Sunday 9 August 2009

சிறுகதைப்போட்டியில் பரிசு பெறாதவர்களுக்கு சுஜாதா தரும் பதில்!

ஒரு சமயம், பெங்களூருக்கு என் வீட்டிற்கு ஒருத்தர் வந்திருந்தார். காலேஜில் படிக்கிறாராம். அனுப்பின கதைகள் எல்லாம் திரும்பி வந்துடுச்சு, இதைப் படிச்சுப்பாருங்கன்னு சொல்லி இருபத்தைஞ்சு சிறுகதைகளைக் கொடுத்தார்.

“என் கதைகள்ளே என்ன குறை இருக்குன்னே தெரியலை; ரொம்ப வருத்தமா இருக்கு சார். ஒண்ணுமே ஓடலை. தற்கொலை கூடப்பண்ணிக்கலாமான்னு இருக்கு”ன்னு சொல்லி ஓவென்று அழுதேவிட்டார்.

அவைகளை வாங்கிப் பார்த்தேன். காதல், ஹியூமர், சஸ்பென்ஸ் என்று பலவிதமாகவும் எழுதியிருந்தார். ஆனா சில நேச்சுரல் விஷயங்களை விட்டிருந்தார். “எந்தக் காலேஜில் படிக்கிறீர்கள்?” என்றேன். சொன்னார்.

“காலேஜ் நுழையும் வழியில் என்ன இருக்கிறது?”

கொஞ்ச நேரம் விழித்தார். “என்ன ஒரு பெரிய மரம்.”

“என்ன மரம்?”

“ஏதோ ஒரு மரம். சரியாத் தெரியலை”

“அதுல பூ இருக்கா, காய் இருக்கா?”

“அதெல்லாம் கவனிக்கலை சார்!”

“நீங்கள் தினம் புழங்கற இடம். அங்கே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கற ஆர்வம் உங்களுக்கு இல்ல. தெரிஞ்சுக்க முயற்சியும் செய்யலே. அப்புறம் எப்படி எழுத்துல வெற்றி பெற முடியும் உங்களால?” என்றேன்.

காலேஜ் காதலைப் பற்றி எழுதுகிறவர், அதைப்பற்றி வர்ணிக்க வேண்டாமா? சூழ்நிலையை விளக்க வேன்டாமா?

எழுத்தாளனோட பார்வை எப்போதும் வித்தியாசமாகவே இருக்கணும். பார்க்கிற ஒவ்வொரு பொருளையும், நிகழ்ச்சியையும் அப்படியே கற்பனையில் வர்ணிக்கப் பார்க்கணும். உதாரணத்திற்குத் தெருவுல ஒரு காட்சி நடக்குது.

பெரிய யானை ஒண்ணு நிக்கிறது. அதைச் சின்ன மனிதன் ஒருவன் அடிக்கிறான். அதுவும் பயப்படுது, அவன் சொல்படி நடக்குது. இதைப் பார்க்கிறபோது என்ன தோன்றும் நமக்கு?
இதுல பெரிசா என்ன இர்க்கும்பாங்க.

அதைப்பார்த்தா எனக்கு என்ன தோனும் தெரியுமா?

‘பெரிய யானைதான் மக்கள். பாகன்தான் அரசியல்வாதி. யானைங்கிற மக்களைப் பாகன்கிற அரசியல்வாதி ஆட்டிப் படைக்கிறான். யானை நினைச்சாப் பாகனைத் தூக்கி எறிஞ்சுடலாம், அதேபோல மக்கள் நினைச்சாலும் அரசியல்வாதியைத் தூக்கி எறிஞ்சுடலாம். ஆனா பயந்து பயந்து யானையும் அப்படிச் செய்யறதில்லை, மக்களும் செய்யறதில்லை’ இப்படித்தான் நான் கம்பேர் செய்வேன்.

கதைங்கறதே பொதுவா அனுபவம்தான். அனுபவத்தை அடிப்படையா வெச்சுத்தான் கதையே அமையுது. அதுக்காகக் கொலைக்கதையெல்லாம் எழுதறிங்களே அதுவும் அப்படித்தானான்னு கேக்கக் கூடாது! அது வேற விஷயம்.

************
இன்னொன்று, தொடர்கதை எழுதுறதை விட, சிறுகதை எழுதறதுதான் கஷ்டம்பேன். சிறுகதையிலே சொல்லவர விஷயத்தைச் சிக்கனமா, சுருக்கமா அதே சமயத்துல விளக்கமாச் சொல்லியாகணும். அதுதான் சிரமம். சிறுகதைன்னா நான்கைந்து முறை எழுதியே பிறகு அனுப்பறேன்.

************
கதையைப் பார்த்து எவரும் செலக்ட் செய்யறதில்லே, பெயரை வைத்துத்தான்னு எல்லோரிடமும் ஒரு அபிப்ராயம் இருக்கு. அது தவறு.

*************
...உடனே எனக்கு வேகம் வந்தது. அந்த வேகத்திலேயே எழுதித் தள்ளினேன். ஆரம்பத்துல பத்திரிகைகளும் வேகமாகவே அதையெல்லாம் தள்ளி விட்டுட்டாங்க. அப்புறமா படிப்படியாத்தான் பிரசுரமாச்சு.

***************
எழுதற ஒவ்வொரு விஷயத்தையும் எளிமையா, அதே சமயத்துல சுவையா எழுதனும். படிக்கிறவங்க அதோட ஒன்றிப்போகணும்.
நாம எழுதற விஷயம் படிக்கிறவங்க அனுபவத்தோட ஐக்கியமாப் போகணும். அப்பதான் எழுத்தும் வெற்றி பெறுகிறது, எழுத்தாளனும் வெற்றி பெறுகிறான். வீணா நாமும் குழம்பி, வாசகர்களையும் குழப்பறதுல அர்த்தமே இல்லை.

*************
பிறர் படிக்கவே நாம் எழுதுகிறோம். பிறர் படிக்கும்படியாகவும் எழுத வேண்டும்.

************
நல்ல தரமான கதைகள் பிரசுரமாகிவிடும். ஒருவேளை தப்பான பத்திரிகைக்கு அனுப்பினால் அது திரும்பி வரலாம். சங்கராச்சாரியார் பற்றிக் குமுத்த்திற்கு எழுதி அனுப்பினால் அவர்கள் பிரசுரிக்காமல் இருக்கலாம். கலைமகளுக்கு அனுப்பினால் அது வெளிவரலாம்.
கதையை எழுதியவுடன் ஒருவரிடம் வாசித்து, அபிப்பிராயம் கேட்க வேண்டும். நான் எனது மனைவியிடம் படித்துக் காண்பிப்பேன். அவள், “என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள்? வெளிவந்த பின்னால் பத்திரிகையில் பார்த்துக்கொள்கிறேன்...” என்று சொன்னாலும் நான் விடுவதில்லை.

என்ன சொல்கிறோம் என்பதைவிட, ஒரு எழுத்தாளனுக்கு எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம்.

அவசர கோலத்தில் கதை எழுதவே கூடாது. கதை எழுதி முடித்துவிட்டு பத்து நாட்கள் கழித்து, படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் பார்வை வரும்.
எழுத்தாளனுக்கு ஞாபகம் மிக அவசியம். அவன் நிறைய நிறைய படிக்க வேண்டும்.

*************
கைதேர்ந்த ஒரு எழுத்தாளரே தான் எழுதியதை நான்கைந்து முறை திருத்தி எழுதுகிறார், மனைவியிடம் படித்துக்காட்டி அபிப்ராயம் கேட்கிறார், பத்து நாட்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்க்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! அதுவும் தன்னுடைய கதைகளும் ஆரம்பத்தில் பிரசுரமாகாமல் திருப்பி அனுப்பப் பட்டதாகவும் கூறுகிறார்.

பரிசு கிடைக்காமல் புலம்புபவர்கள், சுஜாதாவிடம் அழுத கல்லூரி மாணவன் மாதிரிதான் நடந்துக்கிறமான்னு பார்த்துக்கங்க!

நன்றி- விசா ப்ப்ளிகேஷன்ஸ்

6 comments:

iniyavan said...

சுஜாதா கூறியது 100க்கு 100 உண்மை. சரியான நேரத்தில் பதிவிட்டதற்கு நன்றி.

மனசு லேசனாதாக உணர்கிறேன்.

துபாய் ராஜா said...

//அவசர கோலத்தில் கதை எழுதவே கூடாது. கதை எழுதி முடித்துவிட்டு பத்து நாட்கள் கழித்து, படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் பார்வை வரும்.
எழுத்தாளனுக்கு ஞாபகம் மிக அவசியம். அவன் நிறைய நிறைய படிக்க வேண்டும்.//

உண்மையான உண்மை.பதிவிடும் முன் பல முறை படித்துப்பார்த்தால்தான் நமது படைப்பில் உள்ள தவறுகள் நமக்கு தெரியும்.திருத்திக்கொள்ளவும் முடியும்.

வெட்டிப்பயல் said...

This is too bad...

இது பரிசு பெறாதவர்களுக்கு மட்டுமில்லை. பரிசு பெற்றவர்களுக்கு பயனுள்ள பதிவு...

இதனால தான் சுஜாதா எல்லாருக்கும் வாத்தியார் :))

சரவணன் said...

//மனசு லேசனாதாக உணர்கிறேன்.//


உங்களுக்கு இடுகை பிடித்திருந்த்தில் மகிழ்ச்சி உலகநாதன்!

நன்றி துபாய் ராஜா!

//இது பரிசு பெறாதவர்களுக்கு மட்டுமில்லை. பரிசு பெற்றவர்களுக்கு பயனுள்ள பதிவு...//

சரியாச்சொன்னிங்க வெட்டிப்பயல்!

Anonymous said...

Nice & timely :-)

Radhakrishnan said...

மிகவும் அருமையான விசயத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சரவணன். எனது சிறுகதைக்கு தாங்கள் இட்ட பின்னூட்டம் மூலமேத் தங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதை விட ஒரு எழுத்து எப்படி இருக்க வேண்டும் அருமையாக இந்த இடுகையின் மூலம் காட்டிவிட்டீர்கள். அருமை. மிக்க நன்றி.