தமிழில் பயண இலக்கிய முன்னோடி ஏ.கே.செட்டியார். அவருடைய நூல்கள் உலகத்தரம் என்றால், வார இதழ் தரத்தில் எழுதியவர்கள் கல்கி தொடங்கி, சாவி, லேனா தமிழ்வாணன் வரைப் பலர். என்றாலும் தமிழ் எழுத்துலகில் இது ஒரு நலிந்த பிரிவுதான்.
மணியன் அறுபதுகளில் ஆனந்த விகடனில் தனது இதயம் பேசுகிறது பயண இலக்கியத் தொடர் மூலம் கணிசமான வாசகர்களைப் பெற்றவர். விகடனால் புத்தகமாகவும் வெளியிடப்பட்ட இந்தத் தொடருக்கு, எழுதப்பட்டு ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டதாலேயே, ஒரு 'காலப்பெட்டகம்' மாதிரியான மதிப்பு இன்றைக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லலாம். பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்துக்கும் 1966 இறுதி வாக்கில் சென்று வந்திருக்கும் மணியன், தான் சென்ற இடங்களில் எளிய மக்களின் இதயங்கள் பேசுவதைக் கேட்டு அதையே தான் இந்தப் புத்தகமாக எழுதியிருப்பதாக 'என்னுரை'யில் சொல்கிறார். எஸ்.எஸ்.வாசனின் முன்னுரையும் இருக்கிறது.
புத்தகத்தில் சரியான பயணத்தேதிகளை மணியன் குறிப்பிடவே இல்லை. இது முக்கியமான குறையே. இப்பொழுது மீண்டும் புத்தகத்தைப் புரட்டியதில், அமெரிக்க எம்பஸி அவருக்கு அமெரிக்கா வருமாறு அழைத்த கடிதம் இருப்பதைக் கவனித்தேன் (முதலில் அது ஏதோ ஜனாதிபதி சம்பிரதாய வாழ்த்துரை என்று எண்ணி ஸ்கிப் செய்திருந்தேன் :). கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி செப் 13, 1966.
மணியனை அழைத்த நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான். வழியில் ஒரு சில நாடுகளைச் சேர்த்து ஒரே பயணமாகச் சென்றுவந்துள்ளார். அவருக்கு அதுவே முதல் வெளிநாட்டுப் பயணம். முதல் விமானப் பயணம் என்றும் நினைக்கிறேன்.
மணியன் முதலாவதாகச் சென்ற நாடு எகிப்து. அங்கே கெய்ரோ மியூசியத்தில் மம்மிகளைப் பார்த்துவிட்டு வந்தபோது ஏதோ ஆஸ்பத்திரி சவக்கிடங்கிலிருந்து வெளியே வருகிற உணர்வுதான் ஏற்பட்டது என்கிறார். அதன்பிறகு அன்று சாப்பிடக்கூடப் பிடிக்கவில்லையாம்! நான் இதை எதிர்பார்க்கவில்லை. பிரான்ஸ், இங்கிலாந்து பயணங்களில் விசேஷமாகக் குறிப்பிடும்படி ஒன்றுமில்லை.
வாஷிங்டனில் சாப்பிடப்போன மணியன் அதற்கு இரண்டு டாலர் செலவானதும், 'ஐயோ, சாப்பாடு பதினைந்து ரூபாயா' என்று பயப்படுகிறார்! 'ஒரு பத்திரிகை மூனே முக்கால் ரூபாயா! ஒரு காப்பி ஒன்றரை ரூபாயா!' என்று மேலும் திகைக்கிறார் (காலப்பெட்டகம்!).
சராசரி அமெரிக்கர்கள், இந்தியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது, ஆயிரக்கணக்கில் மக்கள் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பதாக வருந்துகிறார். நடு ரோட்டில் ஒரு ஆள் மணியனிடம், 'பஞ்ச நிவாரண நிதிக்கு வைத்துக் கொள்ளுங்கள்' என்று ஐந்து டாலர் தருகிறார். உணவகத்தில் ('கேஃபிடேரியா') சர்வர், மணியன் ரைஸ் என்று கேட்டதும் முதலில் ஒரு சிறுகரண்டி அளவில் தந்தவர், இவர் இந்தியர் என்று தெரிந்துகொண்டதும் 'உங்கள் நாட்டில் அரிசியே கிடைப்பதில்லையாமே!' என்று கேட்டு இலவசமாகச் சோறு போடுகிறார்!
