க அவன் அந்த ஊரில் அவமானகரமான விஷயங்கள் பல பிற ஊர்களில் அப்படி இல்லை என்றான். பலர் வாசலை நெருங்கினர். அப்போது ஒருவன் ஜன்னல் கம்பியிலிருந்து கீழே விழுந்தான். மிண்டும் குரங்குபோல ஏறிக் கடலையைத் தின்னலானான்.  தரை எங்கும் வெற்றிலையைத் துப்பிப் போட்டிருந்தனர்.” (பக் 10)
(ஞாநி, நாடகமாக!)

    கடைசிக்கதையான சொற்பொழிவுகள் மேடைப் பேச்சுகளைப் பகடி செய்கிறது. 'மேடை. அகலம் 10 அடி. நீளம் பதினைந்து அடி. மேடை தரையிலிருந்து மூன்றடி உயரம். உயரம். உ+ய்+அ+ர+ம். ரம். 'ரம்' அடித்தால் போதை. போதை. போதை. போதையில் 'போ'வுக்குக் கால் போனால் பேதை.' என்று ஆரம்பித்து அதே போல அர்த்தமற்றுச் சென்று முடியும் வரிகள். மேடைப்பேச்சைத்தான் நச்சென்று நாலைந்து வரியில், இதற்குப் பல ஆண்டுகள் முன்பே ஞானக்கூத்தன் பகடி செய்துவிட்டாரே, போதாதா?
   
    ஒட்டுமொத்தமாகப் பார்க்கப்போனால், எந்த பாணிக் கதை என்றாலும் 'அடுத்தது என்ன?' என்ற சுவாரசியம் முக்கியம். 'ஒரு ஊர்ல ஒரு நரியாம்' என்றதும் இந்த சுவாரசியமே அடுத்தவரியை நம்மை எதிர்பார்க்க வைக்கிறது. கஷ்டப்பட்டுப் படிப்பதற்கு ஒரு சிறுகதைத்தொகுதி என்பது பாடப்புத்தகம் அல்லவே? இந்தத்தொகுப்பில் ஒருசில கதைகள் தவிரப் பெரும்பாலானவை அந்த சுவாரசியத்தைத் தரவில்லை. தமிழவனிடம் ஆர்வமூட்டக்கூடிய மொழிநடையும் இல்லை; அல்லது அப்படியெல்லாம் ஆர்வமூட்டுவதுபோல எழுதிவிடக்கூடாது என நினைக்கிறார் போலும். வேஷம் கதையில் ‘அறிஞர் அண்ணா’ என்பதைக் கன்னட கான்ஸ்டபிள் சொல்லத்தெரியாமல் ‘ஆர்ஞ்சண்ணா’ என்றே குறிப்பிடுவது மாதிரியான ரசிக்கத்தக்க நகைச்சுவையை ஓர் இழையாக மற்ற கதைகளிலும் பின்னியிருந்திருக்கலாம். ஆனாலும் பின்னட்டைக் குறிப்பில் கூறப்படுவதுபோல 'இது ஒரு புதுவித கதைத்தொகுப்பு' என்ற அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழவன் கதைகள்
காவ்யா
முதல் பதிப்பு டிசம்பர் 1992 பக்கங்கள் 122
பெங்களூர் 560 038

(ஆம்னிபஸ் தளத்தில் 3 ஜூலை 2013 அன்று வெளியானது.)

Thursday, 27 June 2013

இதயம் பேசுகிறது — மணியன்

      தமிழில் பயண இலக்கிய முன்னோடி ஏ.கே.செட்டியார். அவருடைய நூல்கள் உலகத்தரம் என்றால், வார இதழ் தரத்தில் எழுதியவர்கள் கல்கி தொடங்கி, சாவி, லேனா தமிழ்வாணன் வரைப் பலர். என்றாலும் தமிழ் எழுத்துலகில் இது ஒரு நலிந்த பிரிவுதான்.

      மணியன் அறுபதுகளில் ஆனந்த விகடனில் தனது இதயம் பேசுகிறது பயண இலக்கியத் தொடர் மூலம் கணிசமான வாசகர்களைப் பெற்றவர். விகடனால் புத்தகமாகவும் வெளியிடப்பட்ட இந்தத் தொடருக்கு, எழுதப்பட்டு ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டதாலேயே, ஒரு 'காலப்பெட்டகம்' மாதிரியான மதிப்பு இன்றைக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லலாம். பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்துக்கும் 1966 இறுதி வாக்கில் சென்று வந்திருக்கும் மணியன், தான் சென்ற இடங்களில் எளிய மக்களின் இதயங்கள் பேசுவதைக் கேட்டு அதையே தான் இந்தப் புத்தகமாக எழுதியிருப்பதாக 'என்னுரை'யில் சொல்கிறார். எஸ்.எஸ்.வாசனின் முன்னுரையும் இருக்கிறது.



        புத்தகத்தில் சரியான பயணத்தேதிகளை மணியன் குறிப்பிடவே இல்லை. இது முக்கியமான குறையே. இப்பொழுது மீண்டும் புத்தகத்தைப் புரட்டியதில், அமெரிக்க எம்பஸி அவருக்கு அமெரிக்கா வருமாறு அழைத்த கடிதம் இருப்பதைக் கவனித்தேன் (முதலில் அது ஏதோ ஜனாதிபதி சம்பிரதாய வாழ்த்துரை என்று எண்ணி ஸ்கிப் செய்திருந்தேன் :). கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி செப் 13, 1966.

       மணியனை அழைத்த நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான். வழியில் ஒரு சில நாடுகளைச் சேர்த்து ஒரே பயணமாகச் சென்றுவந்துள்ளார். அவருக்கு அதுவே முதல் வெளிநாட்டுப் பயணம்.  முதல் விமானப் பயணம் என்றும் நினைக்கிறேன்.

        மணியன் முதலாவதாகச் சென்ற நாடு எகிப்து. அங்கே கெய்ரோ மியூசியத்தில் மம்மிகளைப் பார்த்துவிட்டு வந்தபோது ஏதோ ஆஸ்பத்திரி சவக்கிடங்கிலிருந்து வெளியே வருகிற உணர்வுதான் ஏற்பட்டது என்கிறார். அதன்பிறகு அன்று சாப்பிடக்கூடப் பிடிக்கவில்லையாம்! நான் இதை எதிர்பார்க்கவில்லை. பிரான்ஸ், இங்கிலாந்து பயணங்களில் விசேஷமாகக் குறிப்பிடும்படி ஒன்றுமில்லை.

          வாஷிங்டனில் சாப்பிடப்போன மணியன் அதற்கு இரண்டு டாலர் செலவானதும், 'ஐயோ, சாப்பாடு பதினைந்து ரூபாயா' என்று பயப்படுகிறார்! 'ஒரு பத்திரிகை மூனே முக்கால் ரூபாயா! ஒரு காப்பி ஒன்றரை ரூபாயா!' என்று மேலும் திகைக்கிறார் (காலப்பெட்டகம்!).

          சராசரி அமெரிக்கர்கள், இந்தியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது, ஆயிரக்கணக்கில் மக்கள் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பதாக வருந்துகிறார். நடு ரோட்டில் ஒரு ஆள் மணியனிடம், 'பஞ்ச நிவாரண நிதிக்கு வைத்துக் கொள்ளுங்கள்' என்று ஐந்து டாலர் தருகிறார். உணவகத்தில் ('கேஃபிடேரியா') சர்வர், மணியன் ரைஸ் என்று கேட்டதும் முதலில் ஒரு சிறுகரண்டி அளவில் தந்தவர், இவர் இந்தியர் என்று தெரிந்துகொண்டதும் 'உங்கள் நாட்டில் அரிசியே கிடைப்பதில்லையாமே!' என்று கேட்டு இலவசமாகச் சோறு போடுகிறார்!

          மணியன் இம்மாதிரி நிகழ்ச்சிகளால் நொந்து போகிறார், பாவம். அங்கு பல பத்திரிகை ஆசிரியர்களிடம் 'நாங்கள் செய்யும் சாதனைகளைப் பற்றி எழுதக்கூடாதா, எப்பொழுதும் பஞ்சப் பாட்டைத்தான் பாடவேண்டுமா' என்று கேட்டாராம். பலன் செவிடன் காதில் ஊதிய சங்குதான் என்று அலுத்துக்கொள்கிறார். 'இன்னும் அவர்களில் (பத்திரிகைக்காரர்களில்) பலருக்கு மகாராஜாக்களும், பாம்பாட்டிகளும்தான் பாரதம்!' என்று அங்கலாய்க்கிறார். உணவுப் பற்றாக்குறையெல்லாம் தாண்டி இன்று வெகு தூரம் வந்துவிட்டோம் என்றாலும் இன்றும்கூடப் பொதுவாக அமெரிக்க ஊடகங்களில் சுனாமி, உத்தராகண்ட் வெள்ளம் போன்ற பேரழிவுகளின்போதுதானே நம்மைக் கண்டுகொள்கிறார்கள்?

         சில அமெரிக்கர்கள் மனைவியையும் ஹனி என்று அழைக்கிறார்கள், காப்பி சாப்பிடச் செல்லும்போது அங்குள்ள பணிப்பெண்ணையும் ஹனி என்று அழைக்கிறார்களே என்று வியக்கிறார் :) ஹிப்பிகள், பீட்னிக்குகள் போன்றவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாக நினைத்து அனுதாபப்படுகிறார். அவர்களுடைய போர் எதிர்ப்பு, உலக சமாதானம் போன்ற கொள்கைகளை மணியன் கண்டுகொள்ளவில்லை.

         மற்றொரு சுவையான விஷயம். அங்கு டெலிவிஷனில் ஒரு விவாத நிகழ்ச்சியைப் பார்த்தாராம். விவாதப் பொருள்? 'அந்தரங்கத்தில் தலையீடு'. டெலிபோனில் ஒட்டுக்கேட்பது, ஆட்களை வைத்துக் கண்காணிப்பது என்றெல்லாம் சர்க்கார் தனி மனிதன் விஷயத்தில் தலையிடுகிறது; அதிலும் நவீன கருவிகள் நிறைய வைத்திருக்கும் அமெரிக்க நாட்டில், தனி மனிதனின் அந்தரங்க சுதந்திரம் பறிபோய்விட்டது' என்று பலர் வாதாடினார்களாம் (மிஸ்டர் ஸ்னோடென், கேட்டுக்கொண்டீர்களா? நீங்கள் பிறக்கும் முன்பிருந்தே அமெரிக்கா இப்படித்தான் - அந்த நாடு திருந்துவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை!). பார்வையாளர்கள் தொலைபேசி மூலம் நிபுணர்களிடம் கேள்வி கேட்கும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து வியக்கிறார் மணியன். இந்த டெலிவிஷன் என்னும் மகத்தான சாதனம் என்று நம் நாட்டிற்கு வரப்போகிறதோ என்று ஏங்குகிறார். ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானா ஒரு டிவி பேட்டியில் 'இந்தியாவில் மிகவும் வருந்தத்தக்க நிலையில் ஒரு வாரத்தைக் கழித்தேன்' என்று கூறினாராம். என்ன நடந்ததோ?

          சிகாகோ நகரத்தில் (பிற்காலத்தில் நோபல் பரிசு பெற்ற) விஞ்ஞானி சந்திரசேகரைச் சந்திக்கிறார். அவரிடம் நம் நாட்டின்  திறமைசாலிகள் வெளிநாட்டில் வேலைசெய்வது பற்றிக் கேட்கிறார். சந்திரசேகரின் பதில்: அவர் இங்கிலாந்தில் டாக்டர் பட்டம் பெற்றவுடன் இந்தியாவில் வேலை பார்க்கவேண்டும் என்று திருப்பி வந்தாராம். ஒரு வருடம் காத்திருந்தும் ஒரு ரீடர் வேலை கூடக் கிடைக்கவில்லையாம். பிறகுதான் சிகாகோ பல்கலை உதவிப் பேராசிரியர் வேலைக்கு அழைக்க, அங்கு சென்றாராம். இந்தியாவில் திறமைக்கு மதிப்பு இல்லை, பல்கலைக்கழகங்களில் சிவப்பு நாடா முறை அதிகம் என்று குறைப்பட்டுக் கொள்கிறார் சந்திரசேகர். இந்நிலை இன்றுகூடப் பெரிதும் மாறிவிடவில்லையே  :(

           அமெரிக்காவில் எஸ்.டி.டி. வசதி, உணவகங்களில் இருக்கும் பில்லிங் மெஷின், வங்கிகளில் கம்ப்யூட்டர் உதவியுடன் ஒரு நிமிடத்தில் செக்குக்குப் பணம் தருவது, டிராஃபிக் நிலவரங்களை உடனுக்குடன் ரேடியோவில் அறிவிப்தைக் கேட்டபடிக் கார் ஓட்டுவது போன்றவை மணியனை ஆச்சரியப்படுத்துகின்றன. இதேபோல ஜப்பானில் கிராமத்தில்கூட  வீட்டுக்கு வீடு டிவி, பைக், வாஷிங்மெஷின் ஆகியவை இருக்கின்றன என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்.

           ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடிப்புக்குத் தப்பிய ஒருவரைச் சந்திக்கிறார். அணுகுண்டு விழுந்தபோது சத்தம் எதுவும் கேட்கவில்லையாம்! வழக்கமான குண்டு வீச்சுகளுக்குப் பழக்கப்பட்ட மக்கள், கட்டிடங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிவதைப் பார்த்து, விமானங்கள் மூலம் பெட்ரோலை ஊர் முழுவதும் ஊற்றித் தீவைத்துவிட்டார்கள் என்றுதான் முதலில் நினைத்தார்களாம்.

          வழக்கம்போல ஜப்பானியர்கள் தேனீ போலச் சுறுசுறுப்பானவர்கள், கடும் உழைப்பாளிகள் என்று மணியனும் தன் பங்குக்குச் சொல்கிறார். கியோட்டோ நகரம், நிறையக் கோயில்களும் அங்காடிகளுமாக மணியனுக்கு மதுரை நகரை நினைவுபடுத்தியதாம்.

           இந்தப் பயணங்களில் இங்கிலாந்தில் மாஸே ஃபெர்குசன், அமெரிக்காவில் ஃபோர்டு, ஜப்பானில் தோஷிபா என்று சில தொழிற்சாலை விசிட்களும் உண்டு. டைம், பஞ்ச், நேஷனல் ஜியாக்ரபிக், ரீடர்ஸ் டைஜஸ்ட் (அது இல்லாமலா!) பத்திரிகைகள், பிபிசி, ஜப்பான் என்.எச்.கே., அமெரிக்காவில் ஒரு வானொலி நிலையம் என்று சில ஊடக நிறுவனங்களையும் சென்று பார்த்திருக்கிறார்.



           மணியன் பெரும்பாலும் தான் செல்லும் நாடுகளிலுள்ள புகழ்பெற்ற இடங்களை ஏதோ போனேன், பார்த்தேன் என்ற அளவில் கடந்துசென்று விடுகிறார். சொல்லப்போனால் லண்டன் மாநகரைப் பற்றி அதிகமாகப் படித்து, புகைப்படங்களில் பார்த்துவிட்டதால் அங்கு எந்த இடமும் தன்னைப் பெரிதாகக் கவரவில்லை என்று ஒரே வரியில் முடித்துக்கொள்கிறார்! அதே சமயம், அந்தந்த ஊர்களில் டாக்ஸி டிரைவர், ஆலைத்தொழிலாளி தொடங்கிக் கல்லூரிப் பேராசிரியர் வரை பலதரப்பட்ட சாதாரண மனிதர்களுடன் பேசிப்பழகி, அம்மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, அரசியல் பார்வை குறித்த விவரங்களை மிகவும் ஆர்வத்துடன் வாசகர்களுக்குத் தருகிறார். இதுவே இப்புத்தகத்தின் சிறப்பம்சம் எனலாம் (இவற்றில் பல இன்றைய உலகமயத்தில் பரவலாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டன என்றாலும்).

            மேலை நாடுகளில் காணப்படும் உழைப்புக்கு மரியாதை (டிக்னிடி ஆஃப் லேபர்) நமது நாட்டுக்கு நூறாண்டு ஆனாலும் வராது என்று பலமுறை மாய்ந்து போகிறார் மணியன். அதேசமயம், பிற நாட்டவரின் டேட்டிங் கலாசாரம், பாலியல் சார்ந்த வெளிப்படையான அணுகுமுறை போன்றவற்றை அவரால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்தமாதிரி விஷயங்களில் இந்தியாவின் பழமைவாத, கட்டுப்பெட்டியான போக்கே மேல் என்று அவர் கருதுவதைக் காண முடிகிறது.

          சமயங்களில் மணியன் அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறார் -

           ஹவாய் ஹானலூலுவில் பீச்சுக்கு செல்லும்போது கோட்டு, சூட்டு, டை சகிதம் செல்கிறார்! அங்கு எல்லோரும் விநோதமாகப் பார்க்கவே, திரும்பிவந்து அவசரமாக ஒரு ஸ்லாக்கும், வேஷ்டியும் அணிந்துசெல்கிறார்! இப்போதும் பலர் அவரை முறைத்துப் பார்க்கிறார்கள் :)

        ஒரு அமெரிக்கப் பெண்ணின் அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்கு விருந்துக்குச் செல்கிறார். அங்கு அந்தப்பெண்ணும் அவரது தங்கையும் ஏதோ இசையை ஒலிக்கவிட்டு நடனமாடுவதுடன், மணியனையும் அதில் கலந்துகொள்ள அழைக்கிறார்கள்.  மணியன் தனக்கு ஆடத்தெரியாது என்று சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். மணியன், 'எங்கள் நாட்டில் சிறந்த கலைஞர்கள் மேடையில் ஆடுவார்கள், நாங்கள் ரசிப்போம்... குமாரி கமலா ஆடினால் எங்கள் உள்ளம் பரவசமடையும்... உங்கள் நாட்டைப்போல ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆடும் பழக்கம் எங்கள் நாட்டில் கிடையாது… நடனம் எங்கள் நாட்டில் பெரும் கலையாக மதிக்கப்படுகிறது...' என்று நீண்ட விளக்கம் தருகிறார் :)

           ஜப்பானில், அந்த நாட்டுப் பாரம்பரிய பாணியிலான ஓட்டலில் தங்குகிறார். கட்டில் இல்லாத அந்த அறைக்கு இரண்டு பணிப்பெண்கள் ஒரு படுக்கையைச் சுமந்து வர, மணியனுக்கு ஒரு கணம் தூக்கிவாரிப் போடுகிறது:)  பிரான்சில் ஸ்ட்ரிப் டீஸ், அமெரிக்காவில் ப்ளே பாய் கிளப், ஜப்பானில் நைட் கிளப் போன்ற பலான இடங்கள் எதையும் மணியன் விட்டுவைக்கவில்லை என்றாலும் அங்கெல்லாம் அவருக்குள் இருக்கும் கலாசாரக் காவலன் அவரை எதையும் ரசிக்கவிடுவதில்லை :)

           மொத்தத்தில் மணியன் எதிர்பார்த்த மற்றும் எதிர்பார்த்திருக்க முடியாத விதங்களில் இன்றைய வாசகர்களுக்குச் சிலபல சுவாரசியங்களைத் தருகிறது இதயம் பேசுகிறது. கடைசியாகப் புத்தகத்திலிருந்து சில துளிகள்--


  • கெய்ரோ மியூசியத்தில் ஒரு கைடு வரலாறு என்ற பெயரில் இஷ்டத்துக்கு ரீல் சுற்றுகிறார். இதே மாதிரிக் கதைகளை நம் மகாபலிபுர கைடுகளிடமும் நீங்கள் கேட்டிருக்கலாம் என்கிறார் மணியன்.
  • ரோம், நமது திருப்பதியைப்போல ஏழுமலை மீது அமைந்துள்ளது.
  • ஹாலிவுட்டில் உண்மையில் இருப்பவை இரண்டு ஸ்டுடியோக்கள் மட்டுமே. மற்றவை அப்பகுதிக்கு வெளியில்தான் அமைந்துள்ளன.
  • 1958ல் அமெரிக்காவில் 90 கோடிப் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கரும் 5 புத்தகங்களை வாங்கியிருக்கிறார்.
  • அமெரிக்க ஆங்கிலத்தில் 'கிவ் மீ எ பிட் ஆஃப் யுவர் ஸ்கின்' என்றால் 'கையைக் கொடுங்கள்' (குலுக்குவதற்கு) என்று அர்த்தமாம்.
  •  ஸ்டோகி கார்மைகேல் என்ற கருப்பு அமெரிக்க அரசியல் தலைவர் மிகவும் பிரபலமடைந்து வருகிறார். (பின்னாட்களில் என்ன ஆனார்?)
  • ஹோமி பாபா இறந்த பிறகு அணுசக்தித் துறைத் தலைமைப்பதவிக்கு சந்திரசேகரை அழைத்தார்களாம்! அது தனது துறை அல்ல என்று மறுத்துவிட்டாராம் (அஸ்ட்ரோ பிசிஸிஸ்ட்டான) அவர்.
  • லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் மணியன் 'விகடன் இருக்கிறதா?' என்று கேட்க, சில நிமிடங்களில் அவர் கையில் தருகிறார்கள்!
  • அமெரிக்காவில் தியாகராஜன் என்ற மாணவர் மணியனைச் சந்திக்கிறார். அவரது குடும்பம் பற்றிக் குடைந்து குடைந்து கேட்டபிறகே தமிழ்நாட்டின் ஒரு பிரபல தொழிற்குடும்பத்து வாரிசு அவர் (கருமுத்து தியாகராஜன் செட்டியார் பேரன்) என்று தெரியவருகிறது.
  • சில்க் புடவைகள், நல்முத்துகள், காமெரா பிளாஷ், ஸீகோ கடிகாரம், டேப் ரெகார்டர்—மணியனின் மனைவி, தம்பி மற்றும்  நண்பர்கள் அவரை ஜப்பானிலிருந்து வாங்கிவரச் சொன்ன ஐட்டங்கள்.
  • (எம்.எஸ்.) உதயமூர்த்தி அமெரிக்க, இந்திய நிலைமைகளை ஒப்பிட்டு எழுதிய நீண்ட வாசகர் கடிதம் ஒன்று புத்தகத்தின் இடையே முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

(குறிப்பு: வாழ்க்கை வரலாறு எழுதும் முறை பற்றி மணியன் ஒரு அமெரிக்கருடன் நடத்திய உரையாடல் சுவாரசியமானது. படிக்க விரும்புபவர்கள் விமலாதித்த மாமல்லனுக்கு நான் எழுதிய இந்தக் கடிதத்தில் அதை முழுமையாகப் படிக்கலாம். மாமல்லனின் சூடான எதிர்வினையும் பதிவில் உண்டு!)

இதயம் பேசுகிறது
மணியன்.
முதல் பதிப்பு ஆகஸட் 1968. பக்கங்கள் 336
வாசன் என்டர்பிரைஸஸ் வெளியீடு
(விற்பனை ஆனந்த விகடன்)

(ஆம்னிபஸ் தளத்தில் 27 ஜூன் 2013 அன்று வெளியானது.)

Tuesday, 25 June 2013

மதிப்புரை: தேக்கடி ராஜா--எம்.பி.சுப்பிரமணியன்


           முதலில் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்— நள்ளிரவு; தலைக்கு மேலே பௌர்ணமி நிலவு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது; அப்பொழுது—


    ...அந்தக் குன்றில் இருந்த சிறிய வீட்டுக்குள் போய்ச் சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு விளக்குடன், பாழடைந்த வீட்டின் பக்கமுள்ள மேட்டினருகில் சென்றது அவ்வுருவம்.

      இதற்குள் பெரிய கறுத்த உருவங்கள் அந்த மனிதனைச் சுற்றிவர ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் அந்தக் குன்றின் உச்சியிலும், சுற்றிலும் சிறியதும் பெரியதுமான கணக்கற்ற யானைகள் தோன்றின. ஆமாம் யானைகள்தான்! நான் எண்ணியதுபோல பேயோ பிசாசோ அல்ல. மனித உருவத்தை நாங்கள் இப்பொழுது பார்க்க முடியவில்லை. சுற்றியிருந்த யானைகள் அவனை மறைத்துவிட்டன. அந்தக்கூட்டத்திலிருந்த ஆண் யானைகளின் தந்தங்கள் சந்திர ஒளியில் மூன்றாம் பிறை மதியைப் போல பிரகாசித்தன. கூட்டத்தின் நடுவே ஒரு புதிய ஒளி தோன்றியது. அந்த ஒளி வருவதைக் கண்டதும் அந்த அதிசய மனிதன் எதற்கோ தீபாராதனை காட்டுகிறான் என்று ஊகித்தேன்.
     அதே சமயம் சுற்றியுள்ள யானைகள் தங்கள் துதிக்கைகளைத் தூக்கி வீறிட்டன. காடே அதிர்ந்தது. என் உடல் நடுங்கியது. பயத்தால் அல்ல, அந்த யானைகள் பிளிறுவதில் இருந்த வீரத்தையும் கம்பீரத்தையும் கண்டுதான். பல வீரர்கள் சேர்ந்து வீர கர்ஜனை செய்யும் காட்சிதான் என் மனத்தில் தோன்றியது. இம்மாதிரி ஓர் அபூர்வமான காட்சியை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. செயலற்று நின்றுகொண்டிருந்தேன். குன்றிலிருந்த யானைகள் எல்லாம் மறைந்துவிட்டன. அந்த மனிதனையும் காணவில்லை.
     
            என்ன ஒரு சிலிர்ப்பூட்டும் காட்சி! இப்போது இதைக் கேளுங்கள்; இது ஒரு உண்மைச் சம்பவம்! நடந்த இடம்: தேக்கடி; ஆண்டு: 1950-களில்; பார்த்தவர்- எம்.பி.சுப்பிரமணியன். பார்த்ததோடு நில்லாமல் இந்த அதிசய சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்து ஒரு அருமையான சிறுவர் நாவலாக எழுதிவிட்டார். அதுவே ‘தேக்கடி ராஜா’. என்னிடமிருக்கும் பதிப்பு வெளியான ஆண்டு 1996. முதல் பதிப்பு வெளியான ஆண்டு தெரியவில்லை. என் அம்மா இக்கதையைத் தான் சிறுமியாக இருந்தபொழுது ’50 களின் இறுதியில் ஏதோ பத்திரிகையில் தொடராகப் படித்திருப்பதாகக் கூறுகிறார். பத்திரிகை கண்ணன் அல்லது  ஒருவேளை விகடனாக இருக்கலாம். 

       கதைக்கு வருவோம். தங்கசாமி, நளினி என்ற இரு சிறுவர்களைப் பற்றியதே இக்கதை. தங்கசாமி தேக்கடிக் காட்டில் ரேஞ்சர் மகன்; நளினி அங்கிருக்கும் அணைக்கட்டு ஆபீசரின் (அன்று அணை, காடு இரண்டும் ஒரே அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கலாம்) பெண். நளினிக்கு வயது 12; தங்கசாமிக்கு ஒரிரு வயது அதிகமிருக்கலாம். அவன் கூறுவதாகவே கதை சொல்லப்படுகிறது. 

     அது ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். தேக்கடி திருவனந்தபுரம் மகாராஜா ஆட்சிக்குட்பட்ட பகுதி. காட்டுக்கு அருகே அன்று பள்ளிகள்  இல்லாததால் ஆபீசரே குழந்தைகள் இருவருக்கும் வீட்டிலேயே (அணைக்கட்டு பங்களா) பாடம் சொல்லித் தருகிறார். மற்ற நேரங்களில் நளினி, தங்கு (அப்படித்தான் நளினி அழைக்கிறாள்) இருவரும் காட்டில் மனம்போனபடி சுற்றித் திரிகிறார்கள். அல்லது ஆற்றில் படகில் பயணிக்கிறார்கள். திகட்டத் திகட்ட இயற்கை அழகில் திளைக்கிறார்கள்—
     'காலை வேளையில் காடே வெகு அழகாக இருந்தது. ஆங்காங்கு மான்கள் துள்ளி ஓடிக்கொண்டிருந்தன. கருப்பும் மண் நிறமுள்ளவையுமான குரங்குகள் தாவிக்கொண்டு இருந்தன. கரை ஓரத்தில் எத்தனை விதமான பறவைகள், நீர்க்கோழிகள், மீனுக்காகக் காத்திருந்தன! அவைகளுக்குத்தான் என்ன பொறுமை! மணிக் கணக்கில் மீனுக்காகக் காத்திருந்தன. தூரத்தில் பால்க்காய்ச்சி மலை தெரிந்தது.'
   தங்கசாமிக்குக் காடு அத்துபடியாக இருக்கிறது. அத்துடன் மிகுந்த துணிச்சலும், சமயோசிதமும் கொண்டிருக்கிறான். ஒருமுறை காட்டுக்குள் நடந்த போரில் தோற்றுப்போன யானை ஒன்றை நேருக்குநேர் பார்த்துவிடுகிறார்கள். இத்தகைய யானைகள் ‘பயங்கரமானவை; ஒரு காரணமுமில்லாமல் ஆட்களைத் தாக்கிக் கிழித்தெறியத் தயங்கா. எப்பொழுதும் கோபம் நிறைந்த மனத்துடன் இருக்கும்’. தங்கசாமி சட்டென சமயோசிதமாக செயல்பட்டதாலேயே இருவரும் தப்பிக்கிறார்கள்.


    ஒரு சமயம் காட்டிலிருந்து ஒரு யானைக்குட்டியைப் பிடித்துவந்து விடுகிறான் தங்கு! அதற்கு ராஜா என்று பெயரிட்டுக் குழந்தைகள் இருவரும் வளர்க்கிறார்கள். அதேபோல ஒரு மான்குட்டியைச் செந்நாய்க் கூட்டத்திடமிருந்து காப்பாற்றி, அதற்கு மின்னி என்று பெயரிட்டு அதையும் வளர்க்கிறார்கள். இந்த யானைக்குட்டியைத் தங்கு பிடிக்கும் கட்டமும், மான் குட்டியைக் காப்பாற்றும் கட்டமும் சாகசமும், சஸ்பென்ஸும் கொண்டவை.

    கதைப்போக்கில் காட்டையும் விலங்குகளையும் பற்றிப் பல தகவல்கள் சொல்லப்படுகின்றன. ஒருமுறை ஒரு யானை தண்ணீருக்குள்ளேயே பல நாட்கள் நிற்கிறது. மற்ற யானைகள் அதற்கு மரக்கிளைகளை ஒடித்து வந்து உணவாகக் கொடுக்கின்றன. இது ஏன் என்று தங்கசாமிக்கும், ஆபீசருக்கும் தெரியவில்லை. பிறகு மதுரைக்குச் சென்றிருந்த தங்கசாமியின் அப்பா திரும்பி வந்ததும் அதை விளக்குகிறார். காயம் ஏதாவது ஏற்பட்ட யானை, பூச்சிகள் புண்ணில் அமர்ந்து தொந்தரவு செய்யாமல் தடுக்கவும், புண் ஆறவும் இப்படி அந்த உடல்பகுதி தண்ணீருக்குள் இருக்குமாறு நின்றுகொள்ளுமாம். அந்தச் சமயத்தில் மற்ற யானைகள்தான் அதற்கு உணவு கொடுக்குமாம்.

    இப்படியாக நாட்கள் சென்று கொண்டிருக்கின்றன. இடையில் மின்னி தன் கூட்டத்தினருடன் போய்ச் சேர்ந்து கொள்கிறது. காட்டுக்குள்ளேயே இருந்தால் நளினிக்கு மாப்பிள்ளை பார்ப்பது எப்படி என்று அவளது தாய் கவலைப்பட ஆரம்பிக்கிறாள். ஆபீசர் இடமாற்றலுக்கு முயற்சி செய்கிறார். ராஜாவும் சற்று வளர்ந்துவிட்டதால், இனி அதுவும் தன் கூட்டத்துடன் சென்று வாழ்வதே நல்லது என்று அனைவரும் முடிவெடுக்கிறார்கள். மேலும் உடுப்பியிலிருந்து ‘சிவப்பழமாக’ வரும் சோதிடர் ஒருவர், ராஜாவை இப்படியும் அப்படியுமாக நடக்கச்செய்து பார்த்துவிட்டு, ‘இந்த யானை சகல நற்குணங்களையும் கொண்டுள்ளது. காட்டிலுள்ள யானைகளுக்கெல்லாம் ராஜாவாக விளங்கும். ஆனால் அகால மரணமடையும். அதை நேசித்தவர் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இதை வீட்டில் வைத்துக் கொள்வது நல்லதல்ல. காட்டிலே திரியவேண்டிய ராஜா இது. இங்கிருந்தால் உங்கள் குடும்பத்திற்குக்கே கேடு, இதைக் காட்டில் அதன் கூட்டத்தினருடன் வாழவிட்டுவிடு’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்! 

    ஆபீசர் ஊரைவிட்டுப் போக இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. ‘நாம் ஊரைவிட்டுப் போகும் வரையிலாவது நம்முடன் ராஜா இருக்கட்டுமே’ என்கிறாள் நளினி. ஆபீசரோ, அப்படிச் செய்தால் அடுத்துவரும் ஆபீசர் அதை வாங்கிக் கொள்வார். அது பிறகு காட்டு இலாகா யானையாகி, மரம் இழுத்துக் கஷ்டப்பட வேண்டும்; ‘உன் ராஜா தனிக்காட்டு ராஜாவாகக் காட்டிலேயே வாழட்டும்’ என்று சொல்லிவிடுகிறார். இதன்படியே ராஜா  திரும்பவும் காட்டில் விடப்படுகிறது. இதற்கிடையில் மின்னி ஒருமுறை தன் குட்டிகளுடன் வந்து நளினியையும், தங்குவையும் பார்த்துச் செல்கிறது. சில நாட்களில் ஆபீசர் குடும்பமும் மாற்றலாகிப் போக, தங்கசாமிக்கு ‘வாழ்க்கையே சூனியம் பிடித்தமாதிரி ஆகிவிடுகிறது’ பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனதைத் தேற்றிக் கொள்கிறான். இன்னொரு ஆபீசர் குடும்பம் வந்து போகிறது. ராஜா அவ்வப்போது— பெரும்பாலும் பௌர்ணமி தினங்களில்— அணைக்கட்டு பங்களா அருகில் வந்து தங்குவைப் பார்த்துச் செல்கிறது..

    கதையில் இதன்பிறகு பல எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒருநாள் ஒரு மான் கூட்டத்தில் மின்னி தென்படுகிறதா என்று தங்கு பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்போது ஒரு தாய்மானையும் அதன் குட்டியையும் யாரோ துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார்கள். துடித்துப்போகும் தங்கு யார் இந்த அநியாயம் செய்தது என்று ரேஞ்சர் என்ற முறையில் தேடிச் செல்ல, சுட்ட ஆள்தான் புதிதாக வந்திருக்கும் ஆபீசர் என்று தெரியவருகிறது. இதற்கெல்லாம் மேல், அவனுடைய மனைவியாக வந்திருப்பவள் நளினி! அவள் வெளிறிப்போய், கண்களில் உயிரற்ற பார்வையுடன் இருக்கிறாள். தங்கசாமிக்குக் காரணம் புரியவில்லை.

 பங்களாவுக்குப் பெட்டி பெட்டியாகப் பல்வேறு விலங்குகளின் தலைகளும், யானைத் தந்தங்களும் வந்து இறங்குகின்றன. எல்லாம் அந்த ஆள் சுட்டவைதான். தேக்கடிக் காட்டிலும் தன் கொலைபாதக வேட்டைகளைத் தொடர்கிறான் புதிய ஆபீசர். நாள்பூராவும் துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டபடி இருக்கிறது (பின்னாட்களில்தான் மகாராஜா அந்தக் காட்டில் எந்த விலங்கையும் வேட்டையாடக் கூடாது என்று சட்டமியற்றுகிறார்).



    ராஜா ஒரு பௌர்ணமியன்று அணைக்கட்டு பங்களாவிற்கு நளினியையும், தங்குவையும் பார்க்க வருகிறது. ராஜாவை ஆபீசர் சுட்டு விடுவாரோ என்று தங்கு பயப்படுகிறான். ராஜாவைச் சுடமாட்டேன் என்று தன் கணவன் உறுதி தந்திருப்பதாகச் சொல்கிறாள் நளினி. ஆனாலும் இன்னொரு நாள் ராஜா பங்களாவுக்கு அருகில் வரும்போது சுட முயற்சி செய்கிறார். அப்போது ராஜா அவரைத் தூக்கி எறிகிறது. பிறகு ராஜாவைக் காட்டுக்குள் அனுப்பிவைக்கிறான் தங்கு. எப்படியாவது ராஜாவைக் காப்பாற்றவேண்டுமே என்று யானைக் கூட்டங்களை வானத்தில் சுட்டு வெகுதூரம் விரட்டி விடுகிறான்.. இதில் ஆபீசருக்கு அவன்மேல் கடும் கோபம்.

    ஒருநாள் பௌர்ணமியன்று திட்டமிட்டுத் தங்கசாமியை வெளியூருக்கு அனுப்புகிறார் ஆபீசர். சாதாரணமாக நினைத்துப் புறப்படும் தங்கு, அன்று பௌர்ணமி என்று தெரிந்ததும், ஆபீசர் ராஜாவைக் கொல்லத்தான் தன்னை அனுப்பியிருக்கிறான் என்று புரிந்துகொண்டு வேகமாகத் திரும்பிவருகிறான். அவன் வந்து சேரவும் ராஜா அணைக்கட்டு பங்களாவிற்கு வரவும் சரியாக இருக்கிறது. அடுத்து வருவது விறுவிறுப்பும், அச்சமும், உருக்கமும் நிறைந்த உச்சகட்டம். 

     ராஜாவைத் தங்கசாமி காப்பாற்றினானா? ஆபீசர் என்ன ஆனார்? நளினிக்கு என்ன ஆனது என்பதையெல்லாம் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

    சில மணிநேரங்களில் படித்து முடித்துவிடக்கூடிய இந்த 123 பக்கப் புத்தகத்தில் சாகசம், துணிச்சல், சஸ்பென்ஸ், டிராமா என அத்தனை அம்சங்களும் நிறைந்திருப்பது சிறப்பு. காடும், விலங்குகளும் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் ஆர்வமூட்டக்கூடியவை. நளினி குடும்பம் சென்ற பிறகு ஒரு கடும் வறட்சி ஏற்பட்டு விலங்குகள் தண்ணீருக்குத் தவிப்பதும், பிறகு ஒருவழியாக மழைவந்து மீண்டும் பசுமை நிறைவதும் ஒரு சிறுகதை போலச் சொல்லப்பட்டுள்ளன. யானைகள் வற்றிய நதிப் படுகையில் பள்ளம்தோண்டி நீர் பருகுவதும், அதற்காக மற்ற விலங்குகள் காத்திருந்து அவை போன பின்பு தண்ணீர் குடிப்பதும் வியப்புக்குரிய ஒழுங்கோடு நடப்பதைப் பார்க்கிறோம். 

    இப்புத்தகத்துக்கு சி.யோகேஸ்வர மூர்த்தி, எம்.எஸ்.அப்பாராவ் ஆகிய புகைப்படக் கலைஞர்கள் எடுத்த காட்டு யானைகளின் சில நல்ல கறுப்புவெள்ளைப் புகைப்படங்களும், கோபுலு வரைந்த அழகிய கோட்டுச் சித்திரங்களும் அழகு சேர்க்கின்றன. புகைப்படங்களை அடுத்த பதிப்பில் இன்றைய கணினி வசதிகளால் இன்னும் அழுத்தமாக அச்சிட முடியும். 

    எழுதப்பட்டு சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டதால் நடை மட்டும் சில இடங்களில் சற்றுப் பழையதாகத் தோன்றக்கூடும்; ஆனாலும் அது கதையோட்டத்தின் சுவாரசியத்தைத் தடுப்பதாக இல்லை. புத்தகம் இப்போது அச்சில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அரசு நூலகங்களுக்கு வாங்கப்பட்ட புத்தகம் என்பதால் ஏதாவது நூலகத்தில் கிடைக்கக்கூடும் (இத்தனை காலத்தில் கழித்துக் கட்டப்படாத பிரதிகள் இருந்தால்).

    பிற உயிரினங்களை வாழ வைப்பது தன் கடமை, தன் நல்வாழ்விற்கே இன்றியமையாதது என்று மனிதகுலம் உணரவேண்டும் என்ற கருத்தை இளம் உள்ளங்களில் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் இப்புத்தகத்தைப் பிரசுரிப்பதாகப் பதிப்பாளர் கா.பனையப்பன் கூறியிருக்கிறார். அவர் நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லலாம் இந்தப் புத்தகம் சிறுவர்களைச் சென்றடைந்தால். நல்ல சிறுவர் இலக்கியம் பெரியவர்களும் படித்து ரசிக்கும்படியாக இருக்கும் என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு உதாரணம்.

தேக்கடி ராஜா
எம்.பி.சுப்பிரமணியன்
அபிராமி பப்ளிகேஷன்ஸ்
306, லிங்கி செட்டி தெரு,
சென்னை-600 001.
1996

(ஆம்னிபஸ் தளத்தில் 16 ஜூன் 2013 அன்று வெளியானது.)

Sunday, 23 June 2013

மதிப்புரை--ஸ்ட்ரீட் லாயர் – ஜான் கிரஷாம்

           ஜான் கிரஷாம் வழக்கறிஞர்களையும் வழக்குகளையும் மையமாக வைத்து லீகல் திரில்லர் எழுதுபவர். இவருடைய புத்தகங்களில் சற்றே வித்தியாசமானது ‘ஸ்ட்ரீட் லாயர்’. (மேலும் வித்தியாசமான- காமெடி- புத்தகமான ‘ஸ்கிப்பிங் கிருஸ்மஸ்’ தவிர).



           இப்புத்தகத்தின் கதாநாயகன் மைக்கேல் ப்ரோக், வாஷிங்டன் நகரில் அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய சட்டக் குழுமமான டிரேக் அன் சானி-யில் பணியாற்றுகிற அதிபுத்திசாலியான, பெரும் வணிக நிறுவனங்களுக்காக ஆஜராகிற (ஆன்ட்டி-ட்ரஸ்ட்) லாயர். இன்னும் மூன்றே ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஆகிவிடும் நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பவன். என்ன, அவனது மணவாழ்வுதான் ஊசலாட்டத்தில் இருக்கிறது.

          இந்த நிலையில் ஒருநாள் வீடற்றவன் ஒருவன், கையில் துப்பாக்கியோடு அலுவலகத்துக்குள் நுழைந்து மைக்கேல் உட்பட ஆறு பேரைப் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துக் கொள்கிறான். தன்னை வெறுமனே ‘மிஸ்டர்’ என்று அழைக்கச் சொல்லும் அவனுக்குக் கோரிக்கைகள் எதுவும் இல்லை. மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் வழக்கறிஞர்களுக்கு ஏழைகள், வீடற்றவர்கள் மீது ஏதாவது அக்கறை இருக்கிறதா?, என்று கேள்விகளால் துளைக்கிறான். பிறகு போலீசாரால் அனைவரும் மீட்கப்படுகிறார்கள்— ஒரு அதிரடி நடவடிக்கை மூலமாக.

          இந்தச் சம்பவம் மைக்கேலின் வாழ்க்கையைப் ‘புரட்டிப் போட்டுவிடுகிறது’. யார் இந்த ‘மிஸ்டர்’ என்று ஆராயப்புகும்போது அவனுக்குக் கிடைப்பது சில அதிர்ச்சித் தகவல்கள். ‘மிஸ்டரின்’ நிஜப்பெயர் டி வான் ஹார்டி என்றும், அவன் குடியிருந்த ஒரு மலிவான இடத்திலிருந்து அவனையும், இன்னும் பலரையும் காலி செய்ததில் தனது நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் தெரிய வருகிறது. அதுவும் அப்படிக் காலி செய்யப்பட்டவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, டில்மான் கான்ட்ரி என்ற முன்னாள் பெண்-தரகன் ஒருவனுக்கு வாடகை கொடுத்துவந்தவர்கள் என்று தெரியும்போது கொந்தளிப்பாக உணர்கிறான். இதுவரை அவன் சிறிதும் அக்கறை செலுத்திக் கவனித்திராத சாலையோர மக்களின் உலகம் அவனுக்கு அறிமுகம் ஆகிறது. காலி செய்யப்பட்ட லோன்டே பர்டன் என்ற பெண்ணும் அவளது நான்கு குழந்தைகளும் வீடில்லாமல் ஒரு பழைய காருக்குள் இரவைக் கழித்து, மூச்சுத் திணறி இறந்துவிடுகிறார்கள். முந்தைய நாள்தான் மைக்கேலின் கையில் உயிர்ப்புடன் இருந்த குழந்தை ஒண்டாரியோ மரணித்து விறைத்துக் கிடப்பது நம்மையே உலுக்குகிறது. அதை மைக்கேலால் ஜீரணிக்கவே முடிவதில்லை. தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எவ்விதத்திலும் நியாயமானதே அல்ல என்று உணர்கிறான்.

         இதன்பின் கிரஷாம், மைக்கேல் நடத்தும் மூன்று விதமான போராட்டங்களை மிகவும் நம்பகத்தன்மையுடன் சொல்லிச் செல்கிறார்—மனைவி க்ளேருடன் அவனது முறிந்துவரும் உறவு; டி அன் எஸ் (வேலையை விட்டாச்சு) நிறுவனத்துடன் ஜனங்கள் காலி செய்யப்பட்டது தொடர்பான ஒரு கோப்பு பற்றிய போராட்டம் (இதை மைக்கேல் முட்டாள்தனமான ஒரு தருணத்தில் திருடிவிடுகிறான்); நடைபாதைவாசிகளுக்காக அவன் நடத்தும் யுத்தங்கள் என்ற மூன்று இழைகளாகக் கதை போகிறது.

          நாவலில் கதாபாத்திரங்கள் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மைக்கேலின் நண்பர்- தத்துவாசிரியராக உருப்பெறும் மார்டெக்கை கிரீன். வாசகர்கள் கிரீனை நிச்சயம் மறக்க மாட்டார்கள் (நான் மறக்கவில்லை). கிரீனுடன் வரும் துணைக் கதாபாத்திரங்களான வழக்கறிஞர்கள் சோபியா, ஆப்ரஹாம், மைக்கேல், ஃபைலைத் திருட உதவும் அலுவலக உதவியாளனான சராசரி மத்தியவர்க்கப் பிரதிநிதி ஹெக்டர் பால்மா ஆகியோர்கூட நிஜம்போல நம் கண் முன் உலவுகிறார்கள். ஒரே விதிவிலக்கு மைக்கேலின் மனைவி க்ளேர்தான். அவளைப் பற்றி நாம் சரியாக அறிந்து கொள்ள முடியாத உணர்வுதான் மிஞ்சுகிறது.

           சஸ்பென்ஸ், விறுவிறுப்பு போன்றவற்றில் மற்ற க்ரிஷாம் நாவல்களுக்கு ஸ்ட்ரீட் லாயர் சம ஈடாகாதுதான். ஆனாலும் கடைசிவரை விடாமல் படிக்க வைக்கிறது. நகர்ப்புற அமெரிக்காவின் சேரி வாழ்க்கையை உணர்வுபூர்வமாக ஒரு த்ரில்லர் கதைக்குள்ளாகச் சொல்வதே இதன் சிறப்பு. இருட்டுக்கு நடுவிலும் கிரஷாம் நல்ல விஷயங்களின் ஒளிக்கீற்றுகளைச் சொல்லத் தவறுவதில்லை. வீடற்றவர்களுக்காக எத்தனையோ பேர் தன்னலமின்றிப் பணியாற்றுகிறார்கள். அம்மக்களுக்காகத் தங்குமிடங்கள், சூப் கிச்சன்கள், மருந்தகங்கள், சட்ட உதவி மையங்கள், போதை மாற்றுச் சிகிச்சை மையங்கள் என எத்தனையோ அவர்களால் நடத்தப்படுகின்றன. ஒரு சராசரி நடைபாதைவாசி, இந்தியாவைவிட அமெரிக்காவில் சற்று அதிக அக்கறையுடன் கவனிக்கப்படுவதாகவே தோன்றுகிறது.

           ஒரு நகரம் எப்படி வீடற்றவர்கள் எது செய்தாலும் அதைக் குற்றமாக்கி (க்ரைம்) வைத்திருக்கிறது என்று கிரஷாம் காட்டுகிறார்— இங்கே உட்கார்ந்தால் குற்றம், அங்கே சாப்பிட்டால் தப்பு, இன்னோரிடத்தில் படுத்தால் குற்றம் என்பதாக. இவ்வளவுக்கிடையிலும் வீடற்றவர்கள் வாழ்வை கிரஷாம் ‘ரொமாண்டிசைஸ்’ செய்வதில்லை. போதையும், குடியும் குற்றமும் நிரம்பிய அந்த வாழ்வை அப்படியே சித்தரிக்கிறார். மைக்கேல் ‘நடைபாதை வழக்கறிஞன்’ ஆன பின்பும், ஒவ்வொரு முறையும் கருப்பு அமெரிக்கர்கள் வாழும் பகுதியில் அமைந்த அந்தச் சிறிய அலுவலக அறைக்கு வரும்போது யாராவது (நாளை அவனுடைய கட்சிக்காரர்கள் ஆகக் கூடிய அதே ஆசாமிகள்தான்)  தன்னைத் தாக்கி வழிப்பறி செய்துவிடுவார்களோ, சுட்டுவிடுவார்களோ என்று பயந்தபடிக் காரிலிருந்து அவசரமாக இறங்கி உள்ளே புகுந்து கொள்ளவே வேண்டியுள்ளது.

             பகாசுர வணிக நிறுவனங்களின் மெகா இலாபங்களை இன்னும் அதிகரிப்பது தொடர்பான சிந்தனைகள் அன்றி வேறு எதையும் சிந்தித்திராத கார்பரேட் லாயரான மைக்கேல் ஒரு சில மாதங்களில் மும்முரமாக சூப் கிச்சனில் காய்கறி வெட்டிக் கொண்டிருப்பது அவன் கனவிலும் நினைத்திராத மாற்றம். இம்மாதிரியான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கலாம், அல்லது நாளை மறுநாளே ஏற்படலாம்! ஏன், நாம் அன்றாடம் அலுவலகம் போகும் வழியில் சாலை ஒரத்திலும், பாலத்துக்கு அடியிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்... நம் குழந்தை ப்ளே ஸ்கூலில் இருக்க, சரியான உடையின்றி, நோஞ்சானாக இங்கே குப்பையில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் என்ன தப்பு செய்தார்கள் என்று நம்மில் பலரும் யோசிக்க ஆரம்பித்தால், உலகமே கொஞ்சம் நல்லவிதத்தில் மாறலாம்! இதுவே இந்த நாவலின் ஆதார செய்தி.

            ஒரு வீடற்ற வெள்ளையன் தன் கதையை மைக்கேலிடம் சொல்லுமிடம் ஒரு அழகான சிறுகதை. நன்நம்பிக்கைத் தொனியுடன் முடிவடையும் ஒரு நல்ல நாவல் ஸ்ட்ரீட் லாயர். இந்த நாவலில் நாம் காணும் ஒரு அதிர்ச்சியூட்டும் சித்திரம், வீடற்றவர்களில் சில முன்னாள் இராணுவத்தினர், இராணுவத்தினரின் மனைவிகளும் உண்டு என்பதுதான் (மைக்கேல் உள்ளிட்ட ஆறுபேரைப் பிடித்து வைத்திருந்த ஹார்டி உட்பட).

            இதுதான் உண்மை நிலை என்றால் (ஜான் கிரஷாம் எதையும் ஆராயாமல் எழுதுபவர் அல்ல), அடுத்த முறை ஏதேனும் ஒரு நாடு மீது குண்டு போடப் படைகளை அனுப்பும் முன்பு அமெரிக்க அதிபர் இவர்களைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கலாம். ஒரு போர் விமானம் வாங்கும் காசில் எத்தனை ஏழைகளுக்கு (தன் நாட்டு ஏழைகளுக்குத்தான்!) வீடு கட்டித் தர முடியும் என்றும்கூட.

(ஆம்னிபஸ் தளத்தில் 10 ஜூன் 2013 அன்று வெளியானது.)