Tuesday, 25 June 2013

மதிப்புரை: தேக்கடி ராஜா--எம்.பி.சுப்பிரமணியன்


           முதலில் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்— நள்ளிரவு; தலைக்கு மேலே பௌர்ணமி நிலவு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது; அப்பொழுது—


    ...அந்தக் குன்றில் இருந்த சிறிய வீட்டுக்குள் போய்ச் சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு விளக்குடன், பாழடைந்த வீட்டின் பக்கமுள்ள மேட்டினருகில் சென்றது அவ்வுருவம்.

      இதற்குள் பெரிய கறுத்த உருவங்கள் அந்த மனிதனைச் சுற்றிவர ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் அந்தக் குன்றின் உச்சியிலும், சுற்றிலும் சிறியதும் பெரியதுமான கணக்கற்ற யானைகள் தோன்றின. ஆமாம் யானைகள்தான்! நான் எண்ணியதுபோல பேயோ பிசாசோ அல்ல. மனித உருவத்தை நாங்கள் இப்பொழுது பார்க்க முடியவில்லை. சுற்றியிருந்த யானைகள் அவனை மறைத்துவிட்டன. அந்தக்கூட்டத்திலிருந்த ஆண் யானைகளின் தந்தங்கள் சந்திர ஒளியில் மூன்றாம் பிறை மதியைப் போல பிரகாசித்தன. கூட்டத்தின் நடுவே ஒரு புதிய ஒளி தோன்றியது. அந்த ஒளி வருவதைக் கண்டதும் அந்த அதிசய மனிதன் எதற்கோ தீபாராதனை காட்டுகிறான் என்று ஊகித்தேன்.
     அதே சமயம் சுற்றியுள்ள யானைகள் தங்கள் துதிக்கைகளைத் தூக்கி வீறிட்டன. காடே அதிர்ந்தது. என் உடல் நடுங்கியது. பயத்தால் அல்ல, அந்த யானைகள் பிளிறுவதில் இருந்த வீரத்தையும் கம்பீரத்தையும் கண்டுதான். பல வீரர்கள் சேர்ந்து வீர கர்ஜனை செய்யும் காட்சிதான் என் மனத்தில் தோன்றியது. இம்மாதிரி ஓர் அபூர்வமான காட்சியை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. செயலற்று நின்றுகொண்டிருந்தேன். குன்றிலிருந்த யானைகள் எல்லாம் மறைந்துவிட்டன. அந்த மனிதனையும் காணவில்லை.
     
            என்ன ஒரு சிலிர்ப்பூட்டும் காட்சி! இப்போது இதைக் கேளுங்கள்; இது ஒரு உண்மைச் சம்பவம்! நடந்த இடம்: தேக்கடி; ஆண்டு: 1950-களில்; பார்த்தவர்- எம்.பி.சுப்பிரமணியன். பார்த்ததோடு நில்லாமல் இந்த அதிசய சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்து ஒரு அருமையான சிறுவர் நாவலாக எழுதிவிட்டார். அதுவே ‘தேக்கடி ராஜா’. என்னிடமிருக்கும் பதிப்பு வெளியான ஆண்டு 1996. முதல் பதிப்பு வெளியான ஆண்டு தெரியவில்லை. என் அம்மா இக்கதையைத் தான் சிறுமியாக இருந்தபொழுது ’50 களின் இறுதியில் ஏதோ பத்திரிகையில் தொடராகப் படித்திருப்பதாகக் கூறுகிறார். பத்திரிகை கண்ணன் அல்லது  ஒருவேளை விகடனாக இருக்கலாம். 

       கதைக்கு வருவோம். தங்கசாமி, நளினி என்ற இரு சிறுவர்களைப் பற்றியதே இக்கதை. தங்கசாமி தேக்கடிக் காட்டில் ரேஞ்சர் மகன்; நளினி அங்கிருக்கும் அணைக்கட்டு ஆபீசரின் (அன்று அணை, காடு இரண்டும் ஒரே அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கலாம்) பெண். நளினிக்கு வயது 12; தங்கசாமிக்கு ஒரிரு வயது அதிகமிருக்கலாம். அவன் கூறுவதாகவே கதை சொல்லப்படுகிறது. 