மணியன் இம்மாதிரி நிகழ்ச்சிகளால் நொந்து போகிறார், பாவம். அங்கு பல பத்திரிகை ஆசிரியர்களிடம் 'நாங்கள் செய்யும் சாதனைகளைப் பற்றி எழுதக்கூடாதா, எப்பொழுதும் பஞ்சப் பாட்டைத்தான் பாடவேண்டுமா' என்று கேட்டாராம். பலன் செவிடன் காதில் ஊதிய சங்குதான் என்று அலுத்துக்கொள்கிறார். 'இன்னும் அவர்களில் (பத்திரிகைக்காரர்களில்) பலருக்கு மகாராஜாக்களும், பாம்பாட்டிகளும்தான் பாரதம்!' என்று அங்கலாய்க்கிறார். உணவுப் பற்றாக்குறையெல்லாம் தாண்டி இன்று வெகு தூரம் வந்துவிட்டோம் என்றாலும் இன்றும்கூடப் பொதுவாக அமெரிக்க ஊடகங்களில் சுனாமி, உத்தராகண்ட் வெள்ளம் போன்ற பேரழிவுகளின்போதுதானே நம்மைக் கண்டுகொள்கிறார்கள்?
சில அமெரிக்கர்கள் மனைவியையும் ஹனி என்று அழைக்கிறார்கள், காப்பி சாப்பிடச் செல்லும்போது அங்குள்ள பணிப்பெண்ணையும் ஹனி என்று அழைக்கிறார்களே என்று வியக்கிறார் :) ஹிப்பிகள், பீட்னிக்குகள் போன்றவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாக நினைத்து அனுதாபப்படுகிறார். அவர்களுடைய போர் எதிர்ப்பு, உலக சமாதானம் போன்ற கொள்கைகளை மணியன் கண்டுகொள்ளவில்லை.
மற்றொரு சுவையான விஷயம். அங்கு டெலிவிஷனில் ஒரு விவாத நிகழ்ச்சியைப் பார்த்தாராம். விவாதப் பொருள்? 'அந்தரங்கத்தில் தலையீடு'. டெலிபோனில் ஒட்டுக்கேட்பது, ஆட்களை வைத்துக் கண்காணிப்பது என்றெல்லாம் சர்க்கார் தனி மனிதன் விஷயத்தில் தலையிடுகிறது; அதிலும் நவீன கருவிகள் நிறைய வைத்திருக்கும் அமெரிக்க நாட்டில், தனி மனிதனின் அந்தரங்க சுதந்திரம் பறிபோய்விட்டது' என்று பலர் வாதாடினார்களாம் (மிஸ்டர் ஸ்னோடென், கேட்டுக்கொண்டீர்களா? நீங்கள் பிறக்கும் முன்பிருந்தே அமெரிக்கா இப்படித்தான் - அந்த நாடு திருந்துவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை!). பார்வையாளர்கள் தொலைபேசி மூலம் நிபுணர்களிடம் கேள்வி கேட்கும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து வியக்கிறார் மணியன். இந்த டெலிவிஷன் என்னும் மகத்தான சாதனம் என்று நம் நாட்டிற்கு வரப்போகிறதோ என்று ஏங்குகிறார். ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானா ஒரு டிவி பேட்டியில் 'இந்தியாவில் மிகவும் வருந்தத்தக்க நிலையில் ஒரு வாரத்தைக் கழித்தேன்' என்று கூறினாராம். என்ன நடந்ததோ?
சிகாகோ நகரத்தில் (பிற்காலத்தில் நோபல் பரிசு பெற்ற) விஞ்ஞானி சந்திரசேகரைச் சந்திக்கிறார். அவரிடம் நம் நாட்டின் திறமைசாலிகள் வெளிநாட்டில் வேலைசெய்வது பற்றிக் கேட்கிறார். சந்திரசேகரின் பதில்: அவர் இங்கிலாந்தில் டாக்டர் பட்டம் பெற்றவுடன் இந்தியாவில் வேலை பார்க்கவேண்டும் என்று திருப்பி வந்தாராம். ஒரு வருடம் காத்திருந்தும் ஒரு ரீடர் வேலை கூடக் கிடைக்கவில்லையாம். பிறகுதான் சிகாகோ பல்கலை உதவிப் பேராசிரியர் வேலைக்கு அழைக்க, அங்கு சென்றாராம். இந்தியாவில் திறமைக்கு மதிப்பு இல்லை, பல்கலைக்கழகங்களில் சிவப்பு நாடா முறை அதிகம் என்று குறைப்பட்டுக் கொள்கிறார் சந்திரசேகர். இந்நிலை இன்றுகூடப் பெரிதும் மாறிவிடவில்லையே :(
அமெரிக்காவில் எஸ்.டி.டி. வசதி, உணவகங்களில் இருக்கும் பில்லிங் மெஷின், வங்கிகளில் கம்ப்யூட்டர் உதவியுடன் ஒரு நிமிடத்தில் செக்குக்குப் பணம் தருவது, டிராஃபிக் நிலவரங்களை உடனுக்குடன் ரேடியோவில் அறிவிப்தைக் கேட்டபடிக் கார் ஓட்டுவது போன்றவை மணியனை ஆச்சரியப்படுத்துகின்றன. இதேபோல ஜப்பானில் கிராமத்தில்கூட வீட்டுக்கு வீடு டிவி, பைக், வாஷிங்மெஷின் ஆகியவை இருக்கின்றன என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்.
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடிப்புக்குத் தப்பிய ஒருவரைச் சந்திக்கிறார். அணுகுண்டு விழுந்தபோது சத்தம் எதுவும் கேட்கவில்லையாம்! வழக்கமான குண்டு வீச்சுகளுக்குப் பழக்கப்பட்ட மக்கள், கட்டிடங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிவதைப் பார்த்து, விமானங்கள் மூலம் பெட்ரோலை ஊர் முழுவதும் ஊற்றித் தீவைத்துவிட்டார்கள் என்றுதான் முதலில் நினைத்தார்களாம்.
வழக்கம்போல ஜப்பானியர்கள் தேனீ போலச் சுறுசுறுப்பானவர்கள், கடும் உழைப்பாளிகள் என்று மணியனும் தன் பங்குக்குச் சொல்கிறார். கியோட்டோ நகரம், நிறையக் கோயில்களும் அங்காடிகளுமாக மணியனுக்கு மதுரை நகரை நினைவுபடுத்தியதாம்.
இந்தப் பயணங்களில் இங்கிலாந்தில் மாஸே ஃபெர்குசன், அமெரிக்காவில் ஃபோர்டு, ஜப்பானில் தோஷிபா என்று சில தொழிற்சாலை விசிட்களும் உண்டு. டைம், பஞ்ச், நேஷனல் ஜியாக்ரபிக், ரீடர்ஸ் டைஜஸ்ட் (அது இல்லாமலா!) பத்திரிகைகள், பிபிசி, ஜப்பான் என்.எச்.கே., அமெரிக்காவில் ஒரு வானொலி நிலையம் என்று சில ஊடக நிறுவனங்களையும் சென்று பார்த்திருக்கிறார்.
மணியன் பெரும்பாலும் தான் செல்லும் நாடுகளிலுள்ள புகழ்பெற்ற இடங்களை ஏதோ போனேன், பார்த்தேன் என்ற அளவில் கடந்துசென்று விடுகிறார். சொல்லப்போனால் லண்டன் மாநகரைப் பற்றி அதிகமாகப் படித்து, புகைப்படங்களில் பார்த்துவிட்டதால் அங்கு எந்த இடமும் தன்னைப் பெரிதாகக் கவரவில்லை என்று ஒரே வரியில் முடித்துக்கொள்கிறார்! அதே சமயம், அந்தந்த ஊர்களில் டாக்ஸி டிரைவர், ஆலைத்தொழிலாளி தொடங்கிக் கல்லூரிப் பேராசிரியர் வரை பலதரப்பட்ட சாதாரண மனிதர்களுடன் பேசிப்பழகி, அம்மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, அரசியல் பார்வை குறித்த விவரங்களை மிகவும் ஆர்வத்துடன் வாசகர்களுக்குத் தருகிறார். இதுவே இப்புத்தகத்தின் சிறப்பம்சம் எனலாம் (இவற்றில் பல இன்றைய உலகமயத்தில் பரவலாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டன என்றாலும்).
மேலை நாடுகளில் காணப்படும் உழைப்புக்கு மரியாதை (டிக்னிடி ஆஃப் லேபர்) நமது நாட்டுக்கு நூறாண்டு ஆனாலும் வராது என்று பலமுறை மாய்ந்து போகிறார் மணியன். அதேசமயம், பிற நாட்டவரின் டேட்டிங் கலாசாரம், பாலியல் சார்ந்த வெளிப்படையான அணுகுமுறை போன்றவற்றை அவரால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்தமாதிரி விஷயங்களில் இந்தியாவின் பழமைவாத, கட்டுப்பெட்டியான போக்கே மேல் என்று அவர் கருதுவதைக் காண முடிகிறது.
சமயங்களில் மணியன் அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறார் -
ஹவாய் ஹானலூலுவில் பீச்சுக்கு செல்லும்போது கோட்டு, சூட்டு, டை சகிதம் செல்கிறார்! அங்கு எல்லோரும் விநோதமாகப் பார்க்கவே, திரும்பிவந்து அவசரமாக ஒரு ஸ்லாக்கும், வேஷ்டியும் அணிந்துசெல்கிறார்! இப்போதும் பலர் அவரை முறைத்துப் பார்க்கிறார்கள் :)
ஒரு அமெரிக்கப் பெண்ணின் அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்கு விருந்துக்குச் செல்கிறார். அங்கு அந்தப்பெண்ணும் அவரது தங்கையும் ஏதோ இசையை ஒலிக்கவிட்டு நடனமாடுவதுடன், மணியனையும் அதில் கலந்துகொள்ள அழைக்கிறார்கள். மணியன் தனக்கு ஆடத்தெரியாது என்று சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். மணியன், 'எங்கள் நாட்டில் சிறந்த கலைஞர்கள் மேடையில் ஆடுவார்கள், நாங்கள் ரசிப்போம்... குமாரி கமலா ஆடினால் எங்கள் உள்ளம் பரவசமடையும்... உங்கள் நாட்டைப்போல ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆடும் பழக்கம் எங்கள் நாட்டில் கிடையாது… நடனம் எங்கள் நாட்டில் பெரும் கலையாக மதிக்கப்படுகிறது...' என்று நீண்ட விளக்கம் தருகிறார் :)
ஜப்பானில், அந்த நாட்டுப் பாரம்பரிய பாணியிலான ஓட்டலில் தங்குகிறார். கட்டில் இல்லாத அந்த அறைக்கு இரண்டு பணிப்பெண்கள் ஒரு படுக்கையைச் சுமந்து வர, மணியனுக்கு ஒரு கணம் தூக்கிவாரிப் போடுகிறது:) பிரான்சில் ஸ்ட்ரிப் டீஸ், அமெரிக்காவில் ப்ளே பாய் கிளப், ஜப்பானில் நைட் கிளப் போன்ற பலான இடங்கள் எதையும் மணியன் விட்டுவைக்கவில்லை என்றாலும் அங்கெல்லாம் அவருக்குள் இருக்கும் கலாசாரக் காவலன் அவரை எதையும் ரசிக்கவிடுவதில்லை :)
மொத்தத்தில் மணியன் எதிர்பார்த்த மற்றும் எதிர்பார்த்திருக்க முடியாத விதங்களில் இன்றைய வாசகர்களுக்குச் சிலபல சுவாரசியங்களைத் தருகிறது இதயம் பேசுகிறது. கடைசியாகப் புத்தகத்திலிருந்து சில துளிகள்--
(குறிப்பு: வாழ்க்கை வரலாறு எழுதும் முறை பற்றி மணியன் ஒரு அமெரிக்கருடன் நடத்திய உரையாடல் சுவாரசியமானது. படிக்க விரும்புபவர்கள் விமலாதித்த மாமல்லனுக்கு நான் எழுதிய இந்தக் கடிதத்தில் அதை முழுமையாகப் படிக்கலாம். மாமல்லனின் சூடான எதிர்வினையும் பதிவில் உண்டு!)
இதயம் பேசுகிறது
மணியன்.
முதல் பதிப்பு ஆகஸட் 1968. பக்கங்கள் 336
வாசன் என்டர்பிரைஸஸ் வெளியீடு
(விற்பனை ஆனந்த விகடன்)
(ஆம்னிபஸ் தளத்தில் 27 ஜூன் 2013 அன்று வெளியானது.)

- கெய்ரோ மியூசியத்தில் ஒரு கைடு வரலாறு என்ற பெயரில் இஷ்டத்துக்கு ரீல் சுற்றுகிறார். இதே மாதிரிக் கதைகளை நம் மகாபலிபுர கைடுகளிடமும் நீங்கள் கேட்டிருக்கலாம் என்கிறார் மணியன்.
- ரோம், நமது திருப்பதியைப்போல ஏழுமலை மீது அமைந்துள்ளது.
- ஹாலிவுட்டில் உண்மையில் இருப்பவை இரண்டு ஸ்டுடியோக்கள் மட்டுமே. மற்றவை அப்பகுதிக்கு வெளியில்தான் அமைந்துள்ளன.
- 1958ல் அமெரிக்காவில் 90 கோடிப் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கரும் 5 புத்தகங்களை வாங்கியிருக்கிறார்.
- அமெரிக்க ஆங்கிலத்தில் 'கிவ் மீ எ பிட் ஆஃப் யுவர் ஸ்கின்' என்றால் 'கையைக் கொடுங்கள்' (குலுக்குவதற்கு) என்று அர்த்தமாம்.
- ஸ்டோகி கார்மைகேல் என்ற கருப்பு அமெரிக்க அரசியல் தலைவர் மிகவும் பிரபலமடைந்து வருகிறார். (பின்னாட்களில் என்ன ஆனார்?)
- ஹோமி பாபா இறந்த பிறகு அணுசக்தித் துறைத் தலைமைப்பதவிக்கு சந்திரசேகரை அழைத்தார்களாம்! அது தனது துறை அல்ல என்று மறுத்துவிட்டாராம் (அஸ்ட்ரோ பிசிஸிஸ்ட்டான) அவர்.
- லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் மணியன் 'விகடன் இருக்கிறதா?' என்று கேட்க, சில நிமிடங்களில் அவர் கையில் தருகிறார்கள்!
- அமெரிக்காவில் தியாகராஜன் என்ற மாணவர் மணியனைச் சந்திக்கிறார். அவரது குடும்பம் பற்றிக் குடைந்து குடைந்து கேட்டபிறகே தமிழ்நாட்டின் ஒரு பிரபல தொழிற்குடும்பத்து வாரிசு அவர் (கருமுத்து தியாகராஜன் செட்டியார் பேரன்) என்று தெரியவருகிறது.
- சில்க் புடவைகள், நல்முத்துகள், காமெரா பிளாஷ், ஸீகோ கடிகாரம், டேப் ரெகார்டர்—மணியனின் மனைவி, தம்பி மற்றும் நண்பர்கள் அவரை ஜப்பானிலிருந்து வாங்கிவரச் சொன்ன ஐட்டங்கள்.
- (எம்.எஸ்.) உதயமூர்த்தி அமெரிக்க, இந்திய நிலைமைகளை ஒப்பிட்டு எழுதிய நீண்ட வாசகர் கடிதம் ஒன்று புத்தகத்தின் இடையே முழுமையாகத் தரப்பட்டுள்ளது.