Sunday, 23 June 2013

மதிப்புரை--ஸ்ட்ரீட் லாயர் – ஜான் கிரஷாம்

           ஜான் கிரஷாம் வழக்கறிஞர்களையும் வழக்குகளையும் மையமாக வைத்து லீகல் திரில்லர் எழுதுபவர். இவருடைய புத்தகங்களில் சற்றே வித்தியாசமானது ‘ஸ்ட்ரீட் லாயர்’. (மேலும் வித்தியாசமான- காமெடி- புத்தகமான ‘ஸ்கிப்பிங் கிருஸ்மஸ்’ தவிர).           இப்புத்தகத்தின் கதாநாயகன் மைக்கேல் ப்ரோக், வாஷிங்டன் நகரில் அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய சட்டக் குழுமமான டிரேக் அன் சானி-யில் பணியாற்றுகிற அதிபுத்திசாலியான, பெரும் வணிக நிறுவனங்களுக்காக ஆஜராகிற (ஆன்ட்டி-ட்ரஸ்ட்) லாயர். இன்னும் மூன்றே ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஆகிவிடும் நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பவன். என்ன, அவனது மணவாழ்வுதான் ஊசலாட்டத்தில் இருக்கிறது.

          இந்த நிலையில் ஒருநாள் வீடற்றவன் ஒருவன், கையில் துப்பாக்கியோடு அலுவலகத்துக்குள் நுழைந்து மைக்கேல் உட்பட ஆறு பேரைப் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துக் கொள்கிறான். தன்னை வெறுமனே ‘மிஸ்டர்’ என்று அழைக்கச் சொல்லும் அவனுக்குக் கோரிக்கைகள் எதுவும் இல்லை. மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் வழக்கறிஞர்களுக்கு ஏழைகள், வீடற்றவர்கள் மீது ஏதாவது அக்கறை இருக்கிறதா?, என்று கேள்விகளால் துளைக்கிறான். பிறகு போலீசாரால் அனைவரும் மீட்கப்படுகிறார்கள்— ஒரு அதிரடி நடவடிக்கை மூலமாக.

          இந்தச் சம்பவம் மைக்கேலின் வாழ்க்கையைப் ‘புரட்டிப் போட்டுவிடுகிறது’. யார் இந்த ‘மிஸ்டர்’ என்று ஆராயப்புகும்போது அவனுக்குக் கிடைப்பது சில அதிர்ச்சித் தகவல்கள். ‘மிஸ்டரின்’ நிஜப்பெயர் டி வான் ஹார்டி என்றும், அவன் குடியிருந்த ஒரு மலிவான இடத்திலிருந்து அவனையும், இன்னும் பலரையும் காலி செய்ததில் தனது நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் தெரிய வருகிறது. அதுவும் அப்படிக் காலி செய்யப்பட்டவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, டில்மான் கான்ட்ரி என்ற முன்னாள் பெண்-தரகன் ஒருவனுக்கு வாடகை கொடுத்துவந்தவர்கள் என்று தெரியும்போது கொந்தளிப்பாக உணர்கிறான். இதுவரை அவன் சிறிதும் அக்கறை செலுத்திக் கவனித்திராத சாலையோர மக்களின் உலகம் அவனுக்கு அறிமுகம் ஆகிறது. காலி செய்யப்பட்ட லோன்டே பர்டன் என்ற பெண்ணும் அவளது நான்கு குழந்தைகளும் வீடில்லாமல் ஒரு பழைய காருக்குள் இரவைக் கழித்து, மூச்சுத் திணறி இறந்துவிடுகிறார்கள். முந்தைய நாள்தான் மைக்கேலின் கையில் உயிர்ப்புடன் இருந்த குழந்தை ஒண்டாரியோ மரணித்து விறைத்துக் கிடப்பது நம்மையே உலுக்குகிறது. அதை மைக்கேலால் ஜீரணிக்கவே முடிவதில்லை. தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எவ்விதத்திலும் நியாயமானதே அல்ல என்று உணர்கிறான்.

         இதன்பின் கிரஷாம், மைக்கேல் நடத்தும் மூன்று விதமான போராட்டங்களை மிகவும் நம்பகத்தன்மையுடன் சொல்லிச் செல்கிறார்—மனைவி க்ளேருடன் அவனது முறிந்துவரும் உறவு; டி அன் எஸ் (வேலையை விட்டாச்சு) நிறுவனத்துடன் ஜனங்கள் காலி செய்யப்பட்டது தொடர்பான ஒரு கோப்பு பற்றிய போராட்டம் (இதை மைக்கேல் முட்டாள்தனமான ஒரு தருணத்தில் திருடிவிடுகிறான்); நடைபாதைவாசிகளுக்காக அவன் நடத்தும் யுத்தங்கள் என்ற மூன்று இழைகளாகக் கதை போகிறது.

          நாவலில் கதாபாத்திரங்கள் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மைக்கேலின் நண்பர்- தத்துவாசிரியராக உருப்பெறும் மார்டெக்கை கிரீன். வாசகர்கள் கிரீனை நிச்சயம் மறக்க மாட்டார்கள் (நான் மறக்கவில்லை). கிரீனுடன் வரும் துணைக் கதாபாத்திரங்களான வழக்கறிஞர்கள் சோபியா, ஆப்ரஹாம், மைக்கேல், ஃபைலைத் திருட உதவும் அலுவலக உதவியாளனான சராசரி மத்தியவர்க்கப் பிரதிநிதி ஹெக்டர் பால்மா ஆகியோர்கூட நிஜம்போல நம் கண் முன் உலவுகிறார்கள். ஒரே விதிவிலக்கு மைக்கேலின் மனைவி க்ளேர்தான். அவளைப் பற்றி நாம் சரியாக அறிந்து கொள்ள முடியாத உணர்வுதான் மிஞ்சுகிறது.

           சஸ்பென்ஸ், விறுவிறுப்பு போன்றவற்றில் மற்ற க்ரிஷாம் நாவல்களுக்கு ஸ்ட்ரீட் லாயர் சம ஈடாகாதுதான். ஆனாலும் கடைசிவரை விடாமல் படிக்க வைக்கிறது. நகர்ப்புற அமெரிக்காவின் சேரி வாழ்க்கையை உணர்வுபூர்வமாக ஒரு த்ரில்லர் கதைக்குள்ளாகச் சொல்வதே இதன் சிறப்பு. இருட்டுக்கு நடுவிலும் கிரஷாம் நல்ல விஷயங்களின் ஒளிக்கீற்றுகளைச் சொல்லத் தவறுவதில்லை. வீடற்றவர்களுக்காக எத்தனையோ பேர் தன்னலமின்றிப் பணியாற்றுகிறார்கள். அம்மக்களுக்காகத் தங்குமிடங்கள், சூப் கிச்சன்கள், மருந்தகங்கள், சட்ட உதவி மையங்கள், போதை மாற்றுச் சிகிச்சை மையங்கள் என எத்தனையோ அவர்களால் நடத்தப்படுகின்றன. ஒரு சராசரி நடைபாதைவாசி, இந்தியாவைவிட அமெரிக்காவில் சற்று அதிக அக்கறையுடன் கவனிக்கப்படுவதாகவே தோன்றுகிறது.

           ஒரு நகரம் எப்படி வீடற்றவர்கள் எது செய்தாலும் அதைக் குற்றமாக்கி (க்ரைம்) வைத்திருக்கிறது என்று கிரஷாம் காட்டுகிறார்— இங்கே உட்கார்ந்தால் குற்றம், அங்கே சாப்பிட்டால் தப்பு, இன்னோரிடத்தில் படுத்தால் குற்றம் என்பதாக. இவ்வளவுக்கிடையிலும் வீடற்றவர்கள் வாழ்வை கிரஷாம் ‘ரொமாண்டிசைஸ்’ செய்வதில்லை. போதையும், குடியும் குற்றமும் நிரம்பிய அந்த வாழ்வை அப்படியே சித்தரிக்கிறார். மைக்கேல் ‘நடைபாதை வழக்கறிஞன்’ ஆன பின்பும், ஒவ்வொரு முறையும் கருப்பு அமெரிக்கர்கள் வாழும் பகுதியில் அமைந்த அந்தச் சிறிய அலுவலக அறைக்கு வரும்போது யாராவது (நாளை அவனுடைய கட்சிக்காரர்கள் ஆகக் கூடிய அதே ஆசாமிகள்தான்)  தன்னைத் தாக்கி வழிப்பறி செய்துவிடுவார்களோ, சுட்டுவிடுவார்களோ என்று பயந்தபடிக் காரிலிருந்து அவசரமாக இறங்கி உள்ளே புகுந்து கொள்ளவே வேண்டியுள்ளது.

             பகாசுர வணிக நிறுவனங்களின் மெகா இலாபங்களை இன்னும் அதிகரிப்பது தொடர்பான சிந்தனைகள் அன்றி வேறு எதையும் சிந்தித்திராத கார்பரேட் லாயரான மைக்கேல் ஒரு சில மாதங்களில் மும்முரமாக சூப் கிச்சனில் காய்கறி வெட்டிக் கொண்டிருப்பது அவன் கனவிலும் நினைத்திராத மாற்றம். இம்மாதிரியான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கலாம், அல்லது நாளை மறுநாளே ஏற்படலாம்! ஏன், நாம் அன்றாடம் அலுவலகம் போகும் வழியில் சாலை ஒரத்திலும், பாலத்துக்கு அடியிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்... நம் குழந்தை ப்ளே ஸ்கூலில் இருக்க, சரியான உடையின்றி, நோஞ்சானாக இங்கே குப்பையில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் என்ன தப்பு செய்தார்கள் என்று நம்மில் பலரும் யோசிக்க ஆரம்பித்தால், உலகமே கொஞ்சம் நல்லவிதத்தில் மாறலாம்! இதுவே இந்த நாவலின் ஆதார செய்தி.

            ஒரு வீடற்ற வெள்ளையன் தன் கதையை மைக்கேலிடம் சொல்லுமிடம் ஒரு அழகான சிறுகதை. நன்நம்பிக்கைத் தொனியுடன் முடிவடையும் ஒரு நல்ல நாவல் ஸ்ட்ரீட் லாயர். இந்த நாவலில் நாம் காணும் ஒரு அதிர்ச்சியூட்டும் சித்திரம், வீடற்றவர்களில் சில முன்னாள் இராணுவத்தினர், இராணுவத்தினரின் மனைவிகளும் உண்டு என்பதுதான் (மைக்கேல் உள்ளிட்ட ஆறுபேரைப் பிடித்து வைத்திருந்த ஹார்டி உட்பட).

            இதுதான் உண்மை நிலை என்றால் (ஜான் கிரஷாம் எதையும் ஆராயாமல் எழுதுபவர் அல்ல), அடுத்த முறை ஏதேனும் ஒரு நாடு மீது குண்டு போடப் படைகளை அனுப்பும் முன்பு அமெரிக்க அதிபர் இவர்களைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கலாம். ஒரு போர் விமானம் வாங்கும் காசில் எத்தனை ஏழைகளுக்கு (தன் நாட்டு ஏழைகளுக்குத்தான்!) வீடு கட்டித் தர முடியும் என்றும்கூட.

(ஆம்னிபஸ் தளத்தில் 10 ஜூன் 2013 அன்று வெளியானது.)

No comments: