Wednesday 16 April 2008

பாரதி திரைப்படம் செய்திருக்கும் அநீதி!

பாரதியார்,` உலகமே மாயை, எல்லாமே மாயை` என்கிற போலியான தத்துவத்தைக் கடுமையாகச் சாடிவந்தவர். இது பற்றித் தனிக் கட்டுரையே எழுதியுள்ளார். அப்படிப்பட்ட பாரதியாருக்கு பாரதி திரைப்படத்தில், நிற்பதுவே, நடப்பதுவே... பாடலில் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலில் மூன்றாவது சரணத்தில், கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? என்ற அடிக்கு அடுத்து மீண்டும் இரண்டாவது சரணத்தில் வரும்
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ?--இந்த ஞாலமும் பொய்தானோ?
என்ற அடிகளைச் சேர்த்துப் பாடல் முடிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உண்மையில் பாரதியார் எழுதியுள்ளதைப் பார்ப்போம்.

சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?--இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?

வீண்படு பொய்யிலே--நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்--இந்தக் காட்சி நித்தியமாம்.

கடைசி இரு அடிகளைக் குறிப்பாகக் கவனிக்க. கண்ணால் காணும் உலகமே மெய், வெறும் மாயையல்ல என்று இந்தப் பாடலில் அழுத்தம் திருத்தமாகப் பறை சாற்றுகிறார் பாரதியார்.

மூன்றாவது சரணம் பாதி வெட்டப்பட்டும், நான்காவது சரணம் விடப்பட்டும் பாடல் சிதைக்கப்பட்டு, சொல்லும் கருத்துக்கு நேர் எதிராகப் பொருள்படுமாறு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பாடல் படமாக்கப்பட்ட விதத்திலும், பாரதியார் மெய் மறந்து பாட்டுப்பாடியவாறு, கட்டியிருக்கும் வேட்டி இடுப்பிலிருந்து நழுவுவதைக்கூட உணராமல் அருவியில் நீராடுவது போலக் காட்டுவது புறவுலகில் அவர் அக்கரையின்றி இருந்ததாகக் கட்டமைக்கப்படுவதை மேலும் உறுதிசெய்ய உதவுகிறது.

இப்படி ஒருவர் கூறியதை அப்பட்டமாகத் திரித்து, அடியோடு மாற்றிக் காட்டுவது முற்றிலும் நேர்மையற்ற செயல். தேர்ந்த இயக்குனரான ஞான ராஜசேகரன் இப்படிச் செய்திருப்பது அக்கிரமம்!

7 comments:

ROSAVASANTH said...

//ேர்ந்த இயக்குனரான ஞான ராஜசேகரன் இப்படிச் செய்திருப்பது அக்கிரமம்!//

சந்தேகமில்லை!

சரவணன் said...

மறுமொழிக்கு நன்றி rosavasanth.

சரவணன் said...

'சிந்திக்க வேண்டிய கருத்து' என்று ஒரு அன்பர் மறுமொழி இட்டிருந்தார். அதை நான் வெளியிட்டும், ஏனோ இப்பகுதியில் வரவில்லை. மேலும் அவரது பெயரும் சரியாக நினைவில்லை. இரண்டுக்கும் அன்பர் மன்னிக்க. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

இந்த கருத்தில் தான் பாரதியார் பாடலை எழுதியிருக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் தன்னுடைய ஆன்மிகக் கருத்தான மாயாவாதக் கருத்தை வலியுறுத்துகின்ற மாதிரி இப்படி செய்துவிட்டாரோ என்று நினைப்பதுண்டு. இந்தப் பாடலைப் பற்றி முன்பு எழுதிய இடுகைகளின் சுட்டிகள் இங்கே:

http://nambharathi.blogspot.com/2005/11/1.html

http://nambharathi.blogspot.com/2005/11/2.html

யாத்ரீகன் said...

Interesting... !!!! thnx for pointing out saravanan.. couple of days before we were going through this lyrics and wondering on this same topic.. but we didnt knew much that this lyrics was a total contradiction !!!

சரவணன் said...

நன்றி யாத்ரீகன் மற்றும் குமரன்.

குமரன், இசையமைப்பாளர் பாடலை மாற்றியிருந்தாலும், தடுத்திருக்க வேண்டியவர் இயக்குனரே அல்லவா?

மு. மயூரன் said...

மிக நுணுக்கமான, முக்கியமான அவதானம்.
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிகள்.