Wednesday, 12 August 2009

கிச்சடி 12 ஆகஸ்ட் 2009

கதம்பமாகச் சில விஷயங்களை எழுதுவது இப்போது வலையுலகத்தில் பானியாக இருக்கிறது. நானும் அதுபோல முயல்கிறேன்! இதற்கு சாப்பாட்டு ஐட்டத்தின் பெயர் வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. பஞ்சாமிர்தம் தொடங்கிப் பொரிகடலை வரை ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டுவிட எனக்கு மிஞ்சியிருப்பது கிச்சடி!

***************
இடைத்தேர்தல் களைகட்டியுள்ளது. சமீப காலமாக எல்லாத் தேர்தலிலும் எல்லோரும் பேசுகிற விஷயம் பணப் பட்டுவாடா. எனக்குத்தெரிந்தவரை லோக்சபா தேர்தலில் மதுரையில் பண விநியோகம் நடந்தது உண்மையே. எங்கள் வீட்டிற்கும் வந்து, "நாலு ஓட்டுதானே சார்" என்று கேட்டு நான்கு காகித உறைகள் நீட்டப்பட்டன. "சும்மா அண்ணன் குடுத்திருக்காரு, வாங்கிக்கங்க" என்று விளக்கம். வாங்க மறுத்துத் திருப்பி அனுப்பினோம். தேர்தல் முடிந்த பிறகு பெண்களுக்கு மட்டும் சேலை விநியோகமும் நடந்தது. படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட ஏன் பணத்தை விடுவதில்லை என்பது பு.த.செ.வி. சமாச்சாரம். இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாததால் பணம் கொடுக்காமல் விட்டு, எதிர்பார்த்த மக்கள் ஏமாந்து, கோபத்தில் தே.மு.தி.க –வுக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்களா என்பதெல்லாம் 21 ஆம் தேதி தெரிந்துவிடும்.

*****************
இணையமெல்லாம் வருவதற்கு முன் நானே என் சொந்த முயற்சியால் சிம்மக்கல் நூல் நிலையத்தில் கண்டுபிடித்த ஒரு நல்ல எழுத்தாளர் எட் மெக்பெய்ன். நம்ம ஊர் சுஜாதாவின் சமகாலத்தைச் சேர்ந்த அமெரிக்க துப்பறியும் எழுத்தாளர். நியூ யார்க் நகரத்தின் 87 வது பேட்டைதான் இவரது முக்கால்வாசிக் கதைகளின் களன். அந்தப் பேட்டை போலீஸ் நிலையத்தைவைத்து போலீஸ் நடைமுறைகளை அசத்தலாக எழுதுவார். போலீஸ்காரர்களின் துணிச்சல், பயம், வெற்றி, தோல்வி, போட்டி, நட்பு என எல்லாமே கொலைக்கதையின் ஊடாக நம் கண் முன்னால் விரியும். 87 வது பேட்டை போலீஸ்காரர்கள் மாமூல் வாங்கியதாகத் தெரியவில்லை : -) நான் கடைசியாகப்படித்த மெக்பெய்ன் நாவல் பற்றி அடுத்த கிச்சடியில் சொல்கிறேன்.

****************
இப்பொழுது ஒரு ஆங்கில – தமிழ் அகராதியை காப்பி எடிட்டிங் செய்துவருகிறேன். (காப்பி எடிட்டிங் - தமிழில் இதற்கு இணையான சொல் கிடையாது; காரணம் தமிழ்கூறு நல்லுலகில் புத்தகங்கள் காப்பி எடிட்டிங்கெல்லாம் செய்யப்படுவதில்லை!) சுருக்கமாகச் சொன்னால் மேலே உள்ள பத்தியில் 87 வது என்று ஓரிடத்திலும் 87 ஆவது என்று வேறோர் இடத்திலும் எழுதாமல் கவனித்துக்கொள்வதே காப்பி எடிட்டிங் எனலாம்.

காபிக்கு இரண்டு வித ஸ்பெல்லிங் போடுகிறார்கள். பீட்ஸாவுக்கு நாலு! பிசா, பீசா, பிஸா, பிஸ்ஸா என்பதாக. (எதுவும் பீட்ஸா என்று இல்லை) தமிழ் வார்த்தைகளே மாற்றி மாற்றி (கருப்பு- கறுப்பு) எழுதப்படும் சூழலில் இது சாதாரணமே. ஆங்கிலத்தில் தலையனை அளவில் ஸ்டைல் மேனுவல்கள் உள்ளன. தமிழில் அடையாளம் மற்றும் இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவணம் இணைந்து வெளியிட்ட தமிழ் நடைக் கையேடு ஒரு நல்ல ஆரம்பம். வார்த்தைகளைச் சேர்த்து எழுதுவதா பிரித்து எழுதுவதா (மேல்+கூரை என்பதை மேற்கூரை என்று சேர்த்து எழுதுங்கள்; ஆனால் பொன் + தகடு என்பதைப் பொற்றகடு ஆக்க வேண்டாமாம்), ஒற்று மிகும்- மிகா இடங்கள் எல்லாவற்றையும் பட்டியல் போட்டுத் தருகிறார்கள். பதிவர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய இந்தப் புத்தகம் தியாகராய நகர் நியு புக் லேண்டில் கிடைக்கும்.

