நோய்தீர்த்த அற்புதங்கள்
அந்த இரு “தீர்த்த”ப்புட்டிகளையும் வைதீகமான கிறித்துவரான எங்கள் தாயாரிடம் ஒப்படைப்போம். அவர் பெருமையோடும் உவப்போடும் “தீர்த்தத்தை” எங்கள் அண்டையிலுள்ள “நாயர்”களுக்கு அவர்களது தேவைக்கேற்ப விநியோகம் செய்வார். எங்கள் பாசமிகு அன்னை 1942 ல் மரணிக்கும்வரை அவருக்குத் “தீர்த்தம்” பற்றிய உண்மை சொல்லப்படவில்லை. ஒவ்வொரு முறை நாங்கள் வீட்டுக்கு வரும்போதும் முதல் இரு நாட்களுக்கு எங்கள் அண்டை அயலவர் எங்களைப் பார்த்துவிட்டு அப்படியே தங்கள் பங்கு புனித நீரைப் பெற்றுச் செல்வதற்காக எங்கள் வீட்டுக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.
அடுத்த கோடையிலும் இந்த எத்துவேலை அரங்கேறும். இவ்வாறு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் எங்கள் கிறித்தவ அன்னையாரையும், இந்து அக்கம்பக்கத்தாரையும் கோட்டக்கரா இரயில்வே நிலையத் தண்ணீரைக்கொடுத்து ஏமாற்றிவந்தோம். அதோடு ஒவ்வொரு விடுமுறையின்போதும் போன வருட விநியோகம் ஆற்றிய அற்புத நிவாரணங்களைக் குறித்த எண்ணற்ற கதைகளையும் நாங்கள் பொறுமையாகக் கேட்க வேண்டியிருந்தது.
புதூர் ராமன் நாயர் இப்படிச் சொன்னார்: “இரண்டு ஆண்டுகளாக மருத்துவரிடம் போகவேண்டிய தேவையே ஏற்படவில்லை. போன ஏப்ரலில் என் அம்மாவுக்கு அதிகமான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. நான் சும்மா ஒரு கரண்டி தேனில் இரண்டு சொட்டு “தீர்த்தம்” விட்டுக் கொடுத்தேன். அவ்வளவுதான். மூன்றே மணி நேரத்தில் அவர் உடம்பு முற்றிலும் சரியாகிவிட்டது.”
கிளன்னப்பரம்பில் லஷ்மி அம்மாள் சொன்னார், “என் மகளுக்கு எப்பொழுது சளி அல்லது காய்ச்சல் கண்டாலும் ஒரே ஒரு சொட்டு “தீர்த்தத்தில்” எல்லாம் போய்விடும். மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதிலிருந்து கடுமையான தலைநோவை அனுபவித்து வந்தேன். இப்பொழுதோ தலைநோவு வரப்போகிற மாதிரித் தெரிந்தாலே ஒரு சொட்டு “தீர்த்தத்தை” நெற்றியில் தடவிக்கொள்கிறேன். அதோடு வேதனை தீர்ந்தது. அப்படியே அது வந்தாலும் வலி மிகவும் குறைவே.”
வெட்டவேலில் பாருக்குட்டிக்கு முதல் இரு பிரசவங்களும் சிக்கலாகவும் கஷ்டமாகவும் இருந்தன. மூன்றாவது பிரசவம் எளிதாக முடிந்தது. பிரசவ வலி ஏற்பட்ட உடனே இரண்டு சொட்டுத் “தீர்த்தம்” எடுத்துக்கொண்டதுதான் அவள் செய்தது.
ஒளிப்பிரக்கட்டு நாராயண குருப்பு “தீர்த்தத்தின்” மகிமையை ஆய்வு செய்து நிரூபித்தார். அவரது தோட்டத்தில் இரு ஒட்டு மாங்கன்றுகள் இருந்தன. இரண்டும் அளவிலும் வயதிலும் ஒத்தவை. வறட்சிக்காலத்தில் இரண்டுக்கும் தண்ணீர் ஊற்றினார். ஒரு தடவை ஒரு மரத்துக்கு ஊற்றிய தண்ணீரில் இரண்டு சொட்டுகள் “தீர்த்தம்” கலந்தாராம். பூக்கும் பருவம் வந்தபோது “தீர்த்தம்” கொடுக்கப்பட்ட மரம் பூப்பூக்க, இன்னொரு மரமோ வெறும் இலைகளை மட்டுமே ஈன்றது.
சங்கரோத் பட்சு பிள்ளை ஒரு கரண்டி “தீர்த்தத்தை” வீட்டுக்கிணற்றில் ஊற்றி, குடும்பத்திலிருந்த அனைவருக்கும் நோய்த்தடுப்பு கொடுத்துவிட்டார். இப்படிச்செய்ததில் இருந்து அவ்வீட்டில் யாரும் நோய்வாய்ப் படவில்லை.
இதுபோல மேலும் ஏராளமான கதைகளை இன்னும் கொஞ்சம் தீர்த்தம் கேட்டுவந்த அக்கம் பக்கத்தினர் விவரித்தார்கள்.
விளக்கம்
புனித நீரின் அற்புத சக்திகள் பற்றிய நம்பிக்கை மிகவும் புராதனமானது. பலதரப்பட்ட மனிதர்களும் புனிதமான, தெய்வீகமான பொருட்கள், மனிதர்கள், இடங்கள், நேரங்கள் போன்றவற்றில் மூட நம்பிக்கை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அவை அவர்களது மனதில் ஏற்படுத்தும் உளரீதியான விளைவு தவிர அந்த நம்பிக்கைகள் உண்மையென ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்று சுத்தமாக எதுவும் இல்லை. உளரீதியான தூண்டுதல்களால் நல்ல விளைவுகள் ஏற்படுவது போன்று இத்தகைய நம்பிக்கைகளால் தீய விளைவுகளும் ஏற்படக்கூடும். மனநல மருத்துவமனைகளில் நியூரோசிஸ் வியாதிகளுக்காகச் சிகிச்சை பெறுவோரில் பலர் மூட நம்பிக்கைகளின் இறுதி விளைவுகளே. புனிதத்தை நம்புபவன் நிச்சயம் நிந்தனையால் அவதிப்படவும் செய்வான். உளவியல் கூறுவதன்படி, இப்படியான மனவேதனைகள் எளிதில் எதையும் நம்பிவிடக்கூடிய, மனவலிமை குன்றியவர்களிடம் நியூராட்டிக் வியாதிகளை ஏற்படுத்துகின்றன. என்னிடம் கொண்டுவரப்படும் ஏராளமான நியூராட்டிக் நோயாளிகளின் புள்ளிவிவரப்படி நான் கண்டது என்னவென்றால், ஒரு சமூகத்தில் எந்த அளவுக்கு மூட நம்பிக்கைகள் நிலவுகின்றனவோ அந்த அளவுக்கு அச்சமூகத்தில் நியூராட்டிக் வியாதிகளின் தாக்கமும் அதிகம் காணப்படுகிறது. இதே காரணத்தால், இத்தகைய சமூகங்களிலும்கூட பெண்களே அதிகம் பீடிக்கப்படுகிறார்கள். பெண்கல்வி, பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துவைப்பதைத் தளர்த்துவது ஆகியவற்றால் பெண்களிடையே நியூரோசிஸ் பாதிப்பைப் பெரிதும் குறைக்க முடியும்.
தற்போது கல்வித்துறையில் துணை இயக்குனராக உள்ள ஒருவர், யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் நான் ஆசிரியராக இருந்தபோது உடன் பணியாற்றினார். அவர் ஒருநாள் ஆசிரியர்கள் அறையிலிருந்த கூஜாவிலிருந்து சிறிது தண்ணீர் அருந்தினார். சில மணி நேரம் கழித்து, மற்றொரு ஆசிரியர் அந்தக் கூஜாவில் எஞ்சியிருந்த தண்ணீரை ஒரு கண்ணாடித் தம்ளரில் ஊற்றினார். அப்பொழுது ஒரு சிறிய செத்த பாம்பும் தண்ணீரோடு சேர்ந்து வெளியில் வந்தது. இதைக் கேள்விப்பட்டதும் அந்த இயக்குனருக்குக் கடும் குமட்டல் ஏற்பட்டது. குமட்டல் தொடர்ந்தபடியே இருந்ததால் நாங்கள் அச்சமடைந்தோம். கடைசியில், அவர் தண்ணீர் குடித்தது அதே மேஜையிலிருந்த வேறு ஒரு கூஜாவிலிருந்துதான் என்று அவரை நம்ப வைத்ததும் குமட்டல் நின்றுவிட்டது. அவரும் அதே கூஜாவிலிருந்துதான் தண்ணீர் குடித்திருந்தார் என்றபோதிலும் வேறு ஒன்று என அவரை குருட்டுத்தனமாக நம்ப வைத்ததும் அவரது குமட்டல் தொந்தரவு சரியாய்ப்போனது. இதிலிருந்து, மன ரீதியான காரணங்களால் ஒருவர் நோய்வாய்ப்படவும், மீளவும் முடியும் என்பது விளங்குகிறது. ஆயினும் மனதோடு சம்பந்தப்படாத வியாதிகளை நம்பிக்கையால் குணப்படுத்த முடியுமென்பது அபத்தமே.
கோட்டக்கரா இரயில் நிலையத் தண்ணீர் உண்மையில் எந்த அற்புதத்தையும் எங்கள் ஊரில் நிகழ்த்திவிடவில்லை. எங்கள் அக்கம் பக்கத்தினர் கூறிய சம்பவங்கள் அவர்களது வெகுளித்தனத்தையே காட்டுகின்றன. அவர்கள் குழந்தைப்பிராயத்திலிருந்து “தீர்த்தத்தின்” மகத்துவங்களைப் பற்றி மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தார்கள். தர்க்கரீதியான காரண காரியங்களை விட்டுவிட்டு, அவர்களது உருவேற்றப்பட்ட மனம் அவர்களது குருட்டு நம்பிக்கைக்கேற்ப விளக்கங்களைக் கற்பித்துக் கொண்டது.
பலிகொடுத்தல், காணிக்கைகள், பிரார்த்தனைகள், நல்லாசிகள், வழிபாடுகள், விரதங்கள், ஒப்புக்கொடுத்தல், முடிசூடல், லூர்தின் தண்ணீர், “தீர்த்தம்”, “பிரசாதம்”, சடங்குகள், திருநீறு பூசுவது, “யாங்”, “பூஜை” முதலியவை தருவதாகச் சொல்லப்படும் விளைவுகள் வெளி எதார்த்தத்தோடு தொடர்பற்ற தன்வயமான அனுபவங்களே. அதேபோல சாபம், வசியம், பில்லி சூனியம், துர்சகுனம், கெட்ட வேளை, ஜாதகப்படி நேரம் சரியில்லை என்பன மதிகெட்டவர்களை மட்டுமே பாதிக்கும்.
பள்ளிக்கல்வியும் புத்திசாதுர்யமும் ஏமாளித்தனத்தை மாற்றிவிடுதாகக் கொள்ள முடியாது. சொல்லப்போனால், அதிகமாகப் படித்து உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட இவ்விஷயத்தில் ஏமாளிகளாகவும், சூனியத்தை நாடுபவர்களாகவும் கூட இருக்கிறார்கள். பகுத்தறிவு பூர்வமாகச் சிந்திக்க முடிந்தவர்களால் மட்டுமே ஏமாறாமல் தப்பிக்க முடியும். குருட்டு நம்பிக்கையாளர்கள் பொதுவாக புத்திசாதுர்யத்தையும், கல்வியையும் மீறிக் குருடாக இருப்பவர்களே.
மொழிபெயர்ப்பு: சரவணன்
முதல் பகுதியை வாசிக்க இங்கு சொடுக்குக.
Copyright © 1976 by Dr Abraham. T.Kovoor
from " BEGONE GODMEN " published by Shri Aswin J.Shah
JAICO PUBLISHING HOUSE - Bombay - India