Sunday 16 August 2009

கங்கை நீர் செய்த அற்புதங்கள்: டாக்டர் ஆபிரஹாம் கோவூர்





என் தாய்மண்ணான கேரளா, இயற்கை அமைப்பு, பருவநிலை, விலங்கின, தாவர வகைகள் ஆகியவற்றில் மட்டுமல்லாது, மக்களின் இன, பண்பாட்டுக் கூறுகளிலும் ஸ்ரீ லங்காவை மிகவும் ஒத்தது எனலாம். ஸ்ரீ லங்காவில் இருப்பது போன்றே பேயோட்டுதல், வெறியாட்டம் ஆகியவை இன்றும் கேரள கிராமவாசிகளிடையே மிகப் பிரபலம். அரை நூற்றாண்டுக்கு முன்பு, நான் சிறுவனாயிருந்தபொழுது, வீட்டில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால் உடனே பேயோட்டுவது வழக்கம். பல வீடுகளில் ஏதாவது “புனித” மருந்தோ, தாயத்தோ வைத்திருப்பார்கள். அது தங்களுடைய சகல பிணிகளையும் போக்கிவிடும் என்பது அவர்களுடைய ஐதீகம்.

“நாயர்”களைப்பொருத்தவரை அது புனித நகரான காசியிலிருந்து வருபவர்கள் கொண்டுவரும் கங்கை நீர். சிரியன் கிறிஸ்தவர்களுக்கு அன்டியோக்கிலிருந்து வருகிற ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெய் அல்லது லூர்திலிருந்து வருகிற “தீர்த்தம்”. இஸ்லாமியருக்கோ ஹஜ் யாத்ரீகர்கள் கொண்டுவருகிற, மெக்காவில் “புனித” காபா கல்லைத்தொட்டு மகிமைப்படுத்தப்பட்ட கலயத்தில் கொண்டுவரப்படும் தண்ணீர்.

1921 முதல் 1924 வரை, அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும், என் தம்பியுமான காலஞ்சென்ற டாக்டர் பேஹனன் கோவூரும் நானும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களாக இருந்தோம். என் சொந்த ஊரான திருவல்லாவிலிருந்து கல்கத்தா நகரம் 1500 மைல் தொலைவில் இருக்கிறது. இரயிலில் கல்கத்தா செல்ல சுமார் ஐந்து நாட்கள் பிடிக்கும்.

இரண்டு இளஞ்சிறுவர்கள் திருவல்லாவிலிருந்து தூர தேசமான கங்கைக் கரையில் அமைந்திட்ட கல்கத்தா சென்று படிப்பதென்பது அன்று எங்கள் சுற்றுவட்டாரத்தில் அபூர்வமான விஷயமாக இருந்தது. நீண்ட தொலைவு மற்றும் அதிகமான செலவு பிடிக்கும் காரணத்தால் நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறையே கோடை விடுமுறையில் வீட்டுக்கு வருவது வழக்கம்.

வழியனுப்பும் படலம்

நாங்கள் விடுமுறை முடிந்து கல்கத்தா செல்வது ஒரு விஷேசமான நிகழ்ச்சியாக இருக்கும். புறப்படுவதற்குப் பலநாட்கள் முன்பே எனக்கும் என் தம்பிக்கும் அண்டை அயலார் விருந்து வைப்பார்கள். விடுமுறையின் கடைசி சில தினங்களில் அனேகமாக மூன்றுவேளை சாப்பாடும் ஏதாவது பக்கத்து வீட்டில்தான் நடக்கும். இதில் சாதி, மத, வர்க்க வேறுபாடுகள் இருக்கவில்லை. எல்லா “நாயர்” குடும்பத்தவருமே நாங்கள் அடுத்தமுறை வரும்போது சில துளிகளாவது “தீர்த்தம்” (கங்கை நீர்) கொண்டுவர வேண்டுமென்று விரும்பினர். அவர்களைப் பொருத்தவரை நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்; அந்த இளம் வயதிலேயே “தெய்வீகமான” கங்கையில் “புனித” நீராடி, பெரும் பிரயத்தனமின்றியே சொர்க்கத்துக்குச் செல்லும் பாக்கியம் பெற்றிருந்தோமே.

புறப்படும் நாளில் எங்கள் வீட்டு முற்றம் அக்கம் பக்கத்து ஆண்கள், பெண்கள், குழந்தைகளால் நிறைந்துவிடும். ஆண்கள் பெரும்பாலும் குடியானவர்கள் அல்லது சிறு நிழக்கிழார்கள். அவர்கள் எங்களை வழியனுப்பும் பொருட்டு அன்றைய தினம் வேலைக்கே செல்ல மாட்டார்கள்.

என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் ரெவரண்ட் கே.பி.தாமஸ் பிரார்த்தனை நடத்தி எங்களை ஆசீர்வதிப்பார். பின்னர் எங்கள் தாயார் நாங்கள் ஊரிலுள்ள பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெறச் சொல்வார். அப்பெரியவர்களும், கண்ணீர் மாலையாகப் பெருக எங்கள் தலையில் கையைவைத்து ஆசீர்வதிப்பார்கள். பெண்கள் பலர் வீரிட்டு அழுதுவிடுவார்கள். எங்கள் பிஞ்சு மனதை அந்த அழுகைகள் பாதித்து எங்களையும் அழ வைத்துவிடும். அந்தப் பிரிவுத்துயர் எங்கள் பயணம் முழுவதிலும் மனதில் நிற்கும். நல்லகாலமாக, கல்கத்தா போனதும் அப் பெருநகரின் பலதரப்பட்ட கவர்ச்சிகளும், உற்சாகம் கரைபுரளும் விடுதி வாழ்க்கையும் எங்களை வீட்டையும், அண்டை அயலையும் மறக்கச் செய்துவிடும். அடுத்த கோடை காலம் நெருங்கும்பொழுதுதான் அவையெல்லாம் மீண்டும் நினைவுக்கு வரும்.

கங்கை

“புனிதமான” கைலாயத்தில் உற்பத்தியாகிற கங்கை 1500 மைல்கள் கங்கைச் சமவெளியில் ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கோடையில் இமயமலையின் பனி உருகுவதால் கங்கையில் வெள்ளம் பெருக்கெடுக்கும். வேகமாகப் பாய்ந்து செல்வதால் அதன் தண்ணீர் எப்போதும் கலங்கியே இருக்கும். கல்கத்தாவில் நான் வாழ்ந்த நீண்ட காலத்தில் ஒருமுறை மட்டுமே அதில் குளித்திருக்கிறேன். எனக்கு அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் அனுபவத்தால் அதுவே முதலும் கடைசியுமான முழுக்காடு ஆனது. நெடுநேரம் நீரில் மூழ்கிவிட்டு நான் தலையைத் தூக்கியபோது என் தலையில் வெள்ளைநிறம் கொண்ட ஏதோ ஒரு வஸ்து இடித்தது. அது வேறொன்றுமில்லை; மீன்களால் பாதி கடிக்கப்பட்ட, அழுகிப்போன மனிதக் கை. எனக்குக் குமட்டியது. இரண்டு நாட்கள் வரை சாப்பாடே இறங்கவில்லை.

அக்காலத்தில் இறந்தவர் உடல்களை கங்கையின் “புனித” நீரில் விட்டுவிடுவது வடநாட்டு இந்துக்களின் வழக்கம். இப்பொழுது தடை செய்யப்பட்டிருக்கும் இவ்வழக்கம், இறந்தவருக்கு மோட்சத்தைக் கொடுக்க வல்லது என நம்பப்பட்டது. கங்கையிலிருந்து நெடுந்தொலைவில் வசிப்பவர்கள், உடலை எரித்த சாம்பலைக் கரைப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். அரை நூற்றாண்டுக்கு முன்புவரை, எந்நேரமும் சில பிணங்கள் அழுகிய நிலையில் கங்கையில் மிதப்பதைக் காணலாம். அந்தப் பெரிய ஆற்றின் கரையேரமாக அமைந்திருந்த நூற்றுக்கணக்கான நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சடலங்கள் தினமும் அப் புனிதமென நம்பப்பட்ட ஆற்றுக்குள்ளே வீசப்பட்டன. ஆனாலும் தினசரி இந்தியா முழுவதிலிருந்தும் வருகிற இலட்சோபலட்சம் பேர் அதில் நீராடியதோடு, அந்த மாசு நிறைந்த தண்ணீரைக் குடிக்கவும் செய்து தங்களைத் “தூய்மை”ப்படுத்திக்கொண்டனர். அவர்கள் தங்களை நோக்கிவரும் சவங்களை ஒதுக்கிவிட்டுத் தொடர்ந்து நீராடுவதை நானே கண்டிருக்கிறேன். அழுகும் பிரேதங்கள் மிதந்து வந்தபோதிலும் கங்கை நீர் “தூய்மையும், தெய்வீகமும்” நிரம்பியது என நம்பும்படி அம்மக்கள் சிறுவயது முதல் மூளைச்சலவை செய்யப்யப்பட்டிருந்தார்கள்.

அந்தப் “புனித” நதியில் எனக்கேற்பட்ட அருவருப்பான அனுபவத்தால் நல்லவர்களான எங்கள் அண்டை அயலாருக்கு அதிலிருந்து சொட்டுத் தண்ணீர் கூடக் கொண்டு செல்லக்கூடாதென்று முடிவு செய்தேன். பேஹனனும் நானும் அவர்களை ஏமாற்ற விரும்பாததால் கங்கை நீருக்குப்பதில் ஏதேனும் நல்ல கிணற்று நீரைக் கொடுத்துவிடுவதென முடிவு செய்தோம்.

அந்நாளில் திருவல்லாவுக்கு அருகிலிருந்த இரயில் நிலையம் கோட்டக்கரா ஆகும். கோட்டக்கராவில் இரயிலை விட்டு இறங்கியதும் நிலைய காத்திருப்பறை ஃபில்டரில் இரண்டு புட்டிகள் நிறைய நீரை நிரப்பிக்கொள்வோம். அவற்றைக் கவனமாகக் கார்க் வைத்து அடைத்து எங்கள் மூட்டை முடிச்சுகளோடு வைத்துக்கொள்வோம். அப்பொழுதிருந்து அந்த இரு புட்டிகளில் இருந்த தண்ணீர் “தீர்த்தம்” என அழைக்கப்படும்.

திருவல்லாவை அடைய நாங்கள் 36 மைல்கள் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். பல நிறுவனங்களால் இயக்கப்பட்ட நிறையப் பேருந்துகள் அத்தடத்தில் ஓடின. அவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இது பயணிகளுக்குப் பெரிய நண்மையாக இருந்தது; அவர்கள் மிகுந்த மரியாதையும் கவனிப்பும் பெற்றார்கள். அக்காலத்தில் பேருந்துப் போக்குவரத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு எதுவுமில்லை. அவை நினைத்த நேரங்களுக்கு வரும், போகும்; எந்த வழியில் வேண்டுமானாலும் ஓடும்; யார் எங்கு இறங்க வேண்டுமென்றாலும் நிற்கும்; நடத்துபவர்கள் நினைத்தால் போக்குவரத்து ரத்து செய்யவும் படும்.

கோட்டக்கரா இரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் மூட்டை முடிச்சுகளை வாங்கித் தத்தமது பேருந்துகளின் மேற்கூரையில் போட்டுக்கொள்வதற்கு, நடத்துனர்களும், க்ளீனர்களும் போட்டாபோட்டி போடுவார்கள். மூட்டை முடிச்சுகளைப் பிடுங்கிப் பேருந்தின் மேலே போட்டுவிட்டால் அவற்றின் உரிமையாளர் வேறு வழியில்லாமல் அதே பேருந்தில் வர வேண்டியிருக்கும்.

நடத்துனர்களும் க்ளீனர்களும் எங்கள் மூட்டை முடிச்சுகளை முரட்டுத்தனமாக இழுக்கும்பொழுது “தீர்த்த” சீசாக்களை கவனமாகக் கையாளும்படி அவர்களை நாங்கள் வேண்டுவோம். அவ்வளவுதான். “தீர்த்தம்” என்கிற வார்த்தை மந்திரச்சொல் போலச் செயல்படும். அந்த இரண்டு சீசாக்களையும் பயபக்தியோடு வாங்கிக்கொண்டு, எங்களையும் ஓட்டுனர் அருகில் சிறப்பான இடத்தில் அமர வைப்பார்கள். கடைசியில் திருவல்லாவை அடைந்ததும், பேருந்து வழக்கமான பாதையிலிருந்து விலகி, புளி மூட்டையாக அடைந்திருக்கும் பயணிகள் சகிதமாகச் சுமார் இரண்டு மைல் தூரம் அதிகப்படியாகப் பயணித்து எங்களைக் கோவூர் இல்லத்தில் இறக்கிவிடும். எங்களையும் எங்கள் சாமான்களையும் வீட்டில் விட்டபின்னர், நடத்துனர் ஒரு சிறு குப்பியை வெளியில் எடுத்துக்கொண்டு, ஓட்டுனரும், க்ளீனரும், தானும் பகிர்ந்துகொள்வதற்காக சிறிது “தீர்த்தம்” தருமாறு வேண்டிக் கேட்டுக்கொள்வார்.

நோய்தீர்த்த அற்புதங்கள்

தொடரும்...

Copyright © 1976 by Dr Abraham. T.Kovoor
from " BEGONE GODMEN " published by Shri Aswin J.Shah
JAICO PUBLISHING HOUSE - Bombay - India

1 comment:

சரவணன் said...

தமிலிஷில் ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் கருத்துகளையும் பின்னூட்டத்தில் சொல்லலாமே.