***************
சுஜாதா எழுதிய பாலசந்தர் மகள் கல்யாணம் பற்றிய பதிவில் (இது வேற பதிவு!) கடைசிப்பகுதி:

பக்கத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவருடன் சம்பாஷணைகள்:
அவர்- இடது பக்கம் எதுத்தாப்பல பச்சைப்புடவை உடுத்தியிருக்காங்களே, சீதா தானே?
நான்- ஆமாங்க (சீதா யார்?) வலப்பக்கத்தில் நீலமா சட்டை போட்டுக்கிட்டு ஸ்டைலா அது யாருங்க?
அவர்- அது எம் பொண்ணுங்க. ஆமா, நீங்க யாருங்க?
நான்- நான் வந்து சுஜாதாங்க...
அவர்- ஓ அப்படியா? ரொம்ப சந்தோஷம். 'அவள் ஒரு தொடர்கதை'யில நல்லாவே செய்திருக்கீங்க...
நான்- நீங்க மணமக்களுக்கு உறவினருங்களா?
அவர்- இல்லிங்க.
நான்- தெரிஞ்சவங்களா?
அவர்- இல்லிங்க. சும்மா கேட் கிராஷ் பண்ண வந்தம்!

What a riot!

கிச்சடி பிடிச்சிருந்தா திரட்டிகளில் ஓட்டுப் போட்டுடுங்க...

9 comments:

Anonymous said...

Good. Continue this kichadi

ஜெகநாதன் said...

அட்டகாசமான கிச்சடி! நீங்கள் எடிட் ​செய்து வரும் ஆங்கில-தமிழ் அகராதி பற்றித் தெரிய ஆசை! நீங்கள் அதில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் பயனுள்ளவை! (ஆமா கிச்சடிங்கிறது தமிழா??) நானும் சும்மா ​கேட் கிராஸ் பண்ணலாம்னுதான் இந்த பக்கம் வந்தேன்... இனி டெய்லியும் வரலாம் போல!

சரவணன் said...

நன்றி ஜெகநாதன். அந்த அகராதி இன்னும் தயாரிப்பு நிலையில் இருப்பதால் அது பற்றி மேல் விவரங்கள் தர இயலவில்லை! கிச்சடி தமிழ்னுதான் நான் நெனச்சுக்கிட்டிருக்கேன்... இல்லையா?! நீங்க கேட் கிராஷ் பண்ணலை - விருந்தினர்தான்~ அடித்த தடவையும் கண்டிப்பா வாங்க~ பாராட்டுக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

சரவணன், மிகச் சுவையாக கிண்டியிருக்கிறீர்கள்.

காப்சன் அட்டகாசம்.


துக்ளக் மகேஷ் என்னும் வலைப்பதிவர் கிச்சடி என்ற பெயரில் சில மாதங்களாக தொடர்ந்து எழுதிவருகிறார்.

உணவு ஐட்டத்திற்க்கு பதிலாக வேறொன்றை வைத்துக் கொள்ளலாமே?

அதுவும் நீங்கள் சங்கத்தமிழ் வளர்த்த (அதுவும் தமிழ்சங்கத்திற்க்கு மிக அருகிலேயே இருந்தவர்) இடத்தில் இருந்தவர் என்பதால் கொஞ்சு தமிழில் ஏதாவது புது வார்த்தையை உபயோகப் படுத்தலாமே?

(மதுரைக்காரர் என்பதால் அதிக உரிமை எடுத்துக் கொண்டேன். பரவாயில்லைதானே?)

சங்கா said...

நல்லாருக்குங்க! ஆனா, கிச்சடியையும் ஏற்கெனவே ஒருத்தர் உபயோகிக்கிறாரே! ”பீட்ஸா” எனக்குத் தெரிஞ்சு நீங்க ஒருத்தர்தான் தமிழ் கூறும் நல்லுலகில் சரியா எழுதியிருக்கீங்க! வாழ்த்துகள்!

சரவணன் said...

நன்றி முரளி கண்ணன்.

///துக்ளக் மகேஷ் என்னும் வலைப்பதிவர் கிச்சடி என்ற பெயரில் சில மாதங்களாக தொடர்ந்து எழுதிவருகிறார்.///


ஐயோ! கிச்சடியும் காலியா? வேறு பேர் யோசிக்கிறேன்!

///கொஞ்சு தமிழில்///

க்ரியா அகராதியைப் புரட்டிப் பார்க்கிறேன்!

அப்புறம் உங்களுக்கு இல்லாத உரிமையா... ?!

சரவணன் said...

நன்றி சங்கா! கிச்சடியும் முடிந்து போனது இப்பதான் தெரிஞ்சது :-)

Hindu Marriages In India said...

அருமையான பதிவு

சரவணன் said...

நன்றி Hindu Marriages!