     அது ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். தேக்கடி திருவனந்தபுரம் மகாராஜா ஆட்சிக்குட்பட்ட பகுதி. காட்டுக்கு அருகே அன்று பள்ளிகள்  இல்லாததால் ஆபீசரே குழந்தைகள் இருவருக்கும் வீட்டிலேயே (அணைக்கட்டு பங்களா) பாடம் சொல்லித் தருகிறார். மற்ற நேரங்களில் நளினி, தங்கு (அப்படித்தான் நளினி அழைக்கிறாள்) இருவரும் காட்டில் மனம்போனபடி சுற்றித் திரிகிறார்கள். அல்லது ஆற்றில் படகில் பயணிக்கிறார்கள். திகட்டத் திகட்ட இயற்கை அழகில் திளைக்கிறார்கள்—
     'காலை வேளையில் காடே வெகு அழகாக இருந்தது. ஆங்காங்கு மான்கள் துள்ளி ஓடிக்கொண்டிருந்தன. கருப்பும் மண் நிறமுள்ளவையுமான குரங்குகள் தாவிக்கொண்டு இருந்தன. கரை ஓரத்தில் எத்தனை விதமான பறவைகள், நீர்க்கோழிகள், மீனுக்காகக் காத்திருந்தன! அவைகளுக்குத்தான் என்ன பொறுமை! மணிக் கணக்கில் மீனுக்காகக் காத்திருந்தன. தூரத்தில் பால்க்காய்ச்சி மலை தெரிந்தது.'
   தங்கசாமிக்குக் காடு அத்துபடியாக இருக்கிறது. அத்துடன் மிகுந்த துணிச்சலும், சமயோசிதமும் கொண்டிருக்கிறான். ஒருமுறை காட்டுக்குள் நடந்த போரில் தோற்றுப்போன யானை ஒன்றை நேருக்குநேர் பார்த்துவிடுகிறார்கள். இத்தகைய யானைகள் ‘பயங்கரமானவை; ஒரு காரணமுமில்லாமல் ஆட்களைத் தாக்கிக் கிழித்தெறியத் தயங்கா. எப்பொழுதும் கோபம் நிறைந்த மனத்துடன் இருக்கும்’. தங்கசாமி சட்டென சமயோசிதமாக செயல்பட்டதாலேயே இருவரும் தப்பிக்கிறார்கள்.


    ஒரு சமயம் காட்டிலிருந்து ஒரு யானைக்குட்டியைப் பிடித்துவந்து விடுகிறான் தங்கு! அதற்கு ராஜா என்று பெயரிட்டுக் குழந்தைகள் இருவரும் வளர்க்கிறார்கள். அதேபோல ஒரு மான்குட்டியைச் செந்நாய்க் கூட்டத்திடமிருந்து காப்பாற்றி, அதற்கு மின்னி என்று பெயரிட்டு அதையும் வளர்க்கிறார்கள். இந்த யானைக்குட்டியைத் தங்கு பிடிக்கும் கட்டமும், மான் குட்டியைக் காப்பாற்றும் கட்டமும் சாகசமும், சஸ்பென்ஸும் கொண்டவை.

    கதைப்போக்கில் காட்டையும் விலங்குகளையும் பற்றிப் பல தகவல்கள் சொல்லப்படுகின்றன. ஒருமுறை ஒரு யானை தண்ணீருக்குள்ளேயே பல நாட்கள் நிற்கிறது. மற்ற யானைகள் அதற்கு மரக்கிளைகளை ஒடித்து வந்து உணவாகக் கொடுக்கின்றன. இது ஏன் என்று தங்கசாமிக்கும், ஆபீசருக்கும் தெரியவில்லை. பிறகு மதுரைக்குச் சென்றிருந்த தங்கசாமியின் அப்பா திரும்பி வந்ததும் அதை விளக்குகிறார். காயம் ஏதாவது ஏற்பட்ட யானை, பூச்சிகள் புண்ணில் அமர்ந்து தொந்தரவு செய்யாமல் தடுக்கவும், புண் ஆறவும் இப்படி அந்த உடல்பகுதி தண்ணீருக்குள் இருக்குமாறு நின்றுகொள்ளுமாம். அந்தச் சமயத்தில் மற்ற யானைகள்தான் அதற்கு உணவு கொடுக்குமாம்.

    இப்படியாக நாட்கள் சென்று கொண்டிருக்கின்றன. இடையில் மின்னி தன் கூட்டத்தினருடன் போய்ச் சேர்ந்து கொள்கிறது. காட்டுக்குள்ளேயே இருந்தால் நளினிக்கு மாப்பிள்ளை பார்ப்பது எப்படி என்று அவளது தாய் கவலைப்பட ஆரம்பிக்கிறாள். ஆபீசர் இடமாற்றலுக்கு முயற்சி செய்கிறார். ராஜாவும் சற்று வளர்ந்துவிட்டதால், இனி அதுவும் தன் கூட்டத்துடன் சென்று வாழ்வதே நல்லது என்று அனைவரும் முடிவெடுக்கிறார்கள். மேலும் உடுப்பியிலிருந்து ‘சிவப்பழமாக’ வரும் சோதிடர் ஒருவர், ராஜாவை இப்படியும் அப்படியுமாக நடக்கச்செய்து பார்த்துவிட்டு, ‘இந்த யானை சகல நற்குணங்களையும் கொண்டுள்ளது. காட்டிலுள்ள யானைகளுக்கெல்லாம் ராஜாவாக விளங்கும். ஆனால் அகால மரணமடையும். அதை நேசித்தவர் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இதை வீட்டில் வைத்துக் கொள்வது நல்லதல்ல. காட்டிலே திரியவேண்டிய ராஜா இது. இங்கிருந்தால் உங்கள் குடும்பத்திற்குக்கே கேடு, இதைக் காட்டில் அதன் கூட்டத்தினருடன் வாழவிட்டுவிடு’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்! 

    ஆபீசர் ஊரைவிட்டுப் போக இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. ‘நாம் ஊரைவிட்டுப் போகும் வரையிலாவது நம்முடன் ராஜா இருக்கட்டுமே’ என்கிறாள் நளினி. ஆபீசரோ, அப்படிச் செய்தால் அடுத்துவரும் ஆபீசர் அதை வாங்கிக் கொள்வார். அது பிறகு காட்டு இலாகா யானையாகி, மரம் இழுத்துக் கஷ்டப்பட வேண்டும்; ‘உன் ராஜா தனிக்காட்டு ராஜாவாகக் காட்டிலேயே வாழட்டும்’ என்று சொல்லிவிடுகிறார். இதன்படியே ராஜா  திரும்பவும் காட்டில் விடப்படுகிறது. இதற்கிடையில் மின்னி ஒருமுறை தன் குட்டிகளுடன் வந்து நளினியையும், தங்குவையும் பார்த்துச் செல்கிறது. சில நாட்களில் ஆபீசர் குடும்பமும் மாற்றலாகிப் போக, தங்கசாமிக்கு ‘வாழ்க்கையே சூனியம் பிடித்தமாதிரி ஆகிவிடுகிறது’ பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனதைத் தேற்றிக் கொள்கிறான். இன்னொரு ஆபீசர் குடும்பம் வந்து போகிறது. ராஜா அவ்வப்போது— பெரும்பாலும் பௌர்ணமி தினங்களில்— அணைக்கட்டு பங்களா அருகில் வந்து தங்குவைப் பார்த்துச் செல்கிறது..

    கதையில் இதன்பிறகு பல எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒருநாள் ஒரு மான் கூட்டத்தில் மின்னி தென்படுகிறதா என்று தங்கு பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்போது ஒரு தாய்மானையும் அதன் குட்டியையும் யாரோ துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார்கள். துடித்துப்போகும் தங்கு யார் இந்த அநியாயம் செய்தது என்று ரேஞ்சர் என்ற முறையில் தேடிச் செல்ல, சுட்ட ஆள்தான் புதிதாக வந்திருக்கும் ஆபீசர் என்று தெரியவருகிறது. இதற்கெல்லாம் மேல், அவனுடைய மனைவியாக வந்திருப்பவள் நளினி! அவள் வெளிறிப்போய், கண்களில் உயிரற்ற பார்வையுடன் இருக்கிறாள். தங்கசாமிக்குக் காரணம் புரியவில்லை.

 பங்களாவுக்குப் பெட்டி பெட்டியாகப் பல்வேறு விலங்குகளின் தலைகளும், யானைத் தந்தங்களும் வந்து இறங்குகின்றன. எல்லாம் அந்த ஆள் சுட்டவைதான். தேக்கடிக் காட்டிலும் தன் கொலைபாதக வேட்டைகளைத் தொடர்கிறான் புதிய ஆபீசர். நாள்பூராவும் துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டபடி இருக்கிறது (பின்னாட்களில்தான் மகாராஜா அந்தக் காட்டில் எந்த விலங்கையும் வேட்டையாடக் கூடாது என்று சட்டமியற்றுகிறார்).    ராஜா ஒரு பௌர்ணமியன்று அணைக்கட்டு பங்களாவிற்கு நளினியையும், தங்குவையும் பார்க்க வருகிறது. ராஜாவை ஆபீசர் சுட்டு விடுவாரோ என்று தங்கு பயப்படுகிறான். ராஜாவைச் சுடமாட்டேன் என்று தன் கணவன் உறுதி தந்திருப்பதாகச் சொல்கிறாள் நளினி. ஆனாலும் இன்னொரு நாள் ராஜா பங்களாவுக்கு அருகில் வரும்போது சுட முயற்சி செய்கிறார். அப்போது ராஜா அவரைத் தூக்கி எறிகிறது. பிறகு ராஜாவைக் காட்டுக்குள் அனுப்பிவைக்கிறான் தங்கு. எப்படியாவது ராஜாவைக் காப்பாற்றவேண்டுமே என்று யானைக் கூட்டங்களை வானத்தில் சுட்டு வெகுதூரம் விரட்டி விடுகிறான்.. இதில் ஆபீசருக்கு அவன்மேல் கடும் கோபம்.

    ஒருநாள் பௌர்ணமியன்று திட்டமிட்டுத் தங்கசாமியை வெளியூருக்கு அனுப்புகிறார் ஆபீசர். சாதாரணமாக நினைத்துப் புறப்படும் தங்கு, அன்று பௌர்ணமி என்று தெரிந்ததும், ஆபீசர் ராஜாவைக் கொல்லத்தான் தன்னை அனுப்பியிருக்கிறான் என்று புரிந்துகொண்டு வேகமாகத் திரும்பிவருகிறான். அவன் வந்து சேரவும் ராஜா அணைக்கட்டு பங்களாவிற்கு வரவும் சரியாக இருக்கிறது. அடுத்து வருவது விறுவிறுப்பும், அச்சமும், உருக்கமும் நிறைந்த உச்சகட்டம். 

     ராஜாவைத் தங்கசாமி காப்பாற்றினானா? ஆபீசர் என்ன ஆனார்? நளினிக்கு என்ன ஆனது என்பதையெல்லாம் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

    சில மணிநேரங்களில் படித்து முடித்துவிடக்கூடிய இந்த 123 பக்கப் புத்தகத்தில் சாகசம், துணிச்சல், சஸ்பென்ஸ், டிராமா என அத்தனை அம்சங்களும் நிறைந்திருப்பது சிறப்பு. காடும், விலங்குகளும் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் ஆர்வமூட்டக்கூடியவை. நளினி குடும்பம் சென்ற பிறகு ஒரு கடும் வறட்சி ஏற்பட்டு விலங்குகள் தண்ணீருக்குத் தவிப்பதும், பிறகு ஒருவழியாக மழைவந்து மீண்டும் பசுமை நிறைவதும் ஒரு சிறுகதை போலச் சொல்லப்பட்டுள்ளன. யானைகள் வற்றிய நதிப் படுகையில் பள்ளம்தோண்டி நீர் பருகுவதும், அதற்காக மற்ற விலங்குகள் காத்திருந்து அவை போன பின்பு தண்ணீர் குடிப்பதும் வியப்புக்குரிய ஒழுங்கோடு நடப்பதைப் பார்க்கிறோம். 

    இப்புத்தகத்துக்கு சி.யோகேஸ்வர மூர்த்தி, எம்.எஸ்.அப்பாராவ் ஆகிய புகைப்படக் கலைஞர்கள் எடுத்த காட்டு யானைகளின் சில நல்ல கறுப்புவெள்ளைப் புகைப்படங்களும், கோபுலு வரைந்த அழகிய கோட்டுச் சித்திரங்களும் அழகு சேர்க்கின்றன. புகைப்படங்களை அடுத்த பதிப்பில் இன்றைய கணினி வசதிகளால் இன்னும் அழுத்தமாக அச்சிட முடியும். 

    எழுதப்பட்டு சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டதால் நடை மட்டும் சில இடங்களில் சற்றுப் பழையதாகத் தோன்றக்கூடும்; ஆனாலும் அது கதையோட்டத்தின் சுவாரசியத்தைத் தடுப்பதாக இல்லை. புத்தகம் இப்போது அச்சில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அரசு நூலகங்களுக்கு வாங்கப்பட்ட புத்தகம் என்பதால் ஏதாவது நூலகத்தில் கிடைக்கக்கூடும் (இத்தனை காலத்தில் கழித்துக் கட்டப்படாத பிரதிகள் இருந்தால்).

    பிற உயிரினங்களை வாழ வைப்பது தன் கடமை, தன் நல்வாழ்விற்கே இன்றியமையாதது என்று மனிதகுலம் உணரவேண்டும் என்ற கருத்தை இளம் உள்ளங்களில் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் இப்புத்தகத்தைப் பிரசுரிப்பதாகப் பதிப்பாளர் கா.பனையப்பன் கூறியிருக்கிறார். அவர் நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லலாம் இந்தப் புத்தகம் சிறுவர்களைச் சென்றடைந்தால். நல்ல சிறுவர் இலக்கியம் பெரியவர்களும் படித்து ரசிக்கும்படியாக இருக்கும் என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு உதாரணம்.

தேக்கடி ராஜா
எம்.பி.சுப்பிரமணியன்
அபிராமி பப்ளிகேஷன்ஸ்
306, லிங்கி செட்டி தெரு,
சென்னை-600 001.
1996

(ஆம்னிபஸ் தளத்தில் 16 ஜூன் 2013 அன்று வெளியானது.)

No comments: