Thursday 25 March 2010

ஜிகர்தண்டா 25 மார்ச் 2010

என் இனிய வலை மக்களே! சென்ற முறை கிச்சடியோடு வந்த நான் இப்பொழுது ஜிகர்தண்டாவோடு... கிச்சடி ஏற்கனவே இன்னொருவர் பரிமாறிவிட்டதாகத் தெரிய வந்ததால் இப்ப ஜிகர்தண்டாவுக்கு மாறிவிட்டேன். இது ஏன் முதல்லயே தோனலை என்பதுதான் ஆச்சரியம். அது சரி, ஆறு மாத இடைவெளி ஏன்னு கேட்கறீங்களா (கேட்கறீங்க!)... வேற ஒன்னுமில்லண்ணா. நமக்குக் கொலைவெறி அவ்வளவு அடிக்கடியெல்லாம் வர்ரதில்லை :-)

**********
• மாவோயிஸ்டுகள்
• பொருளாதார மந்த நிலை
• விலைவாசி உயர்வு
• பள்ளி செல்லாத குழந்தைகள்
இவற்றையெல்லாம் விடக் கவலை தரக்கூடிய விஷயமாக நம் அரசாங்கம் நினைப்பது எதைத் தெரியுமா? எஃப் டிவியில் நடு ராத்திரி யாராவது டாப்லெஸ் ஆக ஐந்து செகண்டுகள் தோன்றிவிடுவார்களோ என்பதையே! எனவே எஃப் டிவியை 24 மணி நேரமும் (நம் வரிப்பணத்தில்) ஆளைப் போட்டு கண்காணிக்கிறது. சிரித்துவிட்டுச் செல்லலாம் – இதற்குப்பதில் அத்த அதிகாரி பள்ளி வாகனங்களையோ போலி மருந்துகளையோ கண்காணித்திருந்தால் சில குழந்தைகளின் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும் என்பது ஞாபகம் வந்து தொலைக்காமல் இருந்தால்.

*****************
புதிய தலைமுறை இளைஞர் பத்திரிகை என்று சொல்கிறார்கள். இளைஞர் பத்திரிகையில் மருந்துக்குக்கூட அரசியல் இல்லாதது விநோதம். அட, கட்சி அரசியலை விடுங்க...மாற்று அரசியல், உலக அரசியல்? மூச்! அதிலும் ஈழப்போர் மிக உக்கிரமாக நடந்துகொண்டிருந்தபொழுது ஆரம்பிக்கப்பட்ட இதழில் ஈழம் அல்லது இலங்கை என்ற சொற்களே காணப்படுவதில்லை. என்னத்தைச் சொல்ல?

மற்றபடி அப்துல் கலாம் எதிர்கால இந்தியா பற்றியும், சோம வள்ளியப்பன் பங்குச்சந்தை பற்றியும், ரமேஷ் பிரபா பிஸினஸ் வெற்றியாளர்கள் பற்றியும் பத்து வருடங்களுக்கு முன்னாலேயே எழுதிவிட்டார்கள். மாத்தி யோசிங்கப்பா.

*************
சென்ற முறை எட் மெக்பெய்ன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது அவரது காப் ஹேட்டர் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் அவரது 87-வது பேட்டை நாவல்களில் முதலாவது. இவை தவிர மெக்பெய்ன் மாத்யூ ஹோப் என்கிற துப்பறியும் லாயரை வைத்தும் நிறைய நாவல்களை எழுதியுள்ளார். மாத்யூ ஹோப் கணேஷ் – வசந்த்துக்கு முன்னோடி. ஆமாம், மெக்பெய்ன் எழுத வந்தது சுஜாதாவிற்குச் சுமார் பத்து வருடம் முன்பு.

***************
வாத்தியார் கதைகளில் ஓட்டைகள் இருப்பது வழக்கம்தான். ஆனாலும் இப்படியா அநியாயத்திற்குக் கதையே கந்தலாக இருக்கும் என்று கேட்க வைக்கிறது நில்லுங்கள் ராஜாவே.

• இதில் ராஜா என்பவனை சைக்கையாட்ரிஸ்ட் உதவியோடு தன்னை ஜவஹர் விட்டல் என்பவனாக எண்ண வைக்கிறார்களாம். அந்த ஜவஹர் விட்டலும் அதே சைக்கையாட்ரிஸ்டின் நோயாளி என்பதால், அந்த மருத்துவருக்கு அவனைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரியுமாம். விட்டலின் வேலை, எத்தனை குழந்தைகள் என்பது போன்ற விவரங்கள் மருத்துவருக்குத் தெரியலாம், சரி. அவன் மனைவி உடலில் இருக்கிற மச்சம், வீட்டில் காரை பெயர்ந்திருக்கிற இடம் போன்ற விஷயங்களெல்லாம் கூட எப்படித் தெரிந்தது?
• மேலும், ஒருவனைப் பதினைந்து நாளாகக் காணவில்லை என்றால் நிச்சயம் போலீசில் புகார் செய்திருப்பார்கள். அவன் ஃபோட்டோ எல்லாக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கும். ஆக, அந்த ஆளைப் பிடித்தவுடனேயே, `அடப்பாவி, உன்னைத்தான் 15 நாளாகத் தேடுகிறோம்` என்று சொல்லியிருப்பார்கள்! இங்கோ, அவனைக் காவல்துறை கோர்ட், சிறை என்று இழுத்தடிக்கிறார்களாம், அவன் யாரென்றே தெரியாமல்!
• ஒரு நாட்டு அதிபருக்குக் கட்டாயம் மெய்க்காப்பாளர்கள் இருப்பார்கள். மேலே பாய்ந்து, கையில் கிடைத்ததை வைத்தெல்லாம் கொன்றுவிட முடியாது. இவ்வளவு சொதப்பலாகவெல்லாம் யாரும் (CIA வாம்!) திட்டமிட மாட்டார்கள்!

மீதி ஓட்டைகளுக்கு நூலைக் காண்க. (விசா வெளியீடு)

**************
இந்த வாரம் டிவியில் பார்த்த ஆங்கிலப்படம் அனலைஸ் திஸ். மாஃபியா கும்பலிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படும் மனநல மருத்துவரைப் பற்றிய நகைச்சுவைப் படம். கமலின் தெனாலிக்கு இன்ஸ்பிரேஷன்?!

***************
இரண்டு மேற்கோள்கள்:

“அன்று திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் சிவ பெருமான் காலடியிலேயே விழுந்து கிடந்தார். இந்தத் திருவாசகம் அண்ணன் அழகிரியின் காலடியிலேயே விழுந்து கிடக்கிறேன்” – மதுரையில் நடந்த மு. க. அழகிரி பிறந்தநாள் விழாவில் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஜி. திருவாசகம்.

“[இலங்கை இறுதி யுத்தத்தின் போது] தூக்கமில்லாமல் தவித்த இரவுகள் ஞாபகம் வருவதால் தமிழ் மாநாட்டிற்குப் போக மாட்டேன்” – சன்டே இந்தியனில் முனைவர் தொ. பரமசிவம